Advertisment

தமிழ் தொலைக்காட்சியில் இந்தி மாதக் கொண்டாட்டங்களில் நிறைவு விழாவா? - ராமதாஸ் கண்டனம்

 Ramadoss Condemnation closing ceremony of Hindi Month celebration on Tamil TV

சென்னைத் தொலைக்காட்சியில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை நடத்துவதா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் எனப்படும் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும், சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்களும் இன்று மாலை நடைபெறும் என்றும், அந்நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுனர் ஆர்.என்.இரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்பட்டமான இந்த இந்தித் திணிப்பு முயற்சி கடுமையாக கண்டிக்கத்தக்கது.

Advertisment

இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையிலானவர்களால் பேசப்படும் 122 மொழிகளும், 1599 பிற மொழிகளும் உள்ளன. இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு எனும் போது ஒரு மொழியை மட்டும் கொண்டாடுவதற்கு எந்த நியாயமும் இல்லை. 1700-க்கும் கூடுதலான மொழிகள் பேசப்படும் நாட்டில், அதிலும் குறிப்பாக உலகின் மூத்த மொழியான தமிழ் பேசப்படும் மாநிலத்தில் இந்திக்கு மட்டும் விழா எடுக்கப்பட்டால் அது நாட்டின் பன்முகத்தன்மையை பாதிக்கும். இதற்கு மத்திய அரசே காரணமாக இருக்கக் கூடாது.

Advertisment

இந்தியாவிற்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை. இந்தி நாட்டின் அலுவல் மொழியாக 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி அறிவிக்கப்பட்டதைக் காரணம் காட்டி இந்தி நாளும், இந்தி மாதமும் கொண்டாடப்படுவது நியாயம் என்றால், அதே கொண்டாட்ட உரிமை தமிழ் மொழிக்கும் வழங்கப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 26.01.1950-ஆம் நாள் ஏற்றுக் கொள்ளப்பட்ட போதே அதன் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 14 மொழிகள் இடம் பெற்றிருந்தன. அந்த நாளை தமிழ் மொழி நாளாக மத்திய அரசு அறிவித்திருக்க வேண்டும். 2004-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் நாள் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. அந்த நாளை செம்மொழி தமிழ் நாளாக மத்திய அரசு அறிவித்திருக்க வேண்டும். அவற்றை செய்யாமல் இந்திக்கு மட்டும் கொண்டாட்டங்களை நடத்துவது பிற மொழிகளை இழிவுபடுத்துவதற்கு ஒப்பானதாகும்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தாலும், பாரதிய ஜனதா ஆட்சி செய்தாலும் இந்தியைத் திணிப்பதில் மட்டும் வேறுபாடு காட்டுவதில்லை. சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழாவும் இன்று கொண்டாடப்படும் நிலையில், கடந்த ஐம்பதாண்டுகளில் அது தமிழுக்கு என்ன செய்தது? எந்தெந்த வகைகளில் தமிழ்மொழி சிறந்தது என்பதை விளக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியை சென்னைத் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருக்கலாம். அதை விடுத்து இந்தியை மட்டும் கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது. எனவே, சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் இன்று நடைபெறவுள்ள இரு விழாக்களில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

pmk Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe