Advertisment

தேசிய புத்தக அறக்கட்டளையின் சென்னை புத்தக மேம்பாட்டு மையத்தை மூடக் கூடாது! ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை: ’’சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய புத்தகங்கள் அறக்கட்டளையின் புத்தக மேம்பாட்டு மையத்தை மூட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குழந்தைகளின் அறிவுத்திறன் வளர்ச்சியுடன் தொடர்புடைய முக்கியமான மையத்தை மூடும் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

Advertisment

nbt

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகளில் தேசிய புத்தக அறக்கட்டளை மிகவும் முக்கியமானதாகும். பள்ளிப் படிப்பைக் கடந்து அனைத்துத்துறை அறிவுசார்ந்த புத்தகங்களை மக்கள் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஏராளமான புத்தகங்களை குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்வதற்காக 1957-ஆம் ஆண்டில் தேசிய புத்தகங்கள் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. திறமையான எழுத்தாளர்களின் புத்தகங்களை அச்சிட்டு விற்பனை செய்யும் பணியை இந்த அறக்கட்டளை மேற்கொண்டு வந்தது. லாபநோக்கமற்ற இந்த அமைப்பால் மக்களுக்கு தேவையான தரமான புத்தகங்கள் குறைந்த விலையில் கிடைத்தன. அதிலும் குறிப்பாக குழந்தைகள் குறித்த புத்தகங்கள் தேசிய புத்தகங்கள் அறக்கட்டளையால் அதிகம் வெளியிடப்பட்டன.

மக்கள் நலன் கருதி புத்தங்கள் விற்பனை ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், எழுத்தாளர்கள் நலன் கருதி அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டும் வந்தன. புத்தகங்கள் பதிப்பிக்கும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக சென்னை எழும்பூர் பள்ளிக்கல்வி வளாகத்தில் உள்ள ஈ.வெ.கி.சம்பத் மாளிகையில் தேசிய புத்தகங்கள் அறக்கட்டளையின் புத்தக மேம்பாட்டு மையம் கடந்த சில ஆண்டுகளுக்கு தொடங்கப்பட்டது. சென்னை தவிர பட்னா, கவுகாத்தி, திரிபுரா, கட்டாக், மும்பை, ஐதராபாத், கொச்சி ஆகிய நகரங்களிலும் புத்தக மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.

Advertisment

ஆனால், திடீரென சென்னையிலுள்ள புத்தக மேம்பாட்டு மையத்தை மூட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. அதற்கான முன்னோட்டமாக சென்னை மையத்தில் பணியாற்றி வந்த தமிழ் மொழி அறிந்த அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தமிழ் தெரியாத அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்போது புதிதாக பதிப்பிப்பதற்காக எந்த எழுத்தாளரிடமிருந்தும் புத்தகங்கள் பெறப்படுவதாக தெரியவில்லை. செலவைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால் அது முழுக்க முழுக்க தவறான முடிவாகும்.

r

கல்வி, புத்தகம் உள்ளிட்ட மனிதவளத்தை மேம்படுத்துவதற்கான எந்த அமைப்பாக இருந்தாலும், அது செலவு பிடிக்கும் ஒன்றாகத் தான் இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இதையெல்லாம் அறிந்து தான் நேரு காலம் தொடங்கி, நரேந்திரமோடி ஆட்சிக்காலம் வரை ஏராளமான அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் இத்தகைய அமைப்புகளை மூடுவதும், இடமாற்றம் செய்வதும் நாட்டு மக்களின் அறிவு வளர்ச்சிக்கு செய்யப்படும் இடையூறு ஆகும்.

சென்னையில் செயல்பட்டு வரும் புத்தக மேம்பாட்டு மையம் மூடப்பட்டால் பல்வேறு வழிகளில் பாதிப்புகள் ஏற்படும். தேசிய புத்தகங்கள் அறக்கட்டளை மூலம் தங்களின் புத்தகங்களை வெளியிட விரும்பும் எழுத்தாளர்கள் இதுவரை சென்னையில் உள்ள மையத்தின் மூலமாக அனைத்து பணிகளையும் முடித்து வந்தனர். சென்னை மையம் மூடப்பட்டால் புத்தகம் வெளியிடுவது குறித்த அனைத்து பணிகளுக்காகவும் தில்லியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கோ, பெங்களூரில் உள்ள தென்மண்டல அலுவலகத்துக்கோ செல்ல வேண்டியிருக்கும். ஒரு புத்தகத்தை எழுதுவதற்காக ஓர் எழுத்தாளருக்கு கிடைக்கும் தொகை முழுவதும் அவரது பயணச்செலவுக்கே சரியாகி விடும். இதேநிலை நீடித்தால் புதிய புத்தகங்கள் வராது.

அரசின் செலவுகளை குறைக்க வேண்டும் என்றால் அலுவலகங்களை மூடி விடலாம் என்பது தான் இன்றைய அதிகாரவர்க்கத்தின் எளிமையான தீர்வாக இருக்கிறது. அரசின் அனைத்து செலவுகளும் செலவுகள் அல்ல.... கல்விக்காகவும், புத்தகங்களுக்காகவும் செய்யப்படும் செலவுகள் முதலீடுகள் என்பதை அவர்கள் உணர வேண்டும். இந்த முதலீடுகள் தான் எதிர்காலத்தில் அறிவுசார்ந்த அடுத்த தலைமுறையை உருவாக்கும். அவர்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பார்கள்.

எனவே, சென்னையில் இயங்கி வரும் புத்தக மேம்பாட்டு மையத்தை மூடும் முடிவை தேசிய புத்தகங்கள் அறக்கட்டளையும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் கைவிட வேண்டும். சென்னை மையத்தில் ஏற்கனவே பணியாற்றி வந்த தமிழ் தெரிந்த அதிகாரிகளை மீண்டும் பணியமர்த்தவும் முன்வர வேண்டும்.’’

ramadas
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe