பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: ‘’ இந்தியாவின் தலைசிறந்த வேளாண் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் 33ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. 2017&ஆம் ஆண்டில் ஏழாவது இடத்தில் இருந்த இந்த பல்கலைக்கழகம் அடுத்த ஆண்டில் 33-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது கவலையளிக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pmk_11.jpg)
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஒருகாலத்தில் தமிழகத்தின் அடையாளமாக திகழ்ந்தது. ஆனால், காலப்போக்கில் அதன் தரம் படிப்படியாக குறைந்து அடையாளம் இல்லாத சாதாரண கல்வி நிறுவனங்களில் ஒன்றாக மாறி வருகிறது. இதற்கு காரணம் அப்பல்கலைக்கழக நிர்வாகத்தின் தன்னிச்சையான செயல்பாடுகளும், திறமையானவர்களை பல்கலைக்கழக நிர்வாகத்திற்குள் நுழைய அனுமதிக்காமல் தடை போடுவதும் தான் என்ற கருத்து வேளாண் விஞ்ஞானிகளிடையே நிலவுகிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கடந்த பல ஆண்டுகளாக இரும்புத்திரை நிறுவனமாக மாறி வருகிறது. இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் எந்தப் பதவிக்கும் தகுதியுடைய யாரும் விண்ணப்பிக்கலாம் என்பது தான் விதியாகும். ஆனால், கோவை வேளாண் பல்கலை.யில் இயக்குனர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள் போன்ற பதவிகளுக்கு வெளியாட்கள் எவரும் விண்ணப்பிக்கவே முடியாது என்ற நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே பதவியில் இருப்பவர்கள் மட்டும் தான் பதவி உயர்வின் அடிப்படையிலும், சிறப்பு ஆள்தேர்வு மூலமாகவும் நியமிக்கப்படுகின்றனர். உதவி பேராசிரியர்கள் பணிக்கு மட்டும் தான் வெளியாட்கள் விண்ணப்பிக்கலாம்; மற்ற நியமனங்கள் அனைத்தும் பல்கலைக் கழகத்தில் ஏற்கனவே உள்ளவர்களை வைத்து மேற்கொள்ளப்படுகிறது. இந்த தவறான அணுகுமுறையே வீழ்ச்சிக்கு முதல் காரணமாகும்.
எந்த ஒரு நிறுவனத்திலும் புதிய ரத்தங்கள் பாய்ச்சப்பட்டு, அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் அறிவியலாளர்களிடையே போட்டி நிலவினால் மட்டும் தான் அதிக அளவில் ஆராய்ச்சிகள் நிகழ்த்தப்படும்; அதன்பயனாக புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்படும். ஆனால், வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர்பவர்களில் இருந்து தான் அடுத்தடுத்த நிலை ஆசிரியர் மற்றும் அறிவியலாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதால், எப்படியும் நமக்கு பதவி உயர்வு நிச்சயம் என்ற மனநிலை அங்குள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் அந்தப் பல்கலை.யில் சொல்லிக்கொள்ளும்படியாக ஆராய்ச்சிகளோ, கண்டுபிடிப்புகளோ நிகழ்த்தப் படுவதில்லை.
ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் பலர், கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பணியில் சேர தயாராக உள்ளனர். தமிழகத்திலேயே மண் ஆய்வு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் வல்லுனர்கள் பலரும் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சேவை செய்ய தயாராக உள்ளனர். ஆனால், உதவிப் பேராசிரியர் தவிர பிற உயர்பதவிகளுக்கு வெளியாட்களை நியமிப்பதில்லை என்ற பொருந்தாத விதியால் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தரமும், தரவரிசையும் சீரழிந்து கொண்டே செல்கிறது. இதனால் தமிழக வேளாண் வளர்ச்சிக்கு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து எந்த பங்களிப்பும் கிடைப்பதில்லை என்பது மிகவும் வருத்தமான உண்மை.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்த நிலையை மாற்றி தகுதியும், திறமையும் உள்ள எவர் வேண்டுமானாலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் எந்த பதவியிலும் சேரலாம் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம் திறமையானவர்களை கொண்டு வந்து கல்வியிலும், ஆராய்ச்சியிலும் இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தை உயர்த்த அரசு முன்வர வேண்டும்.
இதுதவிர, தமிழகத்தின் ஒவ்வொரு மண்டலமும் ஒவ்வொரு வகையான மண் தன்மையையும், பயிர் கலாச்சாரத்தையும் கொண்டிருப்பதால் அவை சார்ந்த அனைத்து தேவைகளையும் வேளாண் பல்கலையால் நிறைவேற்ற முடியவில்லை. இந்தத் தேவைகளை நிறைவேற்ற வசதியாக தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு வேளாண் பல்கலைக்கழகத்தை அமைக்க வேண்டும். இப்போது கோவையில் உள்ள பல்கலைக்கழகம் தவிர தஞ்சாவூர், வேலூர், நெல்லை ஆகிய நகரங்களில் புதிய வேளாண்மை பல்கலைக்கழகங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு வேளாண் கல்லூரிகள் ஒன்று கூட இல்லை. தமிழகத்தில் இப்போது உள்ள 14 வேளாண் கல்லூரிகளும் வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரிகள் ஆகும். இதனால் அக்கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் பல தடைகள் உள்ளன. அதுமட்டுமின்றி, திருச்சிக்கு வடக்கே உள்ள 11 மாவட்டங்களுக்கும் சேர்த்து திருவண்ணாமலையில் மட்டும் தான் ஒரே ஒரு வேளாண் கல்லூரி உள்ளது. இது போதுமானதல்ல. அதனால், இப்போது இருக்கும் கல்லூரிகளையும் சேர்த்து, இரு மாவட்டங்களுக்கு ஒரு வேளாண் கல்லூரியை அரசு கல்லூரியாக தொடங்க வேண்டும். இந்தக் கல்லூரிகளும், அவை இணைக்கப்பட்ட வேளாண் பல்கலைக்கழகமும் சேர்ந்து அந்த மண்டலத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வேளாண்மை வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
தமிழகத்தின் வேளாண் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் இந்தக் கோரிக்கைகளை சிறப்புத் திட்டமாக தயாரித்து விரைந்து செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)