Skip to main content

இளவரசன் கொல்லப்படவில்லை; தற்கொலை: பா.ம.க. மீது பழி சுமத்திய புதிய போலி புரட்சியாளர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் -ராமதாஸ்

Published on 09/06/2019 | Edited on 09/06/2019

 


பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:   ’’தருமபுரியைச் சேர்ந்த பட்டியலின இளைஞன் இளவரசன் கொலை செய்யப்படவில்லை; விரக்தியின் உச்சத்தில் அவர் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்று இளவரசனின் சாவு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் சிங்காரவேலு ஆணையம் கூறியிருக்கிறது. விசாரணை ஆணையத்தின் இத்தீர்ப்பு பல ஆண்டுகளாக கட்டவிழ்க்கப்பட்டு வந்த கதைகளுக்கு முடிவு கட்டியுள்ளது.

 

r

 

தருமபுரி இளவரசன் கொலை செய்யப்படவில்லை, அவர் தற்கொலை தான் செய்து கொண்டார் என  இருமுறை நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்விலும், காவல்துறை விசாரணையிலும் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டது. ஆனால், இளவரசனின் மரணத்தில் அரசியல் லாபம் தேடத் துடித்த திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், மனசாட்சியை மரணிக்கச் செய்து விட்டு, இளவரசன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதுகுறித்து நீதிவிசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்றும் நெருக்கடி கொடுத்தனர். அதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட நீதிபதி சிங்காரவேலு ஆணையம் தான் விரிவான விசாரணைக்குப் பிறகு தருமபுரி இளவரசன் கொலை செய்யப்படவில்லை; மதுபோதையில் தற்கொலை செய்து கொண்டார் என அறிக்கைத் தாக்கல் செய்திருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கை இதுவரை வெளியிடப்படாத நிலையில், தி இந்து குழுமத்தின் பிரண்ட்லைன் இதழ் இதுகுறித்த விவரங்களை சிறப்புச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது.

 

தருமபுரி மருத்துவமனையில் இரு முறை செய்யப்பட்ட இளவரசனின் உடற்கூறு ஆய்விலும் ‘‘வேகமாக சென்ற தொடர்வண்டியின் பக்கவாட்டுப் பகுதி மோதியதில் அவரது இடதுகையில் காயம் ஏற்பட்டிருக்கலாம்;  தலையில் தொடர்வண்டி மோதியதால் தான் அவர் உயிரிழந்துள்ளார்’’ என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இறப்பதற்கு முன் அவர் மது அருந்தியிருந்தார். மதுவில் உள்ள எத்தில் ஆல்கஹால் என்ற போதைப்பொருள் மட்டும் தான் அவரது உள் உறு-ப்புகளில் காணப்பட்டதாகவும், விஷத்தன்மையுடைய வேறு பொருட்கள் எதுவும் அவரது உடலில் இல்லை என்றும் உடற்கூறு ஆய்வில் குறிப்பிடப்பட்டிருப்பதை  சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி சிங்காரவேலு, இது சந்தேகத்திற்கிடமின்றி தற்கொலை தான் என்று கூறியுள்ளார்.

 

இளவரசனுக்கு நீண்டநாட்களாகவே தற்கொலை சிந்தனை இருந்திருக்கிறது. ஏற்கனவே சென்னையில் ஒருமுறை தமது மணிக்கட்டை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதையும் நீதிபதி அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதுமட்டுமின்றி, இந்த விஷயத்தில் காவல்துறையினர் மீது கூறப்பட்ட அவதூறுகளை கண்டித்துள்ள நீதியரசர் சிங்காரவேலு, சம்பவம் நடந்த போது தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அஸ்ரா கார்க்கின் செயல்பாடுகளையும் பாராட்டியுள்ளார். நீதியரசர் சிங்காரவேலு அறிக்கை மூலம் பா.ம.க. மீது சுமத்தப்பட்ட பெரும்பழி துடைக்கப்பட்டிருக்கிறது.

 

இளவரசனின் உயிரிழப்பு வேதனையளிக்கும் துயரமான நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரது மரணம் தொடர்பான விஷயத்தில் செய்யப்பட்ட அரசியல் மிகவும் அருவருக்கத்தக்கது. திமுகவில் தொடங்கி இப்போது அதன் கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பிணத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்தன. தங்களின் அரசியல் பசியை தீர்த்துக் கொள்ள இளவரசனின் மரணம் தான் அவர்களுக்கு உணவாக மாறியது. பாட்டாளி மக்கள் கட்சி மீது பழிச்சொல் எனும் அம்புகளை அடுக்கடுக்காக வீசினார்கள். ஊடகங்களும் இந்த விஷயத்தில் உண்மையைக் கொண்டு வர முயற்சி செய்யவில்லை. மாறாக, அரசியல் கட்சிகளின் பழிகளுக்கு தப்புத்தாளங்களைப் போட்டன. தி இந்து உள்ளிட்ட பெரும்பாலான பத்திரிகைகள் நடுநிலையை நசுக்கி விட்டு, பொய்யை மூலதனமாக்கி பிழைப்பு நடத்தின. மொத்தத்தில் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் புதிய போலி புரட்சியாளர் வேடம் கட்டி ஆடின.

 

இளவரசன் கொல்லப்படவில்லை; தற்கொலை தான் செய்து கொண்டார் என நீதியரசர் சிங்காரவேலு  ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் பா.ம.க. மீது பழி சுமத்திய புதிய போலி புரட்சியாளர்கள் அனைவரும் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதை அவர்கள் செய்வார்களா?

 

இளவரசன் தற்கொலையை அரசியலாக்க வேண்டும் என்ற எண்ணம் தான் சாதியை முதலீடாகக் கொண்டு அரசியல் செய்யும் சில கும்பல்களுக்கும், அவர்களை திரைமறைவிலிருந்து இயக்குபவர்களுக்கும் இருந்ததே தவிர இளவரசனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால்  இளவரசனை அவர்கள் பலி கொடுத்திருக்க மாட்டார்கள்; வாழ வைத்திருப்பார்கள். திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையை நடத்துவதே பெரும் சுமையாக மாறி விட்ட நிலையில், தமக்கு சென்னையில் ஏதாவது ஒரு வேலை வாங்கித் தரும்படி தமது சமுதாய அரசியல் தலைவரிடம் இளவரசன் மன்றாடியுள்ளார். 

ஆனால், இளவரசன் வாழ்வதை விட அவரை வைத்து தாம் வாழ வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்த அந்த தலைவர், இளவரசனை வைத்துக் கொண்டு தமக்குத் தேவையான விஷயங்களை சாதித்துக் கொண்டு, வேலை வாங்கித் தராமல் திட்டி விரட்டியடித்தார். அப்போது தான் அவரது மனதில் தற்கொலை எண்ணம் தலைதூக்கியது. உடனடியாக அந்தத் தலைவரின் அலுவலகத்திலிருந்து தாம் தங்கியிருந்த விடுதியின் அறைக்கு வந்து தமது இடது கை மணிக்கட்டை பிளேடால் கீறிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதன்பிறகும் இளவரசன் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் தான் இருந்துள்ளார். இது அவரை இயக்கிய பலருக்கு தெரிந்து இருந்திருக்கிறது. இளவரசனையும், அவரது மரணத்தையும் வைத்து ஆதாயம் தேட முயன்றவர்கள், மனசாட்சியுடன் செயல்பட்டு, அவருக்கு கவுன்சலிங் வழங்க ஏற்பாடு செய்திருந்தால், தற்கொலையை தடுத்திருக்கலாம். அவ்வாறு செய்யத் தவறியவர்கள் தான் இளவரசனின் சாவுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

 

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அது குறித்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்திருக்கிறார். தற்கொலை திட்டத்தைக் கைவிட்டு விட்டு வீடு திரும்பும்படி, அறிவழகன் என்ற உறவினர் தொலைபேசியில் கேட்டுக் கொண்ட போது, தாம் அளவுக்கு அதிகமாக குடித்திருப்பதாகவும், இந்த நிலையில் தம்மால் வீட்டுக்கு வர இயலாது என்றும் கூறியிருக்கிறார். அதன்பின்னர், சில மணி நேரங்கள் கழித்து தான், அவர் தொடர்வண்டியில் மோதி தற்கொலை செய்து கொண்டார் என்ற போதிலும், அவரை காப்பாற்ற அவரது உறவினர்களோ, நண்பர்களோ முயற்சி செய்யவில்லை. இளவரசனின் தற்கொலை காவல்துறையினருக்கு தெரியும் முன்பாகவே அவரது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கு தெரிந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், இளவரசனின் மறைவுக்காக வருந்தவில்லை; மாறாக அவரிடம் இருந்த தற்கொலைக் கடிதம் உள்ளிட்ட ஆதாரங்களை களைந்து, இளவரசன் கொலை செய்யப்பட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குவதில் தான் ஆர்வம் காட்டினர். அந்த நேரத்தில் அவரை இயக்கியவர்களை கண்டறிந்து தண்டிக்க வேண்டும்.

 

இளவரசன் கொல்லப்படவில்லை; தற்கொலை தான் செய்து கொண்டார் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அவருக்கு துணையாக இருப்பதைப் போல நடித்து தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார்? என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அதேபோல், அரசியல் கட்சிகளும் ஓட்டுக்காக உண்மையை மறைத்து ஒரு சமூகத்தின் மீது பழி சுமத்துவதை கைவிட்டு நேர்மையான அரசியல் செய்ய முன்வர வேண்டும்.’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

“மத்திய அரசை எதிர்பார்க்க வேண்டாம்” - முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 21/10/2023 | Edited on 21/10/2023

 

Ramadas has insisted Tamil Nadu government should conduct the caste-wise census

 

“மத்திய அரசை எதிர்பார்க்க வேண்டாம்; தமிழகஅரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “தேசிய அளவில் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். சமூகநீதியை நிலை நிறுத்தவும்,  வளர்ச்சியின் பயன்களை அடித்தட்டு மக்கள்வரை கொண்டு செல்லவும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்று ஒப்புக்கொண்டிருப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் பாராட்டுகிறேன்.

 

அதேநேரத்தில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அனைத்து அதிகாரங்களும், கட்டமைப்பும் தமிழக அரசுக்கே இருக்கும் நிலையில், தமிழக அரசே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் என்று அறிவிக்காமல், மத்திய அரசு இந்தக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுவது தாம் விளையாட வேண்டிய பந்தை, பிரதமர் பக்கம் திருப்பி விடும் செயல் என்பதைத் தவிர வேறு எதுவும் அல்ல. இது கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதற்கு ஒப்பானது.  சமூகநீதியில் அக்கறை கொண்ட எந்த முதலமைச்சரும் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள்.

 

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசே நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதன் மூலம் இந்த சிக்கலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்றிருக்கிறார். 2004-ஆம் ஆண்டில் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்த பாட்டாளி மக்கள் கட்சி, இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக 15 ஆண்டுகளுக்கு முன் 24.10.2008 -ஆம் நாள்  அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இராமதாஸ், 50-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை எனது ஆணையின்படி, சந்தித்து 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று 140க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவைக் கொடுத்தார்.

 

பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை பரிசீலிப்பதாக சிவராஜ் பாட்டீலும் அப்போது ஒப்புக்கொண்டார். அதன்பின்னர் மக்களவையில் இதுகுறித்து பிரச்சினை எழுப்பப்பட்ட போது பா.ம.க.வின் கோரிக்கைக்கு லாலு பிரசாத், சரத்யாதவ், முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவளித்தனர். அதைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த அரசு ஒப்புக்கொண்டது. மக்களவையில் இதுகுறித்த வாக்குறுதியை 2009-10 ஆம் ஆண்டில் அப்போதைய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி அளித்தார்.

 

அதைத் தொடர்ந்து 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு தனியாகவும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தனியாகவும் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவ்வாறு செய்யாமல் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு என்ற பெயரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் விவரங்களும் கூட இன்று வரை வெளியிடப்படவில்லை.

 

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசை எத்தனை முறை வலியுறுத்தினாலும்,  அதற்கு மத்திய அரசே ஒப்புக்கொண்டாலும் இறுதியில் அந்த முயற்சியை மத்திய அரசே சீர்குலைத்து விடும். கடந்த காலங்களிலும் இது தான் நடந்தது; இனிவரும் காலங்களிலும் அது தான் நடக்கும். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று 2021-ஆம் ஆண்டில்  பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், அம்மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், அதன் பின் ஓராண்டுக்கு மேலாகியும்  எதுவும் நடக்காததால் தான் பீகார் அரசின் சார்பில் சாதிவாரி  கணக்கெடுப்பை நடத்தினார்.

 

ஆந்திர மாநில அரசும் இதுதொடர்பாக அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட தீர்மானத்திற்கு எந்த பதிலும் மத்திய அரசிடமிருந்து வரவில்லை என்பதைக் காரணம் காட்டித் தான் வரும் நவம்பர் 15-ஆம் தேதி முதல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. நேரிலும், சட்டப்பேரவைத் தீர்மானத்தின் மூலமாகவும் வலியுறுத்திய பிறகும் ஏற்கப்படாத சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை, தமது கடிதத்தைக் கண்டவுடன் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்று முதலமைச்சர் நம்பிக் கொண்டிருப்பது விந்தை தான்.

 

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்பட்டால், அதை எண்ணி மகிழ்ச்சியடையும் முதல் மனிதன் நானாகத் தான் இருப்பேன். ஆனால், அதற்கான  வாய்ப்புகள் கண்களுக்கு எட்டியவரை தென்படாத நிலையில், அதை நம்பிக் கொண்டு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகவே அமையும். தமிழக அரசு, அதன் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்.

 

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் இருப்பதாக பிகார் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தீர்ப்பு மிகவும் விரிவாகவும், விளக்கமாகவும் இருப்பதால், அதனடிப்படையில் நடத்தப்பட்ட பிகார் சாதிவாரி கணக்கெடுப்பின் விவரங்களை வெளியிடவோ, அதனடிப்படையில் முடிவுகளை எடுக்கவோ தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது. இவ்வளவுக்குப் பிறகும்  மக்கள்தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் இருப்பதால் மத்திய அரசு நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பு தான் சட்டப்பூர்வமானதாக இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது மாநில அரசின் உரிமைகளை  விட்டுக் கொடுப்பதற்கு ஒப்பானதாகும்.

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நான் மீண்டும், மீண்டும் கூறிக் கொள்வது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கே உண்டு, அதற்கு எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை என்பதைத் தான். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி தான் கர்நாடகம், பீகார், ஒடிஷா ஆகிய மாநிலங்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. ஆந்திரா, இராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவுள்ளன. எனவே, இனியும்  மத்திய அரசுக்கு கடிதம் எழுதாமல், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்தும்  என்று அறிவித்து, செயல்படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Next Story

'நீரும் வந்து சேரவில்லை; கண்துடைப்பு இழப்பீடு கூடாது' - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

nn

 

வறட்சியால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வாடிய சுமார் 40,000 ஏக்கர் குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5,400 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கர்நாடகத்திடமிருந்து உரிய காவிரி நீரை பெற்றுத் தர தவறியதால் 2 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் கருகி வரும் நிலையில், 40,000 ஏக்கருக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பதை கண்துடைப்பாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

 

தமிழ்நாட்டில் கடந்த காலங்களை விட அதிகமாக நடப்பாண்டில் 5.20 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் குறுவை நடவு செய்யப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஜூன் 12-ஆம் நாள் தண்ணீர் திறந்து விடப்பட்டதும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டதும் இதற்கு காரணம் ஆகும். ஆனால், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யாததாலும், இருக்கும் நீரை பகிர்ந்து கொள்ள கர்நாடக அரசு மறுத்து விட்டதாலும் நடப்பு சாகுபடி ஆண்டில், இன்று வரை தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 127.05 டி.எம்.சி நீரில் 40 டி.எம்.சி தண்ணீர் கூட மேட்டூர் அணைக்கு வந்து சேரவில்லை.

 

கடந்த ஒன்றரை மாதங்களாகவே காவிரியில் போதிய அளவில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்பதால் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்கள் கருகத் தொடங்கி விட்டன. முன்கூட்டியே நடப்பட்ட பயிர்கள், நிலத்தடி நீரைக் கொண்டு பாசன வசதி பெற்ற பயிர்கள் என ஒட்டுமொத்தமாக இரு லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை பயிர்கள் கடந்த காலங்களில் அறுவடை செய்யப்பட்டு விட்டன. மீதமுள்ள மூன்றரை லட்சம் ஏக்கர் பயிர்கள் வாடிக் கொண்டிருக்கின்றன. அவற்றிலும் கூட சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்களை ஓரளவு பாதிப்புடன் காப்பாற்றி விட முடியும்.  

 

அதே நேரத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33 அடியாகவும், நீர்இருப்பு 9 டி.எம்.சியாகவும் குறைந்து விட்ட நிலையில், அணையிலிருந்து காவிரியில் நீர் திறக்கப்படுவது அடுத்த ஓரிரு நாட்களில் நிறுத்தப்படும். அத்தகைய சூழலில் காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடை செய்ய தயாராகாத 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவைப் பயிர்களை காப்பாற்ற முடியாது.  அவ்வாறு  இருக்கும் போது 40 ஆயிரம் ஏக்கரில் மட்டும் தான் பாதிப்பு என்று எந்த வகையில் அரசு கணக்கிட்டது என்பது தெரியவில்லை. அதுமட்டுமின்றி, சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5400 மட்டும் தான் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது உழவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்.

 

காவிரியில் தண்ணீர் வராததால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ. 40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டிய தார்மீகக் கடமை தமிழக அரசுக்கு இரு வழிகளில் உள்ளது. முதலாவது, கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் இன்று காலை நிலவரப்படி கூட 66 டி.எம்.சி தண்ணீர் உள்ள நிலையில், அங்கிருந்து காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் பெற்றுத்தர வேண்டிய கடமையில் தமிழ்நாடு அரசு தோற்றுவிட்டது. அத்தகைய கடமை தவறுதலுக்காகவே தமிழக அரசு இழப்பீடு தர வேண்டும்.

 

இரண்டாவதாக, குறுவை நெற்பயிர்களுக்கு தமிழக அரசு காப்பீடு வழங்கியிருந்தால், தண்ணீரின்றி கருகிய பயிர்களுக்கு காப்பீடு நிறுவனங்களிடமிருந்து  ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் இழப்பீடு கிடைத்திருக்கும். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குறுவை நெல்லுக்கு காப்பீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு குறுவைக்கு காப்பீடு வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டது. அதுமட்டுமின்றி, குறுவை பயிர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதை இயற்கைப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசு ஈடு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கான இழப்பீட்டை அரசு தான் வழங்க வேண்டும்.

 

பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கான இழப்பீட்டை வழங்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கும் நிலையில், வெறும் 40,000 ஏக்கருக்கு மட்டும் ஏக்கருக்கு ரூ.5400 மட்டும் இழப்பீடு வழங்குவது எந்த வகையில் நியாயம்? இந்த தொகை நடவு நட்ட செலவை ஈடு செய்வதற்குக் கூட போதுமானதல்ல.

 

ஓர் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய ரூ.25,000 வரை செலவு ஆவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்.எல்.சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்தில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்ட போது, அப்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அவற்றைக் கருத்தில் கொண்டு, வறட்சியால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.