Ramadoss alleges that the law in Tamil Nadu has fallen into abysmal shape

முதல்வர் ஸ்டாலின் மாய உலகில் வாழாமல் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் தொடங்கி தென்காசி - தூத்துக்குடி மாவட்டங்கள் வரை ஒரே நாளில் 8 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் பல கொலைகளுக்கு மது தான் காரணமாக இருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் திமுக அரசும், அதன் காவல்துறையும் படுதோல்வி அடைந்து விட்டன என்பதைத் தான் இந்த படுகொலைகள் காட்டுகின்றன.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மது குடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் பிரகதீஸ்வரன் என்ற இளைஞரும், அவரது கொலைக்கு பழிவாங்க கஸ்தூரி என்ற பெண்ணும் கொல்லப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவிரியில் மதுக்கடையில் மது வாங்குவதில் ஏற்பட்ட போட்டியில் விஜய் என்பவர் கொல்லப்பட்டார். அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் அம்பலச்சேரியில் சுயம்புகனி, தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகில் உமா, விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே இராஜசேகரன், கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையத்தில் அஸ்வினி, கடலூர் மாவட்டம் சின்ன கங்கணாங்குப்பத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் என மொத்தம் 8 பேர் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் படுகொலைகளில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் பலரும் கூட படுகொலை செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது. இதனால் மாநிலத்தின் எந்த பகுதியிலும் மக்கள் அச்சமின்றி நடமாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. படுகொலைகள் உள்ளிட்ட பெரும்பான்மையான குற்றங்களுக்கு மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தான் காரணமாக உள்ளன. ஆனால், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், போதைப்பொருள்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எந்த அக்கறையும் திமுக அரசுக்கு இல்லை.

Advertisment

தமிழ்நாட்டில் ஒரே நாளில் அதிக கொலைகள் நடைபெறுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் இதே போன்று படுகொலைகள் நடைபெற்ற போதெல்லாம் அதை பாட்டாளி மக்கள் கட்சி சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. ஆனால், கொலைகளை கட்டுப்படுத்தி, சட்டம் = ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு, குற்றங்களை மூடி ம்றைப்பதிலும், பிரச்சினைகளை திசை திருப்புவதிலும் தான் ஆர்வம் காட்டுகிறது.

மக்களைப் பாதுகாப்பதும், சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்துவதும் தான் ஆளும் அரசின் முதல் கடமை . ஆனால், அந்தக் கடமையை செய்யத் தவறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெறுவதாகக் கூறிக் கொண்டு மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். முதலமைச்சரும், அவர் கட்டுபாட்டில் இயங்கும் காவல்துறையும் இயல்பு நிலைக்கு திரும்பி சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.