Skip to main content

’காவிரியில் நீராடினால் நோய்கள் தீரும் என்றிருந்த நிலைமாறி காவிரியில் குளித்தால் நோய் தான் ஏற்படும் என்ற அவலநிலை ஏற்பட்டிருக்கிறது’-ராமதாஸ்

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

 

பாமக நிறுவனம் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:’’மத்தியில் புதிய அரசு பதவியேற்றிருப்பதைத் தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்  கூட்டத்தில் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரையில் மக்களுக்கு பயனளிக்கும் வகையிலான பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. காவிரி ஆற்றை தூய்மைப்படுத்துவதற்கான  சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது ஆகும்.

 

c

 

மத்திய அரசு நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களின் முன்னோட்டமாக குடியரசுத்தலைவர்  உரை அமையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், குடியரசுத் தலைவர் உரை அமைந்திருக்கிறது. மாசுபட்டுக் கிடக்கும் கங்கை ஆற்றை தூய்மைப்படுத்த சிறப்பு இயக்கம் செயல்படுத்தப்படுவதைப் போன்று, காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தவும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று குடியரசுத் தலைவர் இராம்நாத் அறிவித்தார். மத்திய அரசின் சார்பிலான இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு மக்களையும், விவசாயிகளையும்   மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

புனித நதிகளில் ஒன்றாக போற்றப்படும் காவிரி ஆறு அண்மைக்காலமாக கர்நாடகத்தின்  கழிவுநீர் கால்வாயாக மாற்றப்பட்டிருக்கிறது. கர்நாடகத்தில் பெங்களூரு நகரிலும், அதையொட்டிய பகுதிகளிலும் உள்ள வீடுகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிலிருந்து ஒவ்வொரு நாளும் 148.2 கோடி லிட்டர் கழிவுநீர் காவிரி ஆற்றில் கலக்கவிடப்படுவதாக அம்மாநில அமைச்சரே சட்டப்ப்பேரவையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

 

மற்றொருபுறம் தமிழ்நாட்டில் மேட்டூர் பகுதியில் அமைந்துள்ள அனல்மின் நிலையம், கெம்பிளாஸ்ட்  தொழிற்சாலை, மால்கோ, ஜே.எஸ்.டபிள்யூ உள்ளிட்ட தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் காவிரியில் தான் கலக்கின்றன.  தொடர்ந்து நொய்யலாற்றின் வழியாக சாயப் பட்டறைக் கழிவுகளும், திருச்சி பகுதியில் மாநகராட்சிக் கழிவுகளும் காவிரி ஆற்றில் சங்கமமாகின்றன. அதன் விளைவாக கும்பகோணம் பகுதிக்கு காவிரி நீர் வரும்போது, அதில் மொத்தம் 52 வகையான நச்சுப்பொருட்கள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தக் குடிநீரைக் குடிக்கும் மக்களுக்கு சிறுநீரகக் கோளாறு, நரம்பு பாதிப்பு, சுவாசக்கோளாறு, ஒவ்வாமை, புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு காலத்தில் புனித ஆறான காவிரியில் நீராடினால் நோய்கள் தீரும் என்றிருந்த நிலைமாறி, இப்போது காவிரியில் குளித்தால் நோய் தான் ஏற்படும் என்ற அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

 

c

 

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று தான் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக போராடி வருகிறது.  காவிரி ஆற்றை பாதுகாக்க வேண்டும்; தூய்மைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பா.ம.க இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் தொடங்கி காவிரி கடலில் கலக்கும் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார். இது குறித்து கடந்த மக்களவையிலும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பலமுறை வலியுறுத்தியுள்ளார்.

 

அண்மையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தில்லி சென்றிருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் பிரதமர் நரேந்திரமோடி அவர்களை சந்தித்து கங்கை ஆற்றை தூய்மைப் படுத்தும் திட்டத்தைப் போன்று காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதன்பயனாகவே காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டம் நடைமுறை படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அதேபோல், நீர்வளங்களை பாதுகாப்பதற்காக நீர்மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்; வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கும், விவசாயிகளுக்கு உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் உரையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்புகளுக்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டால் தமிழக மக்களும், விவசாயிகளும் பயனடைவார்கள். அவர்களின் துயரங்கள் ஓரளவாவது தீர்க்கப்படும்.

 

அதேநேரத்தில் குடியரசுத் தலைவர்  உரையில் இடம்பெற்ற அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாகவே இருந்து விடக்கூடாது. அவை திட்டங்களாக மாற்றப்பட்டு, அடுத்தமாதம் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும். போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அடுத்த சில ஆண்டுகளில் காவிரியை தூய்மையாக்கும் திட்டத்தை நிறைவேற்றி முடிக்க வேண்டும். அத்துடன் கோதாவரி & காவிரி ஆறுகள் இணைப்புத் திட்டத்தையும் நிதிநிலை அறிக்கையில் அறிவித்து அதன் அடிப்படை பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.’’

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியா கூட்டணி ஜெயித்தால் மேகதாது அணை கட்டப்படும்; முதல்வர் மௌனம் ஏன்? - அன்புமணி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 Anbumani condemns that Mekedatu Dam will be built if the Indian alliance wins

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மேகதாது அணை கட்டப்படும் என சித்தராமையா பேச்சு கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் காவிரி ஆற்றின் குறுக்கே  மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர்  சித்தராமையா கூறியிருக்கிறார்.  பெங்களூர் தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டியை  ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘’மேகேதாதுவில் அணை கட்ட மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்’’ என்று கூறியிருக்கிறார்.  சித்தராமையாவின் இந்தப்  பேச்சு கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படியும்,  உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்படியும்  காவிரி  ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களிடமிருந்து இதற்கான வாக்குறுதியை நாடாளுமன்றத்தில் பல முறை நான் பெற்றுள்ளேன். உண்மை நிலை இவ்வாறு இருக்க மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாது அணை கட்டப்படும் என்று சித்தராமையா கூறுவது மத்திய அரசின் அதிகாரத்தை தவறாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் பயன்படுத்துவது ஆகும். சித்தராமையாவின் இந்தப் பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ஆகும்.

காங்கிரஸ்  ஆட்சியில் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று சித்தராமையா அறிவித்து 3 நாட்களாகியும், அதே கூட்டணியில் இருக்கும் திமுகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில்  மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களைக் காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. ஆனாலும்  அவர் அமைதியாக  இருப்பதன் பொருள் காங்கிரசின் நலன்களுக்காகவும், கர்நாடகத்தின் நலன்களுக்காகவும்  காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்க்கத் துணிந்து விட்டார் என்பதுதான்.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே  4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளைக் கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின்,  இப்போது மேகதாது அணைக் கட்டும்  விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார். அவரது இந்தத் துரோகத்திற்கு மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

‘தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது’ - கர்நாடகா அரசு திட்டவட்டம்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Karnataka government planed Can't release water to Tamil Nadu

கர்நாடகா மாநிலம், பெங்களூர் நகரத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தான் ஒரே வழி என கர்நாடகா மாநில அரசு முடிவு செய்து, அணை கட்டுமான பணிகளுக்கு ஆர்வம் காட்டி வந்தது. குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில், மேகதாது அணை கட்டப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இதற்கு தமிழ்நாட்டில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்த சூழலில், கடந்த மார்ச் 21ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டத்தில் பெங்களூர் நகர குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீரை திறக்க வேண்டும் என்று கர்நாடகா மாநில அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், அதற்கு தமிழக அரசு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, தமிழ்நாட்டுக்கு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக தலா 2.8 டி.எம்.சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகா அரசை காவிரி ஒழுங்காற்று குழு கேட்டுக்கொண்டது. 

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று (04-04-24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கர்நாடகா தரப்பு அதிகாரிகள் பங்கேற்றனர். 

இதில், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நிலுவையில் உள்ள 3.5 டி.எம்.சி தண்ணீரையும், ஏப்ரல், மே மாதங்களுக்கான தண்ணீரையும் தடையின்றி திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு, கர்நாடகாவில் குடிநீர் பிரச்சனை மற்றும் வறட்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது. மேலும், நீர் இருப்பு மற்றும் சூழலை கருத்தில் கொண்டு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என கர்நாடகா தரப்பு அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.