ADVERTISEMENT

“1021 மருத்துவர்கள் நியமனத்தில் வாய்ப்பு மறுப்பு” - பாமக நிறுவனர் ராமதாஸ்

05:19 PM Feb 07, 2024 | ArunPrakash

தமிழ் வழிக் கல்வி இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதன் நோக்கத்திற்கு முழுக்க முழுக்க எதிராகத் தமிழக அரசின் நிலைப்பாடு உள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக 1021 மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. மருத்துவர் பணியில் தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதற்கு தமிழக அரசின் சார்பில் கூறப்படும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

ADVERTISEMENT

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக 1021 மருத்துவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அவற்றில் 75 பின்னடைவுப் பணியிடங்கள் தவிர மீதமுள்ள 946 இடங்களில் 20% இடங்கள், அதாவது 178 இடங்கள் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் எவரும் இல்லை என்பதால், அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம், பா.ம.க வலியுறுத்தலையடுத்து, 2010-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால், அச்சட்டத்தின்படி அரசுப் பணிக்கான அடிப்படைத் தகுதி பட்டப்படிப்பு என்றால் அதை மட்டும் தமிழ் வழியில் படித்தால் போதுமானது என்பதால், அவ்வசதியை ஆங்கில வழியில் படித்த பலரும் தவறாக பயன்படுத்தி வந்தனர். அதைத் தடுக்க வேண்டும் என பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இட ஒதுக்கீட்டை வழங்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் 2020 மார்ச் 16 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.

பள்ளிக்கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற விதியை, கள எதார்த்தத்தை கடைப்பிடிக்காமல் பின்பற்றுவது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பு ஆங்கில வழியில் மட்டும் தான் கற்பிக்கப்படுகிறது; தமிழ்வழியில் கற்பிக்கப் படவில்லை. இந்த எதார்த்தத்தை உணராமல், மருத்துவப் படிப்பை தமிழில் படிக்கவில்லை என்று கூறி, மருத்துவர் பணி நியமனத்தில் தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இது நியாயமல்ல.

மருத்துவப் படிப்பு மட்டுமின்றி, பல்வேறு பட்ட மேற்படிப்புகளும் ஆங்கிலத்தில் மட்டும் தான் கற்பிக்கப் படுகின்றன. அதனால், அந்தப் படிப்புகளை கல்வித்தகுதியாகக் கொண்ட பணிகளுக்கும் தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. தமிழக அரசின் இந்த நிலைப்பாடு முற்றிலும் தவறானது. தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதன் நோக்கத்திற்கு முழுக்க முழுக்க எதிரானது.

தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதன் நோக்கமே, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பது தான். மருத்துவப் படிப்பும், பட்ட மேற்படிப்பும் தமிழ் வழியில் இருந்திருந்தால், பள்ளிக்கல்வியை தமிழில் படித்தவர்கள், அவற்றையும் தமிழ்வழியில் தான் படித்திருப்பார்கள். அந்தப் படிப்புகள் தமிழ் வழியில் நடத்தப்படாதது அரசின் பிழை தானே தவிர, அவர்களின் பிழை அல்ல. இத்தகைய சூழலில், எந்த அளவுக்கு தமிழ் வழியில் படிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளனவோ, அந்த அளவுக்கு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டை வழங்குவது தான் சரியானதாகவும், சமூகநீதியாகவும் இருக்கும்.

மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அந்த இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேருபவர்களில் 90% பேர் தமிழ்வழியில் படித்தவர்கள். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். இல்லாத தமிழ்வழி மருத்துவப் படிப்பை தமிழ்வழியில் படிக்கவில்லை என்று கூறி இட ஒதுக்கீட்டை மறுப்பது நீதியாகாது. எனவே, மருத்துவப் படிப்பு, பட்ட மேற்படிப்பு போன்ற ஆங்கில வழியில் மட்டும் கற்பிக்கப்படும் படிப்புகளை கல்வித் தகுதியாகக் கொண்ட பணிகளுக்கு, அப்படிப்புக்கு முந்தைய நிலைவரை உள்ள படிப்புகளை தமிழ் வழியில் படித்திருந்தாலே அவர்களுக்கு தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அதற்கேற்ற வகையில் தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீட்டு சட்டத்தில் அரசு திருத்தம் செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT