Advertisment

‘வன்னியர் இட ஒதுக்கீடு கோரி போராட்டம்’ - ராமதாஸ் அறிவிப்பு

 Ramadoss announcement Agitation for Vanniyar seat reservation

Advertisment

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இப்போது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று அறிவித்து பெருந்துரோகம் இழைத்திருக்கிறார் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை; உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து திசம்பர் 24 ஆம் நாளுடன் 1000 நாட்கள் ஆகின்றன. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இப்போது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று அறிவித்து பெருந்துரோகம் இழைத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு; போதிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்கத் தீரப்பை கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் நாள் வழங்கியது.

Advertisment

அதன்பின் நேரடியாக சந்திப்பு, மனுக்கள், கடிதம், சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுடன் கலந்தாய்வு என நூற்றுக்கும் மேற்பட்ட முறை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டியதன் தேவையை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. இவை அனைத்தையும் கடந்த கடந்த ஆண்டு டிசம்பர் 29 ஆம் நாள் முதலமைச்சரை சந்தித்த நான், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினேன். ஆனால், அவை அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராகிவிட்டன.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிந்தைய சில மாதங்களில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கண்டிப்பாக வழங்கப்படும் என்று சட்டப் பேரவையிலேயே முதலமைச்சர் அறிவித்தார். தேவைப்பட்டால், வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றுவதற்காக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதற்கும் தயாராக இருக்கிறேன் என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. குழுவினரிடம் வாக்குறுதி அளித்தார். ஆனால், இப்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று மாற்றிப் பேசுகிறார். அப்படியென்றால், உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்குங்கள் என்று கேட்டால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை; மத்திய அரசுக்குத் தான் அந்த அதிகாரம் உள்ளது என்று கூறி தட்டிக்கழிக்கிறார்.

2008 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட அனைத்து வகையாக தரவு சேகரிப்புகளையும் செய்யலாம் என்று பல மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் கூறியிருக்கின்றன. அந்தச் சட்டத்தின்படி கர்நாடகம், பிகார், ஒதிஷா, ஆந்திரம், தெலுங்கானம் உள்ளிட்ட மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை; மத்திய அரசுக்கு தான் அந்த அதிகாரம் உண்டு என்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருவதைப் பார்க்கும் போது, அவருக்கு சமூகநீதியின் அடிப்படைக் கூட தெரியவில்லை; அல்லது, சமூகநீதிக்கு எதிரான சக்திகளின் கைப்பாவையாக மாறிவிட்டார் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள சமூகம் என்றால் அது வன்னியர்கள் தான். அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது தான் சமூகநீதியின் அடிப்படை ஆகும். ஆனால், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று இல்லாத காரணங்களைக் கூறி ஓர் அரசு மறுக்கிறது என்றால், அந்த அரசை நடத்துபவர்கள் வன்னிய மக்கள் மீது எந்த அளவுக்கு வன்மம் கொண்டிருப்பர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது; மக்களும் இதை புரிந்து கொண்டுள்ளனர்.

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததன் 1000 ஆம் நாள் வரும் 24 ஆம் நாள் வருகிறது. அன்று தான் சமூகநீதிக்காக குரல் கொடுத்த தந்தைப் பெரியாரின் நினைவு நாள். அந்த நாளில், அதாவது வரும் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், வட்டத் தலைநகரங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. தந்தைப் பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் நாள் வன்னிய மக்கள் தொடங்கிய போராட்டம் தான் 21 இன்னுயிர்களை இழந்தாலும் கூட, 20% இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துக் கொடுத்தது. இப்போது அவரது நினைவு நாளில் தொடங்கும் அடுத்தக்கட்ட போராட்டமும் வெற்றியில் தான் முடியும்; வன்னியர் சமூகத்திற்கு சமூகநீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையும், உறுதியும் எனக்கு அதிகமாகவே இருக்கின்றன.

காஞ்சிபுரம் நகரில் நடைபெறும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்று நடத்துவார். மற்ற இடங்களில் நடைபெறும் இந்த போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமையேற்று நடத்துவர். தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக நடைபெறும் இந்தப் போராட்டங்களில் அனைத்த் தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

tngovt pmk anbumani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe