Skip to main content

பாமகவின் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை மாநில சிறப்புப் பொதுக்குழு தீர்மானங்கள்

Published on 23/06/2019 | Edited on 23/06/2019

 


பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்றது.  இதில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ், மற்றும் அன்புமணி ராமதாஸ், கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, பாலு, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

 

p


இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1: உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உச்சநீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர், அதாவது 10 விழுக்காட்டினர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக பணியாற்றி வந்துள்ளனர். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதி கூட உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கப்படவில்லை.  இது நியாயமல்ல. இனி வரும் காலங்களிலாவது  உச்சநீதிமன்ற  நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்திற்கு  உரிய பிரதிநிதித்துவம் வழங்க உச்சநீதிமன்ற கொலீஜியம் முன்வர வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது.

 

2.  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களையே நியமிக்க வேண்டும்.

இந்தியாவில் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை நியமிக்கும் மரபு கடைபிடிக்கபட்டு வருகிறது. இதற்காக கூறப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக இல்லை.  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி என்பது நீதி வழங்குவது மட்டுமின்றி நிர்வாகத்துடனும் சம்பந்தப்பட்ட ஒன்றாகும். இத்தகைய பதவியில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படும்போது தான் நிர்வாகம் செய்ய வசதியாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக  அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதிகளையே நியமிக்கும்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மத்திய அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

 

p

 

3. மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் (ளிஙிசி) இடஒதுக்கீடு வழங்க சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும்.

மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டபோது, அரசியலமைப்பு சட்டத்தின் 16வது பிரிவில் 4ஏ என்ற உட்பிரிவை சேர்ப்பதற்காக 117 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. இதன் மூலம் அச்சமூகப் பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இதனால் இந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் எந்த நிலையில் பணியில் சேர்ந்தார்களோ, அதே நிலைப் பணியிலேயே ஓய்வு பெற வேண்டியிருக்கிறது. இந்நிலையை மாற்ற இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியல் சட்டத்தில் உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இந்த பொதுக்குழுக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

 

4. சமூகநீதிக்கான சட்ட உதவி மையத்தை சென்னையில் அமைக்க நடவடிக்கை

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் நிறுவனர் மருத்துவர் அய்யா மேற்கொண்ட முயற்சிகளால் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு 2006&ஆம் ஆண்டில் வழங்கப்பட்டு, அதற்கடுத்த ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை அதன் பயன்கள் முழுமையாக கிடைக்கவில்லை. அதேபோல், மத்திய அரசின் பல உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.

இந்த சமூக அநீதியைப் போக்கவும், இட ஒதுக்கீடு தொடர்பான விஷயங்களில் பொதுமக்களுக்கு  உதவும் நோக்கத்துடனும் சென்னையில் சமூகநீதிக்கான சட்ட உதவி மையத்தை அமைக்க வழக்கறிஞர்கள் சமூகநீதிப்பேரவை தீர்மானிக்கிறது. இந்த மையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்களும், நீதித்துறை வல்லுனர்களும் உறுப்பினர்களாக இருந்து வழிநடத்துவார்கள்.

 

5. உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டு கிளையை சென்னையில் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பபட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 25 விழுக்காட்டிற்கும் அதிகமானவை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களை சேர்ந்தவை ஆகும். தமிழகத்தின் கடைக்கோடியான கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒருவர் தில்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்றால் 2897 கி.மீ தொலைவுக்கு சுமார் 50 மணி நேரம் தொடர்வண்டியில் பயணம் செய்ய வேண்டும். அடித்தட்டு மக்களால் இது சாத்தியமில்லை. அது மட்டுமின்றி உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்டரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்றும், மேல் முறையீட்டு வழக்குகளை விசாரிக்க இந்தியாவின் நான்கு திசைகளிலும் உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டு கிளைகளை அமைக்க வேண்டும் என்றும் சட்ட ஆணையத்தின் 229 ஆவது அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தென் மாநிலங்களைச் சேர்ந்த மேல் முறையீட்டு வழக்குகளை விசாரிப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டுக் கிளையை சென்னையில் தொடங்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை கேட்டுக் கொள்கிறது

.

6. சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற குரல் கடந்த பல ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 06.12.2006 அன்று இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதன் பின் 4 குடியரசுத் தலைவர்கள் மாறிவிட்ட போதிலும், இந்த கோரிக்கை மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்  348(2) பிரிவின்படி குடியரசுத் தலைவரிடம் முன்கூட்டியே ஒப்புதல் பெற்று இந்தி அல்லது மாநில மொழிகளை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அறிவிக்க ஆளுனருக்கு அதிகாரம் உண்டு. இந்தப் பிரிவை பயன்படுத்தி பீகார், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களின் அலுவல் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

 

7. தமிழகத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டை இரத்து செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது.  இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள நீதிபதிகள், தமிழ்நாட்டில் எந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் ஆணையிட்டிருக்கிறது.

ஏற்கனவே தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை கடந்த 2010&ஆம் ஆண்டு தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு செல்லும்; ஆனால், ஓராண்டுக்குள் தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தி இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டது.

ஆனால், அப்போது ஆட்சியிலிருந்து திமுக அரசு அத்தகைய கணக்கெடுப்பு எதையும் மேற்கொள்ளாத நிலையில், உறுதி செய்யப்படாத புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தான் இடஒதுக்கீடு தொடருவதாகக் குற்றஞ்சாட்டி அதனடிப்படையில் தான் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதையேற்று இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் வாய்ப்பு இருப்பதால், அதைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தி அதனடிப்படையில் 69 விழுக்காடு  இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை இந்தப் பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

 

8. தமிழ்நாட்டில் திருநங்கையர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்

தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட நிலையில் உள்ள திருநங்கை மற்றும் திருநம்பியர்களின் முன்னேற்றத்திற்காக சமூகநீதி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை  தீவிரமாக ஆதரிக்கிறது.

அதேநேரத்தில் திருநங்கையர்களுக்கு சமூகநீதி வழங்குவதாகக் கூறி, அவர்களை மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவில் தமிழக அரசு சேர்த்துள்ளது. இதனால் திருநங்கையர்களுக்கு எந்தவித பயனும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் இந்த ஒதுக்கீட்டால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த சிக்கலுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

திருநங்கையர்களுக்கு முழுமையான சமூகநீதி வழங்கப்பட வேண்டும் என்றால் அவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து அதற்கு இணையான இடஒதுக்கீடு அளிப்பது தான் மிகச் சரியானதாக இருக்கும். எனவே, அதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி தமிழக அரசை இக்கூட்டம் கோருகிறது.

 

9.  தமிழகத்தில் பணியாற்றும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளிடையே மன அழுத்தத்தைப் போக்க,  அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உயர்நீதிமன்றம் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.

கீழமை நீதிமன்ற  நீதிபதிகள் பணிமாற்றம் செய்யப்படும்போது அவர்களுடைய விருப்பங்கள் கருத்தில் கொள்ளப் படுவதில்லை. கலந்தாய்வு முறையில் பணியிட மாறுதல் வழங்கப்படுவதில்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கருணை உள்ளவர்கள் மட்டுமே அவர்கள் விரும்பும் இடங்களில் பணிபுரிய முடிகிறது என கீழமை நீதிமன்ற நீதிபதிகளிடையே கவலை கலந்த மனநிலை காணப்படுகிறது. அவர்கள் கடுமையான மனஅழுத்தத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுடைய பணி விதிகள் கடுமையாக இருக்கிறது.  ஓவ்வொரு மாதமும் எவ்வளவு வழக்குகள் முடிக்கவேண்டுமென்று வரையறை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அந்த நீதிபதிகளின் பதவி உயர்வு தடைபடுகிறது.

சுதந்திரமாக செயல்பட வேண்டிய நீதிபதிகள் நிர்பந்தங்களுக்கு உட்பட்டு அவலமான சூழல் நிலவுகிறது. அதுமட்டுமின்றி, பதவி உயர்வில் பாகுபாடு காட்டப்படுவதாக கீழமை நீதிமன்ற நீதிபதிகளிடையே வருத்தம் நிலவுகிறது. இந்நிலை உடனடியாக மாற்றப்பட்டால் தான் கீழமை நீதிபரிபாலன முறையை வலுப்படுத்த முடியும். எனவே, கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி மன அழுத்தத்தை போக்க வேண்டும் என இக்கூட்டம் கோருகிறது.

 

10. தமிழ்நாட்டில் பார்கவுன்சில் தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்

 தமிழ்நாட்டில் பார்கவுன்சில் தேர்தல் நடைபெற்று 15 மாதங்கள் கடந்தும் வெற்றிபெற்றவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. பார்கவுன்சில் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற 25 உறுப்பினர்களுக்கும் இன்னும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படவில்லை. தமிழத்தில் முறைப்படி பார்கவுன்சில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போதிலும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட குழுக்கள் தான் பார்கவுன்சில் நிர்வாகத்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையை மாற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பார் கவுன்சில் உறுப்பினர்களை அவர்களுக்குரிய அதிகாரத்துடன் செயல்பட உச்சநீதிமன்றம் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

 

11.  தமிழ்நாட்டில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ  சமூகப் பாதுகாப்பு படை

தமிழகத்தில் பொய், வெறுப்பு, சாதி அரசியல்களால் ஒரு தரப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப் படுகின்றனர்; பழிவாங்கப்படுகின்றனர். அவர்களுக்கு சட்ட உதவி வழங்குவதை முதன்மைக் கடமையாக வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை கருதுகிறது. அதற்காக வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் சார்பில் சமூகப் பாதுகாப்புப் படை என்ற புதிய அமைப்பு தொடங்கப்படுகிறது. காவல்நிலைய அளவில் தொடங்கி மாநில அளவு வரை இந்த அமைப்பின் சார்பில் துணைக் குழுக்கள் அமைக்கப்படும். அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சட்ட  உதவி உள்ளிட்ட உதவிகளை வழங்குவர்.

 

12. மருத்துவர் அய்யா அவர்களின் 80&ஆவது பிறந்தநாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும்

 வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் நிறுவனரும் தமிழகத்தில் மட்டுமின்றி  இந்தியா முழுவதும் தந்தை பெரியாருக்குப் பிறகு சமூகநீதிக்காக போராடி வரும் சமூகநீதிப் போராளியுமான மருத்துவர் அய்யா அவர்கள் 80 வயது நிறைவு நாள் ஜீலை 25ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளை சமூகநீதி நாளாக  தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது என வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை தீர்மானிக்கிறது. ஜூலை 25&ஆம் நாளை சமூகநீதி நாளாக அறிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை உறுதியேற்றுக் கொள்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

'மாமன்னன் படத்தில் நடித்தால் மட்டும் போதாது'-அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட பாமகவின் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''விளையாட்டு துறை அமைச்சர்  இன்னும் விளையாட்டு பிள்ளையாகவே இருக்கிறார். அதற்கு மேல் வளர மாட்டேன் என்கிறார். தர்மபுரியில் வந்து பேசிவிட்டு போகிறார். என்னுடைய தந்தை முதலமைச்சர்  உறுதியாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க சட்ட போராட்டம் நடத்துவார் என்று சொல்லியுள்ளார். உங்களுக்கும் சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கு. முதலமைச்சர் எதுக்கைய்யா சட்ட போராட்டம் நடத்த வேண்டும். கையெழுத்து போட வேண்டும் அவ்வளவு தானே.

கையெழுத்து போடும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் ஒரு மிகப்பெரிய தீர்ப்பை கொடுத்திருந்தார்கள். அந்த தீர்ப்பில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் கிடையாது. தரவுகளை சேகரித்து நீங்கள் அதை நியாயப்படுத்தி உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன்பிறகு என்ன உங்களுக்கு சட்ட போராட்டம் இருக்கிறது. தரவுகள் எங்கே இருக்கிறது? தரவுகள் கம்ப்யூட்டரில் இருக்கிறது. கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும். ஒரு மணி நேரமாகும். நான் முதலமைச்சராக இருந்தேன் என்றால் ஒரு மணி நேரத்தில் கையெழுத்து போட்டுவிடுவேன். தேர்தல் வந்தால் மட்டும் வன்னியர்களை பற்றி ஞாபகம் வரும்; தேர்தல் வந்தால் மட்டும் தலித்துகளை பற்றி ஞாபகம் வரும். மாமன்னன் படத்தில் நடித்தால் போதுமா? பட்டியலின மக்களுக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டாமா? தெரிந்தால் தானே மரியாதை கொடுப்பீர்கள். இது சினிமா அல்ல இது வாழ்க்கை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டிலேயே அதிகமாக செய்த கட்சி பாமக தான்'' என்றார்.

Next Story

“அ.தி.மு.க வாக்காளர்களே..” - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Anbumani Ramadoss appeal to ADMK voters

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அந்த வகையில், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க கூட்டணியில் இருக்கின்ற பா.ம.க வேட்பாளரான சவுமியா அன்புமணியை ஆதரித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பாலக்கோடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “தருமபுரி தொகுதியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார். சவுமியா அன்புமணி ஐ.நா சபைக்கு சென்று பெண் உரிமைகளை பற்றியும், பெண் குழந்தைகளை பற்றியும் குரல் கொடுத்தவர். எங்கே பெண்களுக்கு பிரச்சனை என்றாலும், என்னை விட அவர் தான் முதலில் சென்று இருப்பார். 

நாம் கால காலமாக திமுக, அதிமுக என மாறி மாறி வாக்களித்து விட்டோம். நமது வாழ்க்கை அப்படியே தான் இருக்கிறது. எந்த விடியலும் இல்லை. உணர்வுப்பூர்வமாக உங்களின் முன்னேற்றத்திற்காக நாங்கள் அரசியல் செய்கிறோம். நல்ல முடிவை எடுங்கள். அதிமுக வாக்காள பெருமக்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். இந்த தேர்தலில் உங்களின் வாக்குகளை வீணாக்க வேண்டாம். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும் வரப்போவதில்லை. பிரதமராகவும் வரப்போவதில்லை. ஆகையால் இந்த முறை எங்களுக்கு வாக்களித்து வெற்றிப் பெறச் செய்யுங்கள்” என்று கூறினார்.