Advertisment

“தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர் முதலமைச்சராக மாயாஜாலங்கள் தேவையில்லை” - ராமதாஸ்

Ramadoss said that people of both communities should unite

தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர் முதலமைச்சராக மாயாஜாலங்கள் தேவையில்லை என பாமக நிறுவனர்ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் எந்தச் சூழலிலும், எந்தக் காலத்திலும் தலித் ஒருவர் முதலமைச்சராக முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பதும், அதற்கு பதிலளிக்கும் வகையில் பட்டியலின மக்கள் ஆதரவளித்தால், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் ஆக்கப் படுவார் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறியிருப்பதும், தமிழக அரசியலில் சூடான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சமூகநீதி சார்ந்து இத்தகைய விவாதங்கள் எழுவது வரவேற்கத்தக்கது.

Advertisment

தமிழ்நாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராகவே முடியாது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. மாறாக, அதற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை, அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு பட்டியலின மக்களிடமிருந்தே போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை.

தமிழ்நாட்டில் தனிப்பெரும் சமுதாயம் என்றால் அது வன்னியர்கள் தான். தனிப்பெரும் சமுதாயத் தொகுப்பு என்றால் அது பட்டியலினம் தான். இந்த இரு சமுதாயங்களும் இணைந்தால் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை எளிதில் கைப்பற்ற முடியும். அதேபோல், இந்த இரு சமுதாயங்களின் ஆதரவு இல்லாமல் தமிழ்நாட்டில் எவரும் ஆட்சி அமைக்க முடியாது. அவ்வாறு இருக்கும் போது இந்த இரு சமுதாயங்களையும் சேர்ந்தவர்கள் முதலமைச்சராக வர முடியாததற்கு காரணம் என்ன? என்பதை இரு பெரும் சமுதாயங்களும், அவற்றின் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்களும் தான் சிந்திக்க வேண்டும்; விழிப்புணர்வு பெற வேண்டும்

தமிழ்நாட்டில் இரு பெரும் பூர்வகுடிமக்கள் வன்னியர்களும், பட்டியலினத்தவரும் தான். அவர்களை ஒதுக்கி விட்டு அமைக்கப்படும் எந்த ஆட்சியும் தமிழகத்தின் ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கும் பயனளிக்காது. இதைக் கருத்தில் கொண்டு தான் 1989--ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி உருவாக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற தமிழர்கள், அனைத்து நிலை சிறுபான்மையினர் ஆகியோரின் நலனுக்காகவே பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது.

பட்டியலினத்தவரும், வன்னியர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. 7 வயது சிறுவனாக இருக்கும் போதே ஒட்டுமொத்த கிராமத்தின் எதிர்ப்பையும் மீறி எங்கள் ஊர் ஆதிதிராவிடர் காலனியில் இருந்த காந்திஜி ஆதாரப் பள்ளியில்தான் தொடக்கக் கல்வி படித்தேன். பின்னர் நான் இடைநிலைக் கல்வி பயின்றதும் சென்னை இராயபுரம் மீனாட்சி அம்மன் பேட்டையில் பட்டியலின மக்களுக்காகவே நடத்தப்படும் கண்ணப்ப நாயனார் கழக பள்ளியில் தான். அதைத் தொடர்ந்தும் இருதரப்பு ஒற்றுமைக்காக ஏராளமான நடவடிக்கைகளை நான் மேற்கொண்டிருக்கிறேன். இரு சமுதாயங்களும் இணைந்தால் தான் இரு சமூகங்களுமே வளர முடியும் என்பது தான் எனது அசைக்க முடியாத நிலைப்பாடு.

பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற்றால் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக்கப்படுவார் என்று 30 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தேன். 25 ஆண்டுகளுக்கு முன்பே பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியில் அமர வைத்து அழகு பார்த்தேன். பா.ம.கவின் இரண்டாவது மத்திய அமைச்சர் பதவியும் இன்னொரு தலித்துக்குத் தான் வழங்கப்பட்டது. 2016- ஆம் ஆண்டில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், இரு துணை முதலமைச்சர் பதவி உருவாக்கப்படும்; அவற்றில் ஒன்று தலித்துக்கும், இன்னொன்று தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தேன்.

பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக்குவோம் என்ற முழக்கத்துடன் பெரியவர் இளையபெருமாள், பி.வி.கரியமால், சக்திதாசன், டாக்டர். சேப்பன், வை.பாலசுந்தரம், பூவை மூர்த்தி, திருமாவளவன் உள்ளிட்ட பட்டியலினத் தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டேன். ஆனால், அந்த முயற்சி சாத்தியமாகவில்லை. அதற்கு காரணம் மக்கள் அல்ல.... ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்து அனுபவித்து வந்தவர்கள் மேற்கொண்ட பிரித்தாளும் சூழ்ச்சி தான். அதை இந்த இரு சமூகங்களும் புரிந்து கொள்ளாததன் விளைவு தான் பட்டியலினத்தைச் சேர்ந்தவரோ, வன்னியர் இனத்தவரோ இன்று வரை முதலமைச்சராக முடியாதது.

தமிழ்நாட்டின் 57 ஆண்டு திராவிட ஆட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த எவராவது துணை முதலமைச்சராக முடிந்திருக்கிறதா?அதிகாரம் மிக்க அமைச்சர் பொறுப்புகளுக்கு வர முடிந்ததா? ஆதிதிராவிடர் நலத்துறை போன்ற துறைகளை மட்டுமே ஒதுக்கி அவர்களை அமைச்சரவையின் அடிமட்டத்தில் வைத்து தான் அவமதிக்கின்றன திராவிடக் கட்சிகள். இன்றைய திமுக ஆட்சியிலும் இதே நிலை தான் தொடருகிறது.

எனவே தான் சொல்கிறேன், பட்டியலினத்தவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராவது சாத்தியமற்றது அல்ல. நம்மால் முடியாது, நம்மால் முடியாது என்று சதிவலையில் மயங்கி கிடப்பதை விடுத்து, நம்மால் முடியும் என்று பட்டியலினத்தவர் நினைக்க வேண்டும். நாம் வீழ்ந்து கிடக்க வேண்டும் என்று நினைக்கும் சக்திகளை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்; நாம் எழுச்சி பெற வேண்டும் என்று நினைக்கும் சக்திகளை அடையாளம் கண்டு ஆதரிக்க வேண்டும். இந்த விழிப்புணர்வும், சமூக ஒற்றுமையும் ஏற்பட்டால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அந்த மாற்றம் நிகழும் நாள் தான் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக அமையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

pmk Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe