Advertisment

“நடப்பாண்டும் தமிழ் கட்டாயப் பாடம் இல்லை; அரசின் அலட்சியமே காரணம்” - ராமதாஸ் கண்டனம்

Ramadas has condemned the negligence of the Tamil Nadu government as the reason

“உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, அடுத்த ஆண்டு முதல் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 26ஆம் நாள் தொடங்கவிருக்கும் நிலையில், நடப்பாண்டிலும் தமிழ்கட்டாயப்பாடம் இல்லை; மொழிச்சிறுபான்மையினர் நடப்பாண்டில் அவர்களின் தாய்மொழிப் பாடத்தில் தேர்வு எழுதலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டு 18 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், இன்னும் அந்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாததற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணமாகும்.

Advertisment

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இது தொடர்பாக பிறப்பித்திருக்கும் அரசாணையில், ‘‘சில மொழிச்சிறுபான்மை பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படாததால், நடப்பாண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ் மொழிப் பாடத் தேர்வை எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது; மொழி சிறுபான்மையினர் பள்ளிகளில் உள்ள அனைத்து தமிழாசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும் நிலையில் சிறுபான்மை மொழி பயிலும் மாணவர்களுக்கு 2025&இ-ல் நடைபெறவுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி பாடத்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு கோரமாட்டோம் என்று அந்தப்பள்ளிகள் உறுதி அளித்துள்ளன’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழ் மொழியை ஒரு பாடமாக படிக்காமல் பட்டப்படிப்பைக் கூட நிறைவு செய்ய முடியும் என்ற நிலை நிலவுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே, பா.ம.க. கொடுத்த அழுத்தத்தின் பயனாக மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்கும் சட்டம் 09.06.2006-ஆம் நாள் சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

2006 ஆ-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஓவ்வொரு வகுப்புக்கு நீட்டிக்கப் பட்டு பத்தாவது ஆண்டில் தான் பத்தாம் வகுப்புக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு வகுப்புக்கு தமிழ்ப் பாடம் நீட்டிக்கப்படும் போது அந்த வகுப்பில் தமிழ் கற்பிக்கப்பட்டதற்கான சான்றிதழை பள்ளிகளின் நிர்வாகங்கள் அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அது கட்டாயமாகும்.

அதன்படி முந்தைய 9 ஆண்டுகளும் தங்களது பள்ளி மாணவர்களுக்கு தமிழ் பாடத்தைக் கற்றுக் கொடுத்ததாக அரசிடம் சான்றிதழ் வழங்கிய தனியார் பள்ளிகள், பத்தாவது ஆண்டில் மட்டும் சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் குழந்தைகளுக்கு தமிழ்ப் பாடத்தை கற்பிக்க முடியவில்லை என்று கூறி விலக்கு கோரின. முந்தைய 9 ஆண்டுகளில் தமிழைக் கற்பிக்க ஏற்படுத்தப்பட்டிருந்த கட்டமைப்புகள் பத்தாம் ஆண்டில் மட்டும் மாயமானது எப்படி? என்ற வினாவை அரசு எழுப்பியிருக்க வேண்டும். ஆனால், அந்த வினாவை தமிழக அரசு எழுப்பத் தவறிவிட்டது.

இப்போதும் கூட தமிழ் கட்டாயப் பாட சட்டம் இயற்றப்பட்டு 18 ஆண்டுகள் ஆகியும் தமிழாசிரியர்களை நியமிக்காதது ஏன்? என்று அந்த பள்ளி நிர்வாகங்களிடம் தமிழக அரசு வினா எழுப்பியிருக்க வேண்டும். ஆனால், எந்த வினாவும் எழுப்பாமல், தமிழ்பாடத் தேர்வை எழுதுவதிலிருந்து மேலும் ஓராண்டுக்கு தமிழக அரசு விலக்கு அளித்திருக்கிறது. தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதில் அரசு காட்டும் ஆர்வம் இவ்வளவு தான்.

இன்னொரு பக்கம் தமிழ்கட்டாயப்பாடம் தொடர்பாக சட்டப் போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்கட்டாயப்பாடச் சட்டத்திற்கு எதிராக 2015-&16ம் ஆண்டில் மொழிச்சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 முதல் செயல்படுத்த ஆணையிட்டது. ஆனாலும், அதை மதிக்காத பள்ளிகள் உச்சநீதிமன்றத்திற்கு சென்றன. கடைசி நேரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததால் கடந்த ஆண்டு மட்டும் தமிழ்கட்டாயப் பாடச் சட்டத்திலிருந்து விலக்கு அளித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூலையில் நீதிமன்றம் திறக்கப்பட்ட பின்னர் இவ்வழக்கை விசாரித்து தீர்ப்பளிப்பதாக அறிவித்தது.

ஆனால், ஜூலை மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரணைக்குக் கொண்டு வருவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதியும் கடந்த திசம்பர் மாதம் ஓய்வு பெற்றும் சென்று விட்டார். அதன் விளைவு தான் நடப்பாண்டிலும் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனி இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வரும்? தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டம் எப்போது முதல் நடைமுறைக்கு வரும்? என்பதும் தெரியவில்லை. அன்னைத் தமிழ் அரியணை ஏற இன்னும் எவ்வளவு ஆண்டுகள் ஆகுமோ?

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்நாட்டில் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டம் கொண்டு வருவதற்கு விடுதலைக்குப் பிறகு 60 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அந்தச் சட்டம் இயற்றப்பட்டு 18 ஆண்டுகள் ஆகியும் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பது உண்மையாகவே தமிழர்கள் தலைகுனிய வேண்டிய ஒன்றாகும். இந்த அவலநிலை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். எனவே, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, அடுத்த ஆண்டு முதல் தமிழ்கட்டாயப் பாடச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

tngovt pmk Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe