Ramadan urges arrest of all in coimbatore girl case

Advertisment

கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி தனது முன்னாள் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி கொடுத்த தொடர் பாலியல் தொந்தரவால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில், மிதுன் சக்ரவர்த்தி மீது, போக்ஸோ மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், அந்த ஆசிரியர் மட்டுமின்றி பள்ளி நிர்வாகத்தில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும், அம்மாணவியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது; “கோவை உக்கடம் பகுதியில் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லைகளைத்தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

Advertisment

ஆசிரியர்கள் தெய்வத்தை விட மேலானவர்கள் என்று நமது முன்னோர் கூறியுள்ளனர். தாய், தந்தைக்குப் பிறகு மாணவர்களைக் காக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே இத்தகைய கீழ்த்தரமான செயலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது ஆசிரியர் சமூகத்திற்கே அவப்பெயர்!

மாணவி தற்கொலை தொடர்பாகச் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது போதுமானதல்ல. அவரின் பாலியல் குற்றங்களைத்தடுக்காமலும், உடந்தையாகவும் இருந்த பள்ளி நிர்வாகத்தில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.