பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: ’’2021-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. ஆனால், மத்திய அரசு உறுதியளித்தவாறு மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணும் வகையில் நடத்தப்படாது என்று வெளியாகும் செய்திகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. இவை உண்மையாக இருந்தால் மத்திய அரசின் நிலை கண்டிக்கத்தக்கது.
உலகின் பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா பல வழிகளில் மாறுபட்ட நாடு ஆகும். பல்வேறு இனங்கள், மதங்கள், கலாச்சாரங்கள், சமூக அடுக்குகளைக் கொண்ட நாடான இந்தியாவில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை முன்னேற்றுவதற்கு சமூகநீதி வழங்க சாதிவாரியான மக்கள் தொகை மிகவும் அவசியம் ஆகும். ஆங்கிலேயர் ஆட்சியில் 1931-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பிறகு கடந்த 90 ஆண்டுகளாக இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப் படவில்லை. இதனால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட விஷயங்களில் முழுமையான புள்ளிவிவரங்கள் கிடைக்காமல் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டன.
இத்தகைய சிக்கல்களுக்கு முடிவு கட்டும் வகையில், 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அவற்றை ஓரளவுக்கு மட்டும் ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணும் வகையில் நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்பை பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றிருந்த நிலையில், அது செயல்படுத்தப்படாத வெற்று அறிவிப்பாகிவிடுமோ என்ற பெருங்கவலை ஏற்படுகிறது.
மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு முன்பாக அதில் என்னென்ன சிக்கல்கள் ஏற்படும் என்பதை அறிந்து கொள்வதற்காக மாதிரி கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அத்தகைய கணக்கெடுப்பு தமிழகத்தில் மறைமலைநகர் நகராட்சி, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆகிய 3 பகுதிகளில் உள்ள 293 கணக்கெடுப்பு வட்டங்களில் ஆகஸ்ட்12-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்காக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருட்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை தனியாக கணக்கெடுப்பதற்கான வசதி எதுவும் இல்லை என்று மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருவேளை முதன்மை கணக்கெடுப்பின் போதாவது இந்த வசதி ஏற்படுத்தப்படுமா? என்ற விவரமும் தெளிவுபடுத்தப்படவில்லை.
வழக்கமாக மாதிரி கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்படுகிறதோ, அதே முறையில் தான் முதன்மைக் கணக்கெடுப்பும் நடத்தப்படும். அதனால், இந்த மாதிரிக் கணக்கெடுப்பின் போது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் விவரங்கள் கணக்கெடுக்கப்படவில்லை என்றால், முதன்மைக் கணக்கெடுப்பிலும் இந்த விவரங்கள் இடம் பெறாது. இது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு செய்யப்படும் துரோகமாக அமையும்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பே சாதிவாரியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. இதற்கான பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 140 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டிய அப்போதைய மத்திய அமைச்சர் அன்புமணி இராமதாஸ், அது தொடர்பான மனுவை 2008-ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் நேரில் வழங்கினார். பின்னர் மக்களவையில் இதுகுறித்து பிரச்சினை எழுப்பப்பட்ட போது லாலு பிரசாத் யாதவ், சரத்யாதவ், முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த அரசு ஒப்புக்கொண்டது. ஆனால், அவ்வாறு செய்யாமல் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு என்ற பெயரில் எதற்கும் உதவாத சடங்கு ஒன்றை அப்போதைய அரசு நடத்தி மக்களை ஏமாற்றியது.
அதனால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து போடும் வகையில் தான் இப்போது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணும் வகையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவித்தார். அதன்படி கணக்கெடுப்பு நடத்தப்படாவிட்டால் அது அனைத்து மக்களுக்கும் சமூக நீதி கிடைப்பதற்கு தடையை ஏற்படுத்தும்.
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஓ.பி.சி. கணக்கெடுப்பை விட முழுமையான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது தான் சரியானதாக இருக்கும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இப்போது 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் இதை பல்வேறு தொகுப்புகளாக பிரித்து வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்காகத் தான் நீதிபதி ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தொகுப்பு இட ஒதுக்கீடு வழங்கப்படும் போது ஒவ்வொரு சாதிக்கும் எவ்வளவு விழுக்காடு என்பதைத் தீர்மானிக்க அவர்களின் எண்ணிக்கை அவசியமாகும். அதுதவிர உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் மக்கள்தொகையை தீர்மானிக்கவும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம் ஆகும்.
ஓபிசி கணக்கெடுப்புடன் ஒப்பிடும் போது சாதிவாரி கணக்கெடுப்பு கடினமானது அல்ல. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கணக்கெடுப்போர் நேரடியாக அடையாளம் காண முடியாது. மாறாக, ஓபிசி பிரிவில் உள்ள சாதிகளின் பட்டியலை மக்களிடம் படித்துக் காட்டி, அப்பட்டியலில் உள்ள சாதி தான் தங்களின் சாதி என்று மக்கள் கூறினால், அவர்கள் பெயர் ஓபிசி பிரிவில் சேர்க்கப்படும்; அத்துடன் அவர்கள் தெரிவிக்கும் சாதியையும் சேர்த்து விட்டால் அது சாதிவாரி கணக்கெடுப்பாக மாறி விடும். எனவே, 2021&ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக மேற்கொள்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும்; அதற்கான ஏற்பாடுகளை இப்போதிலிருந்தே தொடங்க வேண்டும்.’’