Ramadoss condemns arrest of Kanyakumari fishermen by Navy in Sri Lanka

இலங்கை கடற்படையினரின் அட்டகாசத்தை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்ப்பதா? என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் பழுதாகி நின்ற விசைப்படகில் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். அவர்களின் மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. படகு கோளாறால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களைக் கூட இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்வது கண்டிக்கத்தக்கது.

Advertisment

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஒருபோதும் இந்திய - இலங்கை கடல்பகுதியில் மீன்பிடிக்க மாட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் தங்களின் படகில் ஆந்திராவுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஆந்திர மீனவர்கள் என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு செல்லும் வழியில் நெடுந்தீவு அருகில் அவர்களின் படகு பழுதடைந்தது. பழுதடைந்த படகை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது தான் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை காப்பாற்றி உதவி செய்வது தான் கடற்படைகளின் வழக்கமாகும். ஆனால், தமிழர்கள் என்றாலே வெறுப்புடன் அணுகும் இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. மீனவர்கள் எந்த ஊரைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டது தவறு.

Advertisment

இந்திய - இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்தவர்களை இலங்கை படையினர் கைது செய்வதை இந்திய இறையாண்மையின் மீது தொடுக்கப்பட்ட போராகக் கருதி மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது தான் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்ததற்கு காரணம் ஆகும். மீனவர்கள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இனியும் அலட்சியம் காட்டக்கூடாது. இந்த சிக்கலில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசி மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.