Skip to main content

காவிரி டெல்டாவில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்! ராமதாஸ்

Published on 12/01/2019 | Edited on 12/01/2019
ramadoss



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா நெல் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு இன்னும் போதிய அளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் காவிரி டெல்டாவில் அறுவடை செய்யப்பட்ட சம்பா நெல்லை விற்க முடியாமல் உழவர்கள் தவித்து வருகின்றனர்.

 

காவிரி ஆற்றில் மேட்டூர் அணையிலிருந்து தாராளமாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் சம்பா பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. கஜா புயல் தாக்கியதில் பல பகுதிகளில் சம்பா நெற்பயிர் சேதமடைந்து விட்ட நிலையில், எஞ்சிய நெற்பயிர்கள் இப்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த நெல்லை கொள்முதல் செய்ய போதிய கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை.

 

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டிருந்த நேரடி  நெல் கொள்முதல் நிலையங்களில் கணிசமானவை கஜா புயலால் சேதமடைந்தன என்பது உண்மை தான். ஆனால், கஜா புயல் தாக்கி இரு மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், அந்த நிலையங்கள் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக அவை இன்னும் சீரமைக்கப்படவில்லை. அவற்றுக்கு மாற்றாக வேறு இடங்களிலும் புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது சுமார் 30 விழுக்காடு குறைவாகவே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன.

 

திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாகக் கூறி நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பதாக உழவர்கள் குற்றஞ்சாற்றி உள்ளனர். வழக்கமாக சம்பா பருவ நெல் ஈரப்பதமாக இருக்காது. ஆனால், இப்போது கடுமையான பனிப்பொழிவு  காணப்படுவதால் தான் நெல் ஓரளவு ஈரப்பதமாக உள்ளது. இது இயற்கையின் தவறே தவிர, உழவர்களின் தவறு அல்ல. அதுமட்டுமின்றி, பனியால் ஏற்படும் ஈரப்பதம் நெல்லின் தரத்தை எவ்வகையிலும் பாதிக்காது.

 

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததாலும், திறக்கப்பட்ட கொள்முதல் நிலையங்களில் முழுமையாக நெல் கொள்முதல் செய்யப்படாததாலும் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  கஜா புயலால் 50 முதல் 60 விழுக்காடு மகசூல் குறைந்துள்ளது.  இத்தகைய சூழலில் அறுவடை செய்யப்பட்ட நெல்லையும் விற்பனை செய்ய முடியாததால் பொங்கல் திருநாளை கொண்டாட பணம் இல்லாமல் உழவர்கள் குடும்பங்கள் தவிக்கின்றன. கொள்முதல் நிலையங்கள் போதிய எண்ணிக்கையில் திறக்கப்படாததை பயன்படுத்திக் கொண்டு, தனியார் வணிகர்கள் உழவர்களிடமிருந்து அடிமாட்டு விலைக்கு நெல்லை வாங்கிக் செல்கின்றனர். கஜா புயலால் ஏற்பட்ட இழப்பு ஒருபுறம் என்றால், தனியார் வணிகர்களிடம் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்ததால் ஏற்பட்ட இழப்பு மறுபுறம் என  முதலீடு செய்த தொகையைக் கூட எடுக்க முடியாத நிலைக்கு டெல்டா உழவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

 

குறுவை அறுவடை காலத்திலும் போதிய எண்ணிக்கையில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப் படாததாலும், ஈரப்பதத்தைக் காரணம் காட்டி நெல்லை வாங்க மறுத்ததாலும் உழவர்கள் பாதிக்கப்பட்டனர். இப்போது மீண்டும் அதேநிலை ஏற்பட்டிருக்கிறது. உழவர்களின் நலனைப் பாதுகாப்பது தான் தங்களின் நோக்கம் என்றும், உழவர்களின் வருவாயை இரு மடங்காக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும்  மத்திய, மாநில அரசுகள் முழக்கம் எழுப்பி வருகின்றன. ஆனால், நடைமுறையில் நெல் சாகுபடிக்காக முதலீடு செய்த தொகையைக் கூட திரும்பப் பெற முடியாத நிலையில் தான் உழவர்கள் தவிக்கின்றனர்.

 

உழவர்களின் துயரைத் துடைக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு. எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உடனடியாக  பணம் வழங்கி உழவர்கள் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட வகை செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்