Ramadoss question When will women  Tamil Nadu be able to move safely

ஏற்காடு அரசு பள்ளியில் 10 மாணவிகளுக்கு பாலியல் கொடுமை: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக நடமாடும் நிலை எப்போது வரும்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயிலும் 10 மாணவிகளை பாலியல் கொடுமை செய்ததாக அதே பள்ளியின் அறிவியல் ஆசிரியர் இளைய கண்ணு என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. அரசு பள்ளிகள் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற இடங்களாக மாறி வருவது கண்டிக்கத்தக்கது.

Advertisment

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர், அதே பள்ளியில் பணியாற்றும் 3 ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதேபோல், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனியார் பள்ளியில் பயின்று வந்த இரு மாணவிகள் அதே பள்ளியின் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதும் பெற்றோர்களிடம் பெரும் அச்சத்தை உருவாக்கியது. அதன்பின் திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருக்கு பேராசிரியரே பாலியல் தொல்லை கொடுத்ததும் அதிர்வலைகளை உருவாக்கியது.

பெண்கள் முன்னேறுவதற்கும், அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறுவதற்கும் கல்வி மிகவும் அவசியம் ஆகும். அதனால் தான் பெற்றோர் தங்களின் பொருளாதார நெருக்கடிகளையும் தாண்டி தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் பெண் தெய்வங்களுக்கு கல்வியையும், பாதுகாப்பையும் வழங்க வேண்டிய அரசு பள்ளிகளும், கல்லூரிகளும் பெண் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மையங்களாக மாறினால், இனிவரும் காலங்களில் பள்ளிகளுக்கு பெண் குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோரே அஞ்சும் நிலை உருவாகி விடும்.

Advertisment

இத்தகைய கொடுமைகள் எல்லாம் தமிழ்நாட்டில் தான் நடைபெறுகின்றனவா? என்ற அதிர்ச்சியும், இந்தக் கொடுமைகள் எப்போது முடிவுக்கு வரும்? என்ற ஏக்கமும், தமிழ்நாட்டில் பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலை எப்போது ஏற்படும் ? என்ற எதிர்பார்ப்பும் தமிழ்நாட்டு மக்களின் மனங்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த வினாக்கள் அனைத்துக்கும் தமிழக அரசு தான் விடையளிக்க வேண்டும்.

மாணவிகள், பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை, விரைவாக பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதன் வாயிலாகவும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதன் வாயிலாகவும் பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.