Skip to main content

   6 ஆண்டுகளாக ஊதியம் இல்லை: கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு புத்துயிரூட்டுக! -ராமதாஸ்

Published on 29/07/2019 | Edited on 29/07/2019

 

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:  ‘’ தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வீட்டு வசதி கிடைப்பதற்கு முக்கிய ஆதாரமாக திகழ்ந்த தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் நிலைமை மிகவும் பரிதாபமானதாக மாறியிருக்கிறது. அந்த சங்கங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக  ஊதியம் வழங்கப்படாத நிலையில், அன்றாட செலவுகளுக்கு கூட நிதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் மொத்தம் 737 கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில்  537 சங்கங்கள், அதாவது 73 விழுக்காடு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதன் காரணமாக 356 சங்கங்களில் பணியாற்றி வரும் 1014 ஊழியர்களுக்கு, அதிகபட்சம் கடந்த 6 ஆண்டுகளாக  ஊதியம் வழங்கப்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கான ஊதிய நிலுவை ரூ.55 கோடியாக அதிகரித்திருக்கிறது. இதனால் அவர்களின் குடும்பங்கள் கடுமையான வறுமையில் வாடி வருகின்றன. குழந்தைகளின் கல்வித் தேவைகளைக் கூட அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.

 

r

 

கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் இந்த அவல நிலைக்கு காரணம், அவற்றின் மூலம் வழங்கப்பட்ட  வீட்டுக் கடன் சரியாக வசூலிக்கப்படாததும், வேறு சில நிர்வாகக் குளறுபடிகளும் தான். கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் மூலம் வீட்டுக்கடன் பெற்றவர்களில், 57,387 பேர் ரூ.1,108 கோடி கடனை பல ஆண்டுகளாக செலுத்தாததால், அவற்றின் மதிப்பு வட்டியுடன் சேர்த்து ரூ.2,839 கோடியாக உயர்ந்து உள்ளது. கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு பெரிய அளவில் சொந்த முதலீடு இல்லாததாலும், வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கடன் திரும்பி வராமல் முடங்கி விட்டதாலும், சங்கங்களின் வருவாய் முற்றிலுமாக குறைந்து விட்டது. இதனால் கூட்டுறவு சங்கங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளன.

 

1948-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கூட்டுறவு வீட்டு வசதி வாரியங்கள் 2007-ஆம் ஆண்டு வரை லாபத்தில் தான் இயங்கின. இந்த காலகட்டத்தில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் ஈட்டிய லாபத்தின் மதிப்பு மட்டும் ரூ.12,000 கோடிக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடந்த 2007-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தின் போது வீட்டு வசதித் திட்டங்களை செயல்படுத்தும், அதிகாரம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களிடமிருந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றப்பட்டது தான் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் நலிவடைவதற்கு காரணமாகும்.

 

கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் வீட்டுக் கடனை செலுத்தாமல் நிலுவை வைத்திருப்பவர்களில்  பெரும்பான்மையினர் உயர் வருவாய் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர் நிலுவை வைத்துள்ள தொகை ரூ.951.82 கோடி ஆகும். குறைந்தபட்சம் இந்தத் தொகையை வசூலித்தால் கூட, அனைத்து சங்கங்களின் கடன்களையும் அடைத்து விட்டு, சங்கங்களை மீண்டும் லாபத்தில் இயக்க முடியும். ஆனால், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் பெறப்பட்ட கடன்களை தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தள்ளுபடி செய்யப் போவதாக பொய் பிரச்சாரம் செய்து வருவதால் அதை நம்பி பலரும் கடன் தவணையை திரும்பச் செலுத்த தயங்கின்றனர். இது தான் இந்த சங்கங்களுக்கு புத்துயிரூட்ட தடையாக உள்ளது.

 

   6 ஆண்டுகளாக ஊதியம் இல்லை: கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு புத்துயிரூட்டுக! -ராமதாஸ்

கடந்த காலங்களில் வீட்டுக்கடன் வழங்குவதற்காக பொதுத்துறை வங்கிகளிடமிருந்து ரூ.5078 கோடி  கடன் வாங்கிய கூட்டுறவு சங்கங்கள் அவற்றில் ரூ.438 கோடியை திரும்பச் செலுத்தவில்லை. இந்த  கடனை திரும்ப செலுத்துவதுடன், கூட்டுறவு சங்கங்களுக்கு குறைந்த அளவில் மறு முதலீடும் வழங்கப் பட்டால் அவை மீண்டும் லாபத்தில் இயங்கத் தொடங்கி விடும். தமிழக அரசின் வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரம் மாவட்ட ஊராட்சி முகமைகளிடருந்து கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு மாற்றப்படும் பட்சத்தில் அச்சங்கங்கள் வலிமையடைவதுடன், புதிய வேலைவாய்ப்புகளும் கூட உருவாகும்.

 

எனவே, கூட்டுறவுத் துறை உயரதிகாரிகள் குழுமை அமைத்து, அதன் மூலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு புத்துயிரூட்டும் திட்டத்தை வகுத்து, உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதற்கு முன்பாக கூட்டுறவு வீட்டு வசதி சங்க பணியாளர்களுக்கு நிலுவை ஊதியத்தை அரசு வழங்க வேண்டும். ’’a

சார்ந்த செய்திகள்

Next Story

“மத்திய அரசை எதிர்பார்க்க வேண்டாம்” - முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 21/10/2023 | Edited on 21/10/2023

 

Ramadas has insisted Tamil Nadu government should conduct the caste-wise census

 

“மத்திய அரசை எதிர்பார்க்க வேண்டாம்; தமிழகஅரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “தேசிய அளவில் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். சமூகநீதியை நிலை நிறுத்தவும்,  வளர்ச்சியின் பயன்களை அடித்தட்டு மக்கள்வரை கொண்டு செல்லவும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்று ஒப்புக்கொண்டிருப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் பாராட்டுகிறேன்.

 

அதேநேரத்தில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அனைத்து அதிகாரங்களும், கட்டமைப்பும் தமிழக அரசுக்கே இருக்கும் நிலையில், தமிழக அரசே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் என்று அறிவிக்காமல், மத்திய அரசு இந்தக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுவது தாம் விளையாட வேண்டிய பந்தை, பிரதமர் பக்கம் திருப்பி விடும் செயல் என்பதைத் தவிர வேறு எதுவும் அல்ல. இது கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதற்கு ஒப்பானது.  சமூகநீதியில் அக்கறை கொண்ட எந்த முதலமைச்சரும் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள்.

 

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசே நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதன் மூலம் இந்த சிக்கலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்றிருக்கிறார். 2004-ஆம் ஆண்டில் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்த பாட்டாளி மக்கள் கட்சி, இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக 15 ஆண்டுகளுக்கு முன் 24.10.2008 -ஆம் நாள்  அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இராமதாஸ், 50-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை எனது ஆணையின்படி, சந்தித்து 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று 140க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவைக் கொடுத்தார்.

 

பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை பரிசீலிப்பதாக சிவராஜ் பாட்டீலும் அப்போது ஒப்புக்கொண்டார். அதன்பின்னர் மக்களவையில் இதுகுறித்து பிரச்சினை எழுப்பப்பட்ட போது பா.ம.க.வின் கோரிக்கைக்கு லாலு பிரசாத், சரத்யாதவ், முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவளித்தனர். அதைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த அரசு ஒப்புக்கொண்டது. மக்களவையில் இதுகுறித்த வாக்குறுதியை 2009-10 ஆம் ஆண்டில் அப்போதைய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி அளித்தார்.

 

அதைத் தொடர்ந்து 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு தனியாகவும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தனியாகவும் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவ்வாறு செய்யாமல் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு என்ற பெயரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் விவரங்களும் கூட இன்று வரை வெளியிடப்படவில்லை.

 

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசை எத்தனை முறை வலியுறுத்தினாலும்,  அதற்கு மத்திய அரசே ஒப்புக்கொண்டாலும் இறுதியில் அந்த முயற்சியை மத்திய அரசே சீர்குலைத்து விடும். கடந்த காலங்களிலும் இது தான் நடந்தது; இனிவரும் காலங்களிலும் அது தான் நடக்கும். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று 2021-ஆம் ஆண்டில்  பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், அம்மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், அதன் பின் ஓராண்டுக்கு மேலாகியும்  எதுவும் நடக்காததால் தான் பீகார் அரசின் சார்பில் சாதிவாரி  கணக்கெடுப்பை நடத்தினார்.

 

ஆந்திர மாநில அரசும் இதுதொடர்பாக அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட தீர்மானத்திற்கு எந்த பதிலும் மத்திய அரசிடமிருந்து வரவில்லை என்பதைக் காரணம் காட்டித் தான் வரும் நவம்பர் 15-ஆம் தேதி முதல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. நேரிலும், சட்டப்பேரவைத் தீர்மானத்தின் மூலமாகவும் வலியுறுத்திய பிறகும் ஏற்கப்படாத சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை, தமது கடிதத்தைக் கண்டவுடன் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்று முதலமைச்சர் நம்பிக் கொண்டிருப்பது விந்தை தான்.

 

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்பட்டால், அதை எண்ணி மகிழ்ச்சியடையும் முதல் மனிதன் நானாகத் தான் இருப்பேன். ஆனால், அதற்கான  வாய்ப்புகள் கண்களுக்கு எட்டியவரை தென்படாத நிலையில், அதை நம்பிக் கொண்டு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகவே அமையும். தமிழக அரசு, அதன் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்.

 

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் இருப்பதாக பிகார் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தீர்ப்பு மிகவும் விரிவாகவும், விளக்கமாகவும் இருப்பதால், அதனடிப்படையில் நடத்தப்பட்ட பிகார் சாதிவாரி கணக்கெடுப்பின் விவரங்களை வெளியிடவோ, அதனடிப்படையில் முடிவுகளை எடுக்கவோ தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது. இவ்வளவுக்குப் பிறகும்  மக்கள்தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் இருப்பதால் மத்திய அரசு நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பு தான் சட்டப்பூர்வமானதாக இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது மாநில அரசின் உரிமைகளை  விட்டுக் கொடுப்பதற்கு ஒப்பானதாகும்.

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நான் மீண்டும், மீண்டும் கூறிக் கொள்வது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கே உண்டு, அதற்கு எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை என்பதைத் தான். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி தான் கர்நாடகம், பீகார், ஒடிஷா ஆகிய மாநிலங்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. ஆந்திரா, இராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவுள்ளன. எனவே, இனியும்  மத்திய அரசுக்கு கடிதம் எழுதாமல், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்தும்  என்று அறிவித்து, செயல்படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Next Story

'நீரும் வந்து சேரவில்லை; கண்துடைப்பு இழப்பீடு கூடாது' - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

nn

 

வறட்சியால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வாடிய சுமார் 40,000 ஏக்கர் குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5,400 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கர்நாடகத்திடமிருந்து உரிய காவிரி நீரை பெற்றுத் தர தவறியதால் 2 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் கருகி வரும் நிலையில், 40,000 ஏக்கருக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பதை கண்துடைப்பாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

 

தமிழ்நாட்டில் கடந்த காலங்களை விட அதிகமாக நடப்பாண்டில் 5.20 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் குறுவை நடவு செய்யப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஜூன் 12-ஆம் நாள் தண்ணீர் திறந்து விடப்பட்டதும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டதும் இதற்கு காரணம் ஆகும். ஆனால், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யாததாலும், இருக்கும் நீரை பகிர்ந்து கொள்ள கர்நாடக அரசு மறுத்து விட்டதாலும் நடப்பு சாகுபடி ஆண்டில், இன்று வரை தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 127.05 டி.எம்.சி நீரில் 40 டி.எம்.சி தண்ணீர் கூட மேட்டூர் அணைக்கு வந்து சேரவில்லை.

 

கடந்த ஒன்றரை மாதங்களாகவே காவிரியில் போதிய அளவில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்பதால் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்கள் கருகத் தொடங்கி விட்டன. முன்கூட்டியே நடப்பட்ட பயிர்கள், நிலத்தடி நீரைக் கொண்டு பாசன வசதி பெற்ற பயிர்கள் என ஒட்டுமொத்தமாக இரு லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை பயிர்கள் கடந்த காலங்களில் அறுவடை செய்யப்பட்டு விட்டன. மீதமுள்ள மூன்றரை லட்சம் ஏக்கர் பயிர்கள் வாடிக் கொண்டிருக்கின்றன. அவற்றிலும் கூட சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்களை ஓரளவு பாதிப்புடன் காப்பாற்றி விட முடியும்.  

 

அதே நேரத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33 அடியாகவும், நீர்இருப்பு 9 டி.எம்.சியாகவும் குறைந்து விட்ட நிலையில், அணையிலிருந்து காவிரியில் நீர் திறக்கப்படுவது அடுத்த ஓரிரு நாட்களில் நிறுத்தப்படும். அத்தகைய சூழலில் காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடை செய்ய தயாராகாத 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவைப் பயிர்களை காப்பாற்ற முடியாது.  அவ்வாறு  இருக்கும் போது 40 ஆயிரம் ஏக்கரில் மட்டும் தான் பாதிப்பு என்று எந்த வகையில் அரசு கணக்கிட்டது என்பது தெரியவில்லை. அதுமட்டுமின்றி, சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5400 மட்டும் தான் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது உழவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்.

 

காவிரியில் தண்ணீர் வராததால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ. 40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டிய தார்மீகக் கடமை தமிழக அரசுக்கு இரு வழிகளில் உள்ளது. முதலாவது, கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் இன்று காலை நிலவரப்படி கூட 66 டி.எம்.சி தண்ணீர் உள்ள நிலையில், அங்கிருந்து காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் பெற்றுத்தர வேண்டிய கடமையில் தமிழ்நாடு அரசு தோற்றுவிட்டது. அத்தகைய கடமை தவறுதலுக்காகவே தமிழக அரசு இழப்பீடு தர வேண்டும்.

 

இரண்டாவதாக, குறுவை நெற்பயிர்களுக்கு தமிழக அரசு காப்பீடு வழங்கியிருந்தால், தண்ணீரின்றி கருகிய பயிர்களுக்கு காப்பீடு நிறுவனங்களிடமிருந்து  ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் இழப்பீடு கிடைத்திருக்கும். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குறுவை நெல்லுக்கு காப்பீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு குறுவைக்கு காப்பீடு வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டது. அதுமட்டுமின்றி, குறுவை பயிர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதை இயற்கைப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசு ஈடு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கான இழப்பீட்டை அரசு தான் வழங்க வேண்டும்.

 

பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கான இழப்பீட்டை வழங்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கும் நிலையில், வெறும் 40,000 ஏக்கருக்கு மட்டும் ஏக்கருக்கு ரூ.5400 மட்டும் இழப்பீடு வழங்குவது எந்த வகையில் நியாயம்? இந்த தொகை நடவு நட்ட செலவை ஈடு செய்வதற்குக் கூட போதுமானதல்ல.

 

ஓர் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய ரூ.25,000 வரை செலவு ஆவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்.எல்.சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்தில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்ட போது, அப்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அவற்றைக் கருத்தில் கொண்டு, வறட்சியால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.