Advertisment

ஆந்திர அரசின் துரோகத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்: ராமதாஸ்

ramadoss

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாலாற்றின் குறுக்கே ஏராளமான தடுப்பணைகளை ஏற்கனவே கட்டியுள்ள ஆந்திர அரசு, அடுத்தக் கட்டமாக மேலும் 30 தடுப்பணைகளைக் கட்டத் திட்டமிட்டிருக்கிறது. பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தவறு என்று தெரிந்தும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரங்களைப் பறிக்கும் வகையில், சட்டவிரோதமாக தடுப்பணைகளைக் கட்ட ஆந்திர அரசு தொடர்ந்து முயல்வது கண்டிக்கத்தக்கதாகும்.

Advertisment

கர்நாடகத்தில் உருவாகி தமிழகத்தில் நீண்ட தொலைவுக்குப் பாயும் பாலாறு, இடைப்பட்ட மாநிலமான ஆந்திரத்தில் வெறும் 33 கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே பாய்கிறது. ஆனால், அந்த 33 கி.மீ தொலைவுக்குள் 21 தடுப்பணைகளை ஆந்திர அரசு கட்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி, கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் ஏற்கனவே கட்டப்பட்ட அணைகளின் உயரத்தை அதிகரித்ததுடன், புதிதாக 5 அணைகளையும் கட்டியது. இந்த நடவடிக்கைகளால் மட்டும் ஆந்திரத்தில் பாலாறு பாசனப்பகுதிகளில் 5527 ஏக்கர் அளவுக்கு பாசனப்பரப்பு அதிகரித்திருக்கிறது. பாலாற்றின் துணை ஆறுகளில் கட்டப்பட்ட தடுப்பணைகளாலும் ஆந்திர பாசனப் பரப்பு விரிவடைந்துள்ளது.

Advertisment

இவை போதாதென பாலாற்றின் குறுக்கே 500 மீட்டருக்கு ஒரு தடுப்பணை வீதம் மொத்தம் 30 புதிய தடுப்பணைகளை கட்ட ஆந்திர மாநில நீர்ப்பாசனத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான கருத்துருவை ஆந்திர அரசுக்கு அம்மாநில நீர்ப்பாசனத் துறை அனுப்பி வைத்துள்ளது. இதை வேலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகளும் விசாரித்து உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு, வேலூர் ஆட்சியர் ஆகியோருக்கு தனித்தனியாக அறிக்கைகளும் அனுப்பப்பட்டுள்ளன.

பாலாற்று நீரை பயன்படுத்துவது குறித்து அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் ராஜதானிக்கும் இடையே 1892 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கடைமடை பாசன மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணைகளைக் கட்டக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அதற்கு மாறாக ஆந்திர அரசு புதிய தடுப்பணைகளைக் கட்டுவதும், ஏற்கெனவே கட்டப்பட்ட அணைகளின் உயரத்தை அதிகரிப்பதும் சட்டவிரோதமாகும். தமிழகத்திலிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்த பிறகும், அதை பொருட்படுத்தாமல் புதிதாக 30 தடுப்பணைகளைக் கட்ட ஆந்திர அரசு திட்டமிடுகிறது என்றால் சட்டத்தையும், ஒப்பந்தத்தையும் மதிக்க தயாராக இல்லை என்று தான் பொருள்.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விஷயத்தைப் பொறுத்தவரை ஆந்திர மாநிலத்தின் லாபம் தமிழகத்தின் நஷ்டம் ஆகும். ஆந்திரத்தில் இதுவரை கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் மற்றும் சீரமைக்கப் பட்ட தடுப்பணைகளால் தமிழகத்தில் பல லட்சம் ஏக்கர் வேளாண்நிலங்களின் பாசன ஆதாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இப்போது புதிதாக திட்டமிடப்பட்டுள்ள 30 தடுப்பணைகளும் கட்டப்பட்டால், பாலாற்றில் தமிழகத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. இதனால் வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாலாற்று தண்ணீரை நம்பியுள்ள 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாலைவனமாக மாறுவதை தடுக்க முடியாது. இப்படி ஒரு துரோகத்தை தமிழகத்திற்கு ஆந்திர அரசு இழைக்கக்கூடாது.

ஆந்திர அரசின் இந்த துரோகத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். பாலாற்றின் குறுக்கே புதிதாக 30 தடுப்பணைகளைக் கட்டும் திட்டம் முழுமையான செயல் வடிவம் பெறுவதற்கு முன்பாக அதை தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடர்பாக ஆந்திர அரசை கடுமையாக எச்சரிப்பதுடன், புதிய தடுப்பணைகளைக் கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்தும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகி நீதி பெறவும் தயங்கக்கூடாது. இவ்வாறு கூறியுள்ளார்.

Palar Andhra Pradesh Ramadoss (850
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe