Advertisment

தமிழகத்தில் தனியார் வேலைவாய்ப்புகளில் 80% தமிழர்களுக்கே வழங்க சட்டம் தேவை!ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ’’ஆந்திராவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள வேலைவாய்ப்புகளில் 75% ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. இது தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு வேலை தேடிச் செல்பவர்களை பாதிக்கும் என்றாலும் கூட, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது.

Advertisment

ர்

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தனியார்துறை வேலைவாய்ப்புகளில் குறைந்தது 75-80% உள்ளூர் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. பா.ம.க. இந்த கோரிக்கையை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறது. சென்னை மறைமலை நகரில் ஃபோர்டு மகிழுந்து ஆலை தொடங்கப்பட்ட போது, அதன் வேலைவாய்ப்புகள் அனைத்தும் உள்ளூர் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி 10 ஆயிரம் பேரைத் திரட்டி போராட்டம் நடத்தினேன். இத்தகைய சூழலில் தான் ஆந்திரத்தில் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள வேலைவாய்ப்புகளில் 75 விழுக்காட்டை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் சட்டம் ஆந்திர சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட விழுக்காடு உள்ளூர் மக்களுக்கே வழங்கப்படும் என்று கர்நாடகம், குஜராத், மராட்டியம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். ஆனால், அவை ஆண்டுக்கணக்கிலும், மாதக் கணக்கிலும் வெற்று அறிவிப்புகளாகவே உள்ள நிலையில், ஆந்திரத்தில் இதுதொடர்பாக சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக 75% இட ஒதுக்கீடு வழங்கிய முதல் மாநிலம் என்ற பெருமையை ஆந்திரா பெறுகிறது.

Advertisment

இந்த சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுவதையும் ஆந்திர அரசு உறுதி செய்திருக்கிறது. வழக்கமாக இதுபோன்று சட்டங்கள் கொண்டு வரப்பட்டால், திறமையானவர்கள் இல்லை என்று கூறி, அந்த பணியை நிர்வாகத்துக்கு நெருக்கமான வெளிமாநிலத்தவருக்கு வழங்குவது தான் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், இத்தகைய ஏமாற்று வேலைக்கு ஆந்திர அரசின் சட்டம் திட்டவட்டமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஒரு பணிக்காக விண்ணப்பிக்கும் உள்மாநிலத்தவர் ஒருவருக்கு கல்வித்தகுதி இருந்து, திறமை/பயிற்சி இல்லையென்றால் அதைக் காரணம் காட்டி, அவருக்கு வேலைவாய்ப்பை நிராகரித்து விடக்கூடாது; மாறாக, அத்தகையோரை பணிக்கு தேர்ந்தெடுத்து, மாநில அரசுடன் இணைந்து பயிற்சியளித்து பின்னர் பணியமர்த்தப்பட வேண்டும் என்று ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை ஒட்டி ஆந்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீசிட்டி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். ஆந்திர அரசின் புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் போது, வெளிமாநிலத்தவருக்கான 25% ஒதுக்கீட்டை விட கூடுதலாக பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பணி நீக்கப்பட வாய்ப்புள்ளது. எனினும், ஆந்திர மாநில மக்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டியது அம்மாநில அரசின் கடமை என்ற கோணத்தில் இது சரியான நடவடிக்கையாகும்.

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, மத்திய, மாநில அரசு பணிகள் கடந்த 25 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் குறையக்கூடும். அவ்வாறு இருக்கும் போது தனியார் நிறுவனங்களில் உள்ள அமைப்பு சார்ந்த பணிகளின் மூலமாகத் தான் மக்களுக்கு கண்ணியமான, கவுரவமான வாழ்க்கையை வழங்க முடியும். ஆனால், தனியார் தொழில் நிறுவனங்கள் பல்வேறு காரணங்களால் உள்ளூர்வாசிகளுக்கு வேலை வழங்குவதில்லை. இதனால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்க தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியமாகும். அதை மற்ற மாநில அரசுகள் பேசிக்கொண்டிருந்த நிலையில், ஆந்திரம் செயல்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் ஆந்திர அரசின் செயல் பாராட்டத்தக்கது.

ஆந்திரத்தைப் பின்பற்றி தமிழ்நாடும் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 80 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியமாகும். அதற்கு பல காரணங்கள் உள்ளன. தமிழகத்திலுள்ள மத்திய அரசுப் பணிகள், மத்திய பொதுத்துறை நிறுவனப் பணிகள் ஆகியவற்றில் பெரும்பாலானவை வட இந்தியர்களால் பறிக்கப்பட்டு விட்டன. சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களிலும், அவற்றையொட்டிய பகுதிகளிலும் அமைந்துள்ள பெரு நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளையும் பிற மாநிலத்தவர்கள் தமிழர்களிடமிருந்து தட்டிப்பறித்து விட்டனர். இப்போது ஆந்திராவில் ஆந்திரர்களுக்கே வேலை என்ற சட்டம் கொண்டு வரப்பட்டதால் அங்குள்ள தமிழர்களும் வேலை இழக்கக்கூடும். இதனால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்யவும் தமிழகத்திலுள்ள தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பு தமிழகத்தைச் சேர்ந்தோருக்கே வழங்கப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்பட வேண்டும். இதை தமிழக அரசு உடனே செய்ய வேண்டும்.

அதுமட்டுமின்றி, தமிழகத்திலுள்ள அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலும் அதிகாரிகள் நிலை தவிர்த்து மீதமுள்ள பணியாளர் பணியிடங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்பவும், தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் கடைநிலைப் பணிகள் அனைத்தையும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கவும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.’’

ramadas
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe