/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/3_286.jpg)
தகுதித் தேர்வை நடத்துவதற்கான எந்த திறனும், கட்டமைப்பும் இல்லாத ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்படுவது அபத்தம் ஆகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான மாநிலத் தகுதித் தேர்வுகளை நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தகுதித் தேர்வை நடத்துவதற்கான எந்த திறனும், கட்டமைப்பும் இல்லாத ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்படுவது அபத்தம் ஆகும்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கான தகுதி பெறும் தேர்வை தேசிய அளவில் பல்கலைக்கழக மானியக் குழு நடத்தி வருகிறது, மாநில அளவில் இந்தத்தேர்வை பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் சுழற்சி முறையில் நடத்தி வருகின்றன. நடப்பாண்டில் இந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பு திருநெல்வேலி மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த ஜூன் 7,8 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொழில்நுட்பக் காரணங்களைக் காட்டி கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் 150 நாட்களுக்கும் மேலாகி விட்ட நிலையில், அத்தேர்வை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, இப்போது அத்தேர்வை நடத்தும் பொறுப்பையே ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்க விருப்பதாக தெரிவித்துள்ளது. இது அறிவார்ந்த முடிவல்ல.
தகுதித் தேர்வுகளை நடத்துவது மிகவும் சிக்கலானதும், கடினமானதும் ஆகும். அதுமட்டுமின்றி, இது தேர்வாணையம் சார்ந்த பணி அல்ல, மாறாக கல்வி சார்ந்த பணி ஆகும். எடுத்துக்காட்டாக, தேசிய அளவில் தகுதித் தேர்வை நடத்தும் பல்கலைக்கழக மானியக்குழு மொத்தம் 103 பாடங்களுக்கு தகுதித் தேர்வுகளை நடத்துகிறது. அவற்றில் தமிழ்நாட்டுக்கு பொருந்தாத சில மொழிப் பாடங்கள், தத்துவபியல் பாடங்களைத் தவிர்த்துவிட்டு பாரத்தால் குறைந்தது 80 பாடங்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும். அவை அனைத்துக்கும் பாடத்திட்டம், குறிப்பு நூல்களின் பட்டியல், வினாத்தாள்கள் ஆகியவற்றை தயாரிப்பதற்கான கட்டமைப்பின் சிறு பகுதி கூட ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இல்லை.
2024 ஆம் ஆண்டில் 5 வகையான ஆசிரியர் போட்டித் தேர்வுகளையும், ஓர் ஆசிரியர் தகுதித் தேர்வையும், ஒரு முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகைக்கான தகுதித்தேர்வையும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் பணிகளுக்கான போட்டித்தேர்வைத் தவிர மீதமுள்ள 5 தேர்வுகளை வாரியத்தால் நடத்தவே முடியவில்லை; நடத்தப்பட்ட தேர்வுகளிலும் இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படவில்லை; பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த அடிப்படைப் பணிகளைச் செய்வதற்கே தடுமாறும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் மாநிலத் தகுதித் தேர்வுகளை நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டால், தேவையற்ற குழப்பங்களும், காலதாமதங்களும் தான் ஏற்படும்.
மாநிலத் தகுதித் தேர்வை மனோண்மணியம் சுந்ததரனார் பல்கலைக்கழகத்தால் நடத்த முடியவில்லை என்றால், அதற்கான காரணங்கள் குறித்து அப்பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்க வேண்டும். அதை அரசு செய்யவில்லை. மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் தகுதித் தேர்வுகளை நடத்த முடியவில்லை என்றால், அதில் அனுபவம் பெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழகத்திடமோ, அல்லது சென்னை பல்கலைக்கழகத்திடமோ இந்தப் பணியை ஒப்படைக்கலாம். அதற்கு மாறாக, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இந்தப் பணியை ஒப்படைப்பது குருவி தலையில் பனங்காயை வைப்பதற்கு ஒப்பான செயலாகும். ஒருவேளை ஆசிரியர் தேர்வு வாரியமே இந்தத் தேர்வை நடத்தினாலும் கூட, அதற்குத் தேவையான கட்டமைப்பையும், மனிதவளத்தையும் பல்கலைக்கழகங்களிடமிருந்து தான் பெற வேண்டும். பல்கலைக்கழகங்களிடமே இந்த பொறுப்பை ஒப்படைக்காமல், அவற்றின் மனிதவளத்தைப் பெற்று ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தத் தேர்வை நடத்தும் என்பது கொக்கு தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிப்பதைப் போன்ற அபத்தமான செயல் என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் மாநிலத் தகுதித் தேர்வு கடைசியாக 2018 ஆம் ஆண்டு அன்னை தெரசா பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்டது. அதன்பின் கடந்த 7 ஆண்டிகளாக மாநிலத் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட வில்லை. அதைக் காரணம் காட்டி கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடத்தப்படவிருந்த உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தமிழக அரசு திட்டமிட்டுள்ளவாறு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாகத் தான் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றால் இன்னும் ஓராண்டுக்கு அத்தேர்வு நடத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை. அதனால், உதவிப் பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வுகளும், நியமனமும் தாமதமாகும். இது உயர்கல்வியைக் கடுமையாக பாதிக்கும். ஒருவேளை இத்தகைய சூழல் ஏற்படுவதைத் தான் அரசு விரும்புகிறதா? எனத் தெரியவில்லை.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் தகுதித் தேர்வை தமிழ்நாடு உயர்கல்வி மாமன்றத்தின் உறுப்பினர்,செயலாளர் கண்காணிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இ.ஆ.ப. அதிகாரி ஒருவர் தலைமையிலான அமைப்பால் நடத்தப்படும் தேர்வை இணைப் பேராசிரியர் நிலையிலான உறுப்பினர், செயலாளர் கண்காணித்தால் அதில் தேவையற்ற சிக்கல்கலும், மோதலும் ஏற்படும். இவை எதுவும் தகுதித் தேர்வு நியாயமாகவும், சிறப்பாகவும் நடைபெறுவதற்கு எந்த வகையிலும் உதவி செய்யாது.
இவை அனைத்துக்கும் மேலாக, மாநிலத் தகுதித் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துவதற்கு பல்கலைக்கழக மானியக் குழு ஒப்புதல் அளிக்காது. எனவே, பயனற்ற முயற்சிகளில் ஈடுபடுவதை விடுத்து பல்கலைக்கழகங்கள் வாயிலாக மாநிலத் தகுதித் தேர்வை தமிழக அரசு நடத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)