Advertisment

“கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம்” - ராமதாஸ் விமர்சனம்

Ramadoss said Kachchatheevu Thiruvarppu Unforgivable Betrayal

கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம்: அதை நியாயப்படுத்தும் காங்கிரசுடன் திமுக உறவு வைத்திருப்பதன் மர்மம் என்ன? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெலியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, இலங்கைக்கு தாரை வார்த்தது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இதை ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நடத்த நிகழ்வாக கடந்து சென்று விட முடியாது. கச்சத்தீவு அன்று தாரை வார்க்கப்பட்டதன் விளைவுகளை இன்று வரை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த 800-க்கும் கூடுதலான மீனவர்கள் இலங்கைப் படையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், 6184 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கும், 1175 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டதற்கும் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது தான் காரணம். அதற்கு காரணமானவர்களை எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாது.

Advertisment

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதை அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர், தெரிந்தே அனுமதித்தார்.கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கும் முடிவை இந்திரா தலைமையிலான மத்திய அரசு எடுத்த போது கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் தான். கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி இலங்கையிலும், 28 ஆம் தேதி தில்லியிலும் கையெழுத்திடப்பட்டது. அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் இதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

ஆனால், இந்த முடிவை திமுக எதிர்ப்பதாக காட்டிக் கொள்வதற்காக , கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்கு அடுத்த நாள் 29.06.1974 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி பெயருக்கு ஒரு தீர்மானம் நிறைவேற்றினார். அதன்பின் 21.08.1974 அன்று தமிழக சட்டசபையில் கச்சத்தீவு தொடர்பாக மத்திய அரசுக்கு வலிக்காமல் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதை கலைஞர் எதிர்க்காமல் இருந்ததற்கு காரணங்கள் உள்ளன. அப்போதைய கலைஞர் அரசு மீது ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டன. எம்.ஜி.ஆரும், இடதுசாரிகளும் கலைஞருக்கு எதிராக ஊழல் புகார்களை மத்திய அரசிடம் அளித்து அதனடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதனால் கலைஞர் அரசை எந்த நேரமும் கலைத்து விட்டு ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்துவோம் என மத்திய அரசு மிரட்டி வந்தது. அதற்கு பயந்து தான் கலைஞர் மவுனமாக இருந்துவிட்டார் என்று அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவற்றை இப்போதும் மறுக்க முடியாது.

இலங்கைக்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதை காங்கிரஸ் கட்சி இப்போதும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. அது நல்லுணர்வுடன் கூடிய பரிமாற்றம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறுகிறார். ஆனால், கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதை எதிர்ப்பதாக இப்போதும் திமுக கூறுகிறது. இந்த சிக்கலில் திமுக மற்றும் காங்கிரசின் நிலைப்பாடுகள் முரண்பாடுகளின் மூட்டையாகவே உள்ளது.

நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டது, கல்வி உள்ளிட்ட மாநில அரசுப் பட்டியலில் இருந்த அதிகாரங்கள் காங்கிரஸ் அரசால் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது, ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டது என பல விவகாரங்களில் திமுக - காங்கிரசின் நிலைப்பாடுகள் முரண்பாடுகளின் உச்சமாகவே உள்ளன. ஆனாலும், கூடா நட்பு கேடாய் முடியும் என்று விமர்சிக்கப்பட்ட காங்கிரசுடன் திமுக இப்போதும் கூட்டணி வைத்திருப்பதன் மர்மம் என்ன? மு.க.ஸ்டாலின் விளக்குவாரா?”எனக் கேட்டுள்ளார்.

katchatheevu pmk Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe