Ramadoss insists We need permanent solution firecracker factory accidents

பட்டாசு ஆலை விபத்துகளுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம் அப்பைநாயக்கன்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்; மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருவோருக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.4 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல. உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் நிதி உதவியும், காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட வேண்டும்.

Advertisment

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகள் மற்றும் வெடி ஆலைகளில் அண்மைக்காலங்களில் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. வாரத்திற்கு ஒரு விபத்து என்பது வாடிக்கையாகிவிட்டது. பட்டாசு ஆலைகள் தொடர்பான பாதுகாப்பு விதிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாதது தான் இத்தகைய விபத்துக்கள் அதிகரிப்பதற்கான காரணம் ஆகும். பட்டாசு ஆலை பாதுகாப்பு விதிகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி இத்தகைய விபத்துகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.