Ramadoss insists on transferring the Bennagaram youth case to CBI

தருமபுரி மாவட்ட வனத்துறையினரின் விசாரணையில் இருந்த பென்னாகரம் இளைஞர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரி மாவட்ட வனத்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அம்மாவட்டத்தில் கொங்காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் செந்தில் என்பவர் காட்டிலிருந்து பிணமாக கண்டெடுக்கப்பட்டது குறித்த வழக்கின் விசாரணைக்கு தருமபுரி மாவட்ட காவல்துறை விசாரணையிலிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக காவல்துறை ஆணையிட்டிருக்கிறது. இது போதுமானதல்ல.

Advertisment

யானை கொல்லப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணைக்காக மார்ச் 17-ஆம் தேதி வனத்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட செந்தில், அதன்பின் 17 நாட்கள் கழித்து தான் காட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில், வனத்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட செந்திலைக் காணவில்லை; அவரை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று அவரது மனைவி சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனு மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படிப்பட்ட காவல்துறையின் அங்கமான சிபிசிஐடி, அதன் சகோதர அமைப்பான வனத்துறை மீதான குற்றச்சாட்டு குறித்து நியாயமான விசாரணை நடத்தும் என்ற நம்பிக்கை இல்லை.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் கொடுமைப்படுத்தி தான் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற நம்புவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. மாநில அரசின் விசாரணை அமைப்புகள் மீதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் போது, அதை அந்த அமைப்புகளே விசாரித்தால் நீதி கிடைக்காது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதியை பெற்றுத் தர வேண்டியது தமிழக அரசின் கடமை. அதனால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதை கவுரவப் பிரச்சினையாக தமிழக அரசு எடுத்துக் கொள்ளக்கூடாது.

எனவே. தருமபுரி மாவட்ட வனத்துறையினரின் விசாரணையில் இருந்த பென்னாகரம் இளைஞர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். இளைஞரின் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரண நிதியையும் தமிழக அரசு வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.