Advertisment

“அன்னைத் தமிழ் ஆட்சி செய்வதை உறுதி செய்ய வேண்டும்” - ராமதாஸ் வலியுறுத்தல்

Ramadoss insists We must ensure that Mother Tamil rules

தமிழ்வழிக் கல்வியும், தமிழ் கட்டாயப்பாடமும் தான் மொழிப்போர் ஈகியருக்குசெலுத்தப்படும் உண்மையான மரியாதை என பாமக நிறுவனர் ராமதாவ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அன்னைத் தமிழுக்காக தங்களின் இன்னுயிரை ஈந்தது உள்ளிட்ட அவர்கள் செய்த ஈகங்களை போற்றி வீரவணக்கம் செலுத்துகிறேன். ஆனால், எந்த நோக்கத்திற்காக அவர்கள் போராடினார்களோ, அதற்கு எதிரான திசையில் ஆட்சியாளர்கள் பயணிப்பதும், அன்னைத் தமிழை அவமதிப்பதும் மொழிப்போர் ஈகியருக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

Advertisment

தமிழ்நாட்டில் இந்தியைத் திணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு எதிராக 1938ஆம் ஆண்டு மற்றும் 1965&ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட போராட்டங்களில் தங்களின் இன்னுயிரை ஈந்த தாலமுத்து, நடராசன், கீழப்பழுவூர் சின்னசாமி, விருகை அரங்கநாதன், கோடம்பாக்கம் சிவலிங்கம், சிதம்பரம் இராஜேந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கான ஈகியர்களின் நினைவாகவே ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி மொழிப்போர் ஈகியர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்னைத் தமிழைக் காக்க இந்த நாளில் உறுதியேற்றுக் கொள்வதை தமிழர்கள் அனைவரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால், அன்னைத் தமிழைக் காப்பதை விடுத்து அதை அழிப்பதற்கான நடவடிக்கைகளைத் தான் தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

உலகில் மொழியும், கலாச்சாரமும் செழித்து வளரும் அனைத்து நாடுகளிலும், அந்த நாட்டின் தாய்மொழியில் தான் கற்பிக்கப்படுகிறது; தாய்மொழியைப் படிப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. உலகளாகிய இந்த இலக்கணத்தைப் பின்பற்றாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் தாய்மொழியைப் படிக்காமல் பட்டம் பெற முடியும் என்ற அவலநிலை நிலவுகிறது. இந்த நிலையை மாற்றுவது கடினமல்ல. தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்தினாலே போதுமானது. ஆனால், அதைக் கூட செய்ய விரும்பாதவர்கள் தான் அரை நூற்றாண்டாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியதைத் தொடர்ந்து மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடச் சட்டம் 09.06.2006-ஆம் நாள் சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. 2006ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஓவ்வொரு வகுப்புக்கு நீட்டிக்கப்பட்டு, பத்தாவது ஆண்டில், அதாவது 2015&16ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்புக்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன்பின் மேலும் பத்தாண்டுகளாகியும் இன்று வரை தமிழ்க் கட்டாயப் பாடமாகவில்லை. உயர்நீதிமன்றத்தில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் கிடந்த இது தொடர்பான வழக்கு, கடந்த 2 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதை விசாரணைக்கு கொண்டு வர அரசு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை.

அதேபோல், தமிழக பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரையிலாவது தமிழை பயிற்று மொழியாக அறிவித்து, சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி 1999ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி முதல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 102 தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்த அப்போதைய கலைஞர் அரசு, ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் பயிற்றுமொழி என்ற அரசாணையை 19.11.1999ல் பிறப்பித்தது. ஆனால், அந்த அரசாணை செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. அதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில், 2000&ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு 25 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என்பதற்காக, பெயர்ப்பலகைகள் தொடர்பாக 1948ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்து 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி 575 எண் கொண்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ‘‘எல்லா நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழில் இருக்க வேண்டும். பிறமொழிகள் பயன்படுத்த வேண்டும் என்றால், ஆங்கில வரிகள் இரண்டாம் இடத்திலும் ஏனைய மொழிகள் அதற்கு அடுத்தும் 5:3:2 என்ற அளவில் இருக்க வேண்டும்’’. ஆனால், 48 ஆண்டுகளாக இந்த அரசாணையும் செயல்படுத்தப்பட வில்லை. பெயர்ப்பலகைகளில் தமிழ் கட்டாயம் என அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்படுவதும், அதற்கு முன்பாகவே அந்த எச்சரிக்கைகளை கண்டு கொள்ள வேண்டாம் என்று வணிக அமைப்புகளுக்கு கமுக்கத் தூது விடப்படுவதும் வாடிக்கையாகி விட்டன. ஆட்சியாளர்களின் தமிழ்ப்பற்று அந்த அளவில் தான் உள்ளது.

தமிழக ஆட்சியாளர்கள் நினைத்தால் அடுத்த ஒரு வாரத்தில், கடைகளின் பெயர்ப்பலகைகளில் அன்னைத் தமிழ் மின்னுவதை உறுதி செய்ய முடியும். உச்சநீதிமன்றத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் வழக்குகளை தூசு தட்டி எடுத்தால் அடுத்த சில மாதங்களில் தமிழ்க் கட்டாயப்பாடமாகவும், பயிற்றுமொழியாகவும் மாறி விடும். ஆனால், ஆட்சியாளர்களுக்கு அதிலெல்லாம் அக்கறை இல்லை. மொழிப்போர் ஈகியர் நாளில் அவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதை மட்டும் சடங்காக வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதுபோன்ற சடங்குகளையும், நாடகங்களையும் மொழிப்போர் ஈகியர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அன்னைத் தமிழ் மீது ஆட்சியாளர்களுக்கு உண்மையாகவே மரியாதை இருந்தால், தமிழைக் கட்டாயப் பாடமாகவும், பயிற்றுமொழியாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துக் கடைகளின் பெயர்ப்பலகைகளையும் அன்னைத் தமிழ் ஆட்சி செய்வதை உறுதி செய்ய வேண்டும். அது தான் தமிழன்னைக்கும், மொழிப்போர் ஈகியர்களுக்கும் செலுத்தப்படும் உண்மையான மரியாதையாக அமையும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Ramadoss Tamilnadu tngovt
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe