Skip to main content

கீழடி தமிழர்களின் பெருமிதம்: முந்தைய ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும்! ராமதாஸ்

 

கீழடியில் சர்வதேசத் தரத்தில் அருங்காட்சியகம் அமைத்து இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பார்வைக்கு வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

மதுரை அருகே கீழடியில் நடத்தப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வின் மூலம் தமிழர் நாகரிகம் குறைந்தது 2600 ஆண்டுகள் பழமையானது என நிரூபிக்கப்பட்டிருப்பது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை பெருமிதப்பட வைத்துள்ளது. உலக வரலாற்றையே மாற்றியமைக்கப் போகும் கீழடி அகழாய்வு பணிகளை விரிவுபடுத்துவதும், விரைவுபடுத்துவதும் மத்திய, மாநில அரசுகளின் முதன்மைக் கடமையாகியுள்ளது.

 

Ramadossசிவகங்கை மாவட்டத்தில் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கீழடியில் பழங்கால தமிழர்கள் நாகரிகத்தை வரலாற்றை வெளிக்கொண்டு வரும் நோக்கத்துடன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட அகழாய்வில் தெரியவந்துள்ள முடிவுகளை தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் சென்னையில் நேற்று வெளியிட்டுள்ளார். அந்த ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள திமிலுள்ள காளையின் எலும்புகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பொருட்களில் 6 பொருட்கள் அமெரிக்காவின் மியாமி நகரிலுள்ள பீட்டா பகுப்பாய்வகத்திற்கு அனுப்பப்பட்டு, கரிம ஆய்வு செய்யப்பட்டதில், அவை கி.மு. 6&ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என தெரியவந்துள்ளது. இதன்மூலம் தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
 

சிந்து வெளி நாகரிகத்தில் இருந்தது போலவே திமில் உள்ள காளைகளின் எலும்புகள் கண்டெடுக்கப் பட்டிருப்பதன் மூலம் அந்த நாகரிகத்துடன் தமிழர்களுக்கு உள்ள நெருங்கியத் தொடர்பு; ரோம் நாட்டைச் சேர்ந்த அரிட்டைன் பானை ஓடுகள் கிடைத்திருப்பதால் அக்கால ரோமப் பேரரசுடன் தமிழர்கள் வைத்திருந்த வணிகத் தொடர்பு  ஆகியவை மெய்ப்பிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி வேளாண்மை, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் தமிழர்கள் சிறந்து விளங்கியது, பொருளாதார வளமையுடன் தமிழர்கள் வாழ்ந்தது ஆகியவற்றுக்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. விதவிதமான எழுத்து வடிவங்களை தமிழர்கள் பயன்படுத்தியிருப்பதால் அப்போதே தமிழர்கள் கல்வியில் சிறந்து விளங்கியதும் உறுதியாகிறது. தமிழர்கள் தங்கள் நாகரிகத்தைக் கொண்டாட இதைவிட வேறு காரணம் தேவையில்லை. அவ்வகையில் நான்காவது அகழாய்வு முடிவுகளை விரைவாக வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.


 

அதேநேரத்தில் கீழடியால் கிடைத்த பெருமிதத்தை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. காரணம்... கீழடியில் தமிழக அரசால் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வின் முடிவுகள்  ஓராண்டு காலத்திற்குள் வெளியிடப்பட்டு விட்ட நிலையில், அதே கீழடியில் 2015 முதல் 2017 வரை நடத்தப்பட்ட முதல் 3 கட்ட ஆய்வுகளின் முடிவுகள் இன்று வரை வெளியிடப்படவில்லை என்பது தான். முதல் மூன்று கட்ட ஆய்வுகளில் 5,300க்கும் கூடுதலான பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல பொருட்கள் மியாமி நகரிலுள்ள பீட்டா பகுப்பாய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவை 2,218 ஆண்டுகள் பழமையானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆய்வு குறித்த அறிக்கை இன்று வரை வெளியிடப்படாததால், தமிழர்கள் நாகரிகம் குறித்த உலகமே வியக்கக்கூடிய வகையிலான பல உண்மைகள் மக்களை சென்றடையாமல் அறைகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளன.


 

கீழடி ஆய்வை முன்னின்று நடத்திய வல்லுனர் அமர்நாத் இராமகிருஷ்ணன் திடீரென பணியிடமாற்றம்  செய்யப்பட்டதும், அவர் நடத்திய ஆய்வுகளின் முடிவுகளை எழுதும் பணி இன்னொரு வல்லுனரிடம்  ஒப்படைக்கப்பட்டதும் தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு சில ஆணைகளை பிறப்பித்தும் கூட எந்த பயனும் ஏற்படவில்லை. கீழடியில் இதுவரை நடத்தி முடிக்கப்பட்டுள்ள 4 ஆய்வுகள் மற்றும் இப்போது நடைபெற்று வரும் ஐந்தாவது கட்ட ஆய்விலிருந்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் சேகரிக்கப்பட்டு  தமிழகத்திலும், கர்நாடகத்திலும் பகுதி பகுதியாக கிடக்கின்றன. கீழடியில் சர்வதேச தரத்திலான அருங்காட்சியம் அமைத்து, அதில் இந்த பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்கள் முன்னோர்களின் வாழ்க்கை முறையை பார்த்து மகிழ வாய்ப்பு கிடைக்கும். ஆனால், இந்த விஷயத்தில் மத்திய அரசு ஆர்வம் காட்டாததால் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.
 

கீழடியில் இப்போது நடைபெற்று வரும் ஐந்தாம் கட்ட ஆய்வில் இரட்டை கல் சுவர் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது தமிழர்களின் நாகரிகம், கட்டிடக்கலை போன்றவை குறித்த புதிய உண்மைகளை  வெளிக்கொண்டு வரும். இவை தமிழர்களின் பெருமையை மேலும் உயர்த்த்தும். எனவே, மத்திய அரசிடம் வலியுறுத்தி கீழடியில் நடத்தப்பட்ட முதல் மூன்று கட்ட ஆய்வுகளின் முடிவுகளையும், ஆதிச்சநல்லூரில் 15 ஆண்டுகளுக்கு நடத்தப்பட்டு இன்னும் வெளியிடப்படாமல் உள்ள ஆய்வுகளின் முடிவுகளையும் வெளியிடச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழடியில் சர்வதேசத் தரத்தில் அருங்காட்சியகம் அமைத்து இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பார்வைக்கு வைக்க வேண்டும். அடுத்தடுத்த கட்ட அகழாய்வுகளை தமிழக அரசே மேற்கொள்வதுடன், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட  வரலாற்று உண்மைகளை மாநிலப்பாடத்திட்ட பாடநூலில் ஒரு பாடமாக சேர்க்கவும் முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்