பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் அக்கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறும் என ராமதாஸ் அறிவித்திருந்தார். அதேசமயம் ராமதாஸுக்குப் போட்டியாக ஆகஸ்ட் 9ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அன்புமணி ஆதரவாளருமான வடிவேல் ராவணன் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து பா.ம.க. பொதுக்குழுவை அன்புமணி கூட்டுவதற்கு எதிராக ராமதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், 'தன்னைத்தானே தலைவர் எனச் சொல்லிக் கொண்டு அன்புமணி செயல்படுகிறார். மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடக்கும் பா.ம.க.வின் பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இன்று (08.08.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் தனது அறையில் இன்று மாலை 05.30 மணிக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அனைவரின் நலனுக்காக இருவரிடமும் தனித்தனியாகப் பேச உள்ளேன். உடனடியாக ராமதாஸைக் கிளம்பி வரச் சொல்லுங்கள். இருவரையும் சந்திக்கும் போது கட்சிக்காரர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் யாரும் இருக்கக் கூடாது எனவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அன்புமணி இன்று ஆஜராவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் 'உடல்நலக்குறைவு காரணமாக வர முடியாததால் தான் காணொளியில் ஆஜராக விருப்பம்' என ராமதாஸ் தெரிவித்துள்ளதாக ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் கோபு தெரிவித்தார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷும் 'ராமதாஸ் காணொளியில் ஆஜரானால் ஏற்கிறேன்' என ஒப்புதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ராமதாஸ் காணொளி காட்சியில் ஆஜரானார். இருவரிடமும் சுமார் ஒரு மணிநேரம் நீதிபதி விசாரணை நடத்தினார். ராமதாஸ் மற்றும் அன்புமணி தன் தரப்பு கருத்துக்களை நீதிபதி முன், வைத்த நிலையில் விசாரணை முடிந்து அன்புமணி கிளம்பியுள்ளார்.
ராமதாஸ், அன்புமணி என இருவரும் இந்த வழக்கில் தங்களுடைய கருத்துக்களை வைத்திருக்கும் நிலையில் இன்னும் சற்று நேரத்தில் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.