Ramadoss alleges Tamil Nadu government should take responsibility

தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு: தனியார் பள்ளிகளில் பாதுகாப்பு தணிக்கை செய்யாத அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள புனித மேரி தனியார் பள்ளியில் மூடி உடைந்ததால், திறந்த நிலையில் கிடந்த கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. குழந்தையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவுநீர்த் தொட்டியின் இரும்பு மூடி, பல மாதங்களாகவே துருப்பிடித்து உடைந்த நிலையில் கிடப்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா? என்பதை தனியார் பள்ளிகள் இயக்ககமும், பிற அரசு அமைப்புகளும் ஆய்வு செய்து உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அமைப்புகள் அவற்றின் கடமையை செய்யத் தவறியதன் விளைவாகவே மூன்றரை வயது குழந்தை உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

Advertisment

தங்களின் வளாகத்திலேயே அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சரியாக செய்யத் தவறிய தனியார் பள்ளிகள் தான், அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நிதி வழங்கப் போவதாக கூறுகின்றன. அதையும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அகமகிழ்ந்து வரவேற்கிறார். அரசுப் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளிடம் இருந்து ஏதேனும் உதவி கிடைக்குமா என்று ஏங்குவதைவிடுத்து, தனியார் பள்ளிகளில் குழந்தைகளை பலி வாங்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்படுவதை பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்யவேண்டும்.

மூன்றரை வயது குழந்தையின் உயிரிழப்புக் காரணமான தனியார் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.