Advertisment

தேசிய மருத்துவ ஆணையம் அமைந்தால் மருத்துவப் படிப்பு ஏலத்தில் விற்கப்படும்! ராமதாஸ் 

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: ’’மருத்துவக் கல்வியை முறைப்படுத்துவதற்கான சட்டம் என்று கூறி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விரைவில் நிறைவேற்றவிருக்கும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் சமூகநீதிக்கு ஆபத்தான அம்சங்கள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், மருத்துவப் படிப்புகள் முறைப்படுத்தப்படுவதற்கு பதிலாக ஒட்டுமொத்தமாக சீரழிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

Advertisment

தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத பிரிவுகள் ஏராளமாக உள்ளன. ஆனாலும் அவற்றில் முதன்மையானது தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரம் மாநில அரசிடமிருந்து பறிக்கப்படும் என்பது தான். இப்போதுள்ள மருத்துவக்குழு விதிகளின்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடமிருந்து தேசிய மருத்துவ ஆணையத்துக்கு மாற்றப்படவுள்ளது.

Advertisment

r

அதுவும் கூட, அனைத்து மருத்துவ இடங்களுக்கும் மருத்துவ ஆணையம் கட்டணம் நிர்ணயிக்காதாம். மாறாக தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களில் பாதிக்கு மட்டும் தேசிய மருத்துவ ஆணையம் கட்டணம் நிர்ணயிக்குமாம். மீதமுள்ள இடங்களின் கட்டணத்தை சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று சலுகை காட்டப்பட்டிருக்கிறது. இதனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணம் இப்போது இருப்பதைவிட பல மடங்கு அதிகரிக்கக்கூடும்.

தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 100% இடங்களுக்கும் இந்தக் குழு தான் கட்டணங்களை நிர்ணயிக்கும். இந்த முறை காரணமாக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணக் கொள்ளை ஓரளவு தடுக்கப்பட்டு வருகிறது. இந்த முறை மாற்றப்படும் பட்சத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் படிக்க முடியாது.

உதாரணமாக, தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 65% அரசு ஒதுக்கீட்டுக்கும், 35% நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படுகின்றன. இரு வகை இடங்களையும் தமிழக அரசே கலந்தாய்வு மூலம் நிரப்பும். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அதிகபட்சமாக ரூ.4 லட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.12 லட்சமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதனால், அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் கடன் வாங்கியாவது மருத்துவப் படிப்பை படிக்க முடிகிறது.

ஆனால், தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை மாநில அரசால் நிர்ணயிக்க முடியாது. 50% இடங்களுக்கான கட்டணத்தை மருத்துவ ஆணையம் நிர்ணயிக்கும். தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.25 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால், இனி வரும் காலங்களில் தனியார் கல்லூரிகள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50% இடங்களுக்கான கட்டணமாக ரூ.25 லட்சம் நிர்ணயிக்கப்படலாம். மீதமுள்ள 50% இடங்களுக்கான கட்டணத்தை கல்லூரி நிர்வாகங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்பதால், அவற்றுக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. இது தான் மிகப்பெரிய கல்விக் கட்டண கொள்ளையாக அமையும்.

தனியார் கல்லூரிகளில் 65% இடங்களுக்கு ரூ.4 லட்சம் வரை ஆண்டுக்கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், ஓரளவு ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து மாணவர்கள் மருத்துவம் படிக்க முடிகிறது. அதேநேரத்தில் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ரூ.25 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப் படுவதால் அங்கு ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களால் சேர முடிவதில்லை. மாறாக, நீட் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்த பணக்கார மாணவர்கள் மட்டும் தான் தங்களிடம் உள்ள பணத்தைக் கொட்டி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேருகின்றனர். இனிவரும் காலங்களில் தனியார் கல்லூரிகளில் குறைந்தபட்ச கட்டணமே ரூ.25 லட்சம் என்ற அளவில் தான் இருக்கும் என்பதால் ஏழை & நடுத்தர மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தாலும் அவர்களால் மருத்துவப் படிப்பை படிக்க முடியாது. மாறாக பணக்கார மாணவர்கள் நீட் தேர்வுகளில், இதுவரை எடுத்த மதிப்பெண்களை விட குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் பணத்தைக் கொட்டி மருத்துவம் படிக்க முடியும். இதுவா சீர்திருத்தம்.... இதுவா சமூகநீதி?

இந்தியாவில் மொத்தமுள்ள மருத்துவக் கல்வி இடங்களில் 40% மட்டுமே அரசுக் கல்லூரிகளில் உள்ளது. மீதமுள்ள 60% இடங்கள் தனியாரிடம் தான் உள்ளன. தனியாரிடம் உள்ள 60% இடங்களையும் ஏலத்தில் விடாத குறையாக மிக அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு தான் தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் வகை செய்கிறது. தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் கட்டணக் கொள்ளை நடப்பதால் அதைத் தடுக்கும் வகையில் அவற்றுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்று தான் பா.ம.க. உள்ளிட்ட சமூகநீதிக் கட்சிகள் வலியுறுத்தின. அதை செய்யாமல் மாநில அரசுகளுக்கு இதுவரை இருந்த அதிகாரத்தையும் பறிப்பது என்ன நீதி?

தனியார் கல்லூரிகளுக்கு காட்டப்படும் இச்சலுகைகள் பற்றி கேட்ட போது, மருத்துவக் கல்வி கட்டணத்தை குறைவாக நிர்ணயித்தால் தனியார்துறையினர் மருத்துவக் கல்லூரி தொடங்க முன்வர மாட்டார்கள்? என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. ஏழை & நடுத்தர மாணவர்கள் மருத்துவம் படிப்பதை விட தனியார் நிறுவனங்கள் மருத்துவக் கல்லூரி தொடங்கி கொள்ளையடிக்க அனுமதிப்பது தான் மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. இத்தகைய அரசு எப்படி மக்கள் நலம் விரும்பும் அரசாக இருக்க முடியும்?

மத்திய அரசு கொண்டு வந்த நீட் சட்டமாக இருந்தாலும், கட்டண நிர்ணய முறையாக இருந்தாலும் அவை ஏழை & நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை கலைப்பவையாகவே உள்ளன. இந்த நிலையை மாற்ற மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமே ஒப்படைப்பதுடன், நீட் தேர்வும் ரத்து செய்யப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் அதற்கேற்ற திருத்தங்களை அரசு செய்ய வேண்டும்.’’

ramadas
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe