Skip to main content

மிகவும் ஆபத்தான நாடு இந்தியா: மகளிர் பாதுகாப்பை அதிகரிக்க கொள்கை தேவை! - இராமதாஸ்

Published on 27/06/2018 | Edited on 27/06/2018

மிகவும் ஆபத்தான நாடு இந்தியா மகளிர் பாதுகாப்பை அதிகரிக்க கொள்கை தேவை என்று பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 


உலகில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவின் நிலையே இப்படி என்றால், தமிழகத்தின் நிலையை நினைத்துப் பார்க்கவே  கவலையாக உள்ளது. மகளிரை பாதுகாப்பது தான் மத்திய, மாநில அரசுகளின் முதன்மைக் கடமைகளில் ஒன்று எனும் நிலையில், அதை ஆட்சியாளர்கள் நிறைவேற்றத் தவறியது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
 

தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை சார்பில் உலகம் முழுவதும் 193 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளில், மகளிர் பாதுகாப்புக்கு மத்திய, மாநில அரசுகள் எந்த முக்கியத்துவமும் தருவதில்லை என தெரியவந்துள்ளது. அண்மைக்காலங்களில் கடுமையான போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானும், சிரியாவும் கூட முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் தான் உள்ளன. கடுமையான  சீரழிகளை சந்தித்து வரும் சோமாலியா நாடு இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் தான்  உள்ளது. ஆனால், இந்தியா முதலிடத்தில் உள்ளது. சோமாலியாவில் மகளிருக்கு உள்ள பாதுகாப்பு உத்தரவாதம் கூட இந்தியப் பெண்களுக்கு இல்லை என்பது நமது ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டிய ஒன்றாகும். 
 

2011&ஆம் ஆண்டில் இதே நிறுவனம் நடத்திய மகளிர் பாதுகாப்பு குறித்த கணக்கெடுப்பில்  இந்தியா நான்காவது இடத்தில் இருந்தது. அப்போதே மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால், மகளிர் பாதுகாப்புக்காக சிறு துரும்பைக் கூட இந்தியா மேற்கொள்ளவில்லை என்பது தான் உண்மை. பாலியல் வன்கொடுமைகள் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்துக் கொள்வது, பொது இடங்களில் பாலியல் சீண்டல்கள்,  குடும்ப வன்முறைகள் ஆகியவை தான் பெண்களுக்கு எதிராக அதிக அளவில் இழைக்கப்படும் கொடுமைகள் என்று கூறப்படுகின்றன. இவை அனைத்துமே தடுக்கப்பட வேண்டிய குற்றங்களாகும்.

 

India is the most dangerous country: the need for policy to increase women's safety!


 

இந்தியாவில்  2007 முதல் 2016 வரையிலான 10 ஆண்டுகளில் மகளிருக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 83% அதிகரித்துள்ளது. பொருளாதாரத்திலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திலும்  இந்தியா மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருப்பதாக பெருமிதம் தெரிவிக்கப்படும் நிலையில், மகளிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பது நிச்சயம் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதாக அமையாது.


இந்தியாவின் நிலை இப்படியென்றால், தமிழகத்தின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டில் 6940 ஆக இருந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை, 2012 ஆம் ஆண்டில் 7192 ஆகவும், 2013 ஆம் ஆண்டில் 7475 ஆகவும், 2014 ஆம் ஆண்டில் 7980 ஆகவும், 2015 ஆம் ஆண்டில் 8,000 ஆக அதிகரித்திருக்கின்றன. 2012 &16 வரையிலான  5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 37,577 ஆகும். இவற்றில் பாலியல் சீண்டல்கள், வரதட்சனைக் கொடுமை, குடும்ப வன்முறை, பெண்களின் உறுப்புகளை சிதைத்தல் உள்ளிட்ட குற்றங்கள் அடங்கும். அதுமட்டுமின்றி, கடந்த 5 ஆண்டுகளில் 4637 பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்களான  பிகார், உத்தரப்பிரதேசத்தில் கூட பெண்களுக்கு எதிராக இவ்வளவு அதிக குற்றங்கள் நடைபெறவில்லை. 
 

இவை தவிர கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுவாதி, நவீனா தொடங்கி அஸ்வினி வரை தமிழகத்தில் 50 மேற்பட்ட பெண்கள் ஒருதலைக் காதலால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவை எல்லாம் பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் என்றால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக எண்ணிக்கையில் நடைபெறுகின்றன. இதற்குக் காரணம் மதுக் கொடுமை தான். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளைப் பின்தொடர்ந்து சென்றும், கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் வழியில் குழுவாக கூடியிருந்தும் மாணவிகளை கிண்டல் செய்வது, பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த முடியாததால்  மாணவிகள் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நெருக்கடியும் ஏற்படுகிறது. இந்த உடனடியாக நிலை மாற்றப்பட வேண்டும்; அது தான் அரசின் முதல் கடமையாக இருக்க வேண்டும்.
 

அதற்காக மகளிர் எந்தெந்த வகைகளில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதற்கான தீர்வுகள் என்ன? என்பதையும் வல்லுனர் குழு மூலம் ஆய்வு செய்து மகளிருக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த தனிக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு தனி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்; மகளிர் காவலர்களை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் மேலாக,  மகளிருக்கு எதிரான குற்றங்களை களைய தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட  வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.