Ramachandran becomes Salem mayor! Deputy Mayor post for Congress !!

சேலம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக தி.மு.க. கவுன்சிலர் ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டு உள்ளார். வெள்ளிக்கிழமை நடக்கும் மறைமுகத் தேர்தலில் அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப். 19- ஆம் தேதி நடந்தது. சேலம் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. தி.மு.க. நேரடியாக 48 இடங்களில் போட்டியிட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு 12 வார்டுகள் ஒதுக்கப்பட்டது.

Advertisment

தி.மு.க. 47 வார்டுகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் மாநகராட்சி மேயர் பதவியைக் கைப்பற்றியது. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 5 வார்டுகளில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. வி.சி.க. ஒரு வார்டில் வெற்றி பெற்றது. மொத்தமாக தி.மு.க. கூட்டணிக்கு 50 இடங்கள் கிடைத்தன.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. 7 வார்டுகளில் வெற்றி பெற்றது. சுயேச்சைகள் 3 பேர் வெற்றி வாகை சூடினர். சுயேச்சை கவுன்சிலர்கள் தேன்மொழி (19- வது வார்டு), மகேஸ்வரி சேகர் (4- வது வார்டு) ஆகிய இருவரும் திமுகவில் இணைந்தனர். புதிய கவுன்சிலர்கள் அனைவரும் மார்ச் 2- ஆம் தேதி அன்று பதவியேற்றுக் கொண்டனர்.

Advertisment

இந்நிலையில், மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் வெள்ளிக்கிழமை (மார்ச் 4) நடக்கிறது. தி.மு.க. கவுன்சிலர் ராமச்சந்திரன் (6- வது வார்டு) மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். துணை மேயர் பதவி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க. கூட்டணிக்கு போதுமான பெரும்பான்மை இருப்பதால் மறைமுகத் தேர்தலில் இரு பதவிகளுக்கும் எதிர்த்து போட்டியிட வாய்ப்பில்லை. அதனால் மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெறுவர் எனத் தெரிகிறது. இதையடுத்து ராமச்சந்திரன், சேலம் மாநகராட்சியின் புதிய மேயர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இந்த ராமச்சந்திரன்?

மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராமச்சந்திரன், சேலம் கன்னங்குறிச்சி புதூரார் தோட்டத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். 1960- களில் தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு தற்போது 77 வயது ஆகிறது.

தி.மு.க.வில் கிளை செயற்குழு உறுப்பினர், கிளை செயலாளர், மாவட்ட பிரதிநிதி உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ள அவர், தற்போது அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் ஆக உள்ளார்.

இவருக்கு மனைவி மீனாட்சி என்ற மனைவியும், சுதர்சன் பாபு என்ற மகனும், சுமித்ரா என்ற மகளும் உள்ளனர். மகன், மகள் ஆகிய இருவருக்கும் திருமணம் ஆகி குடும்பத்துடன் வசிக்கின்றனர். மகன், தமிழக அரசின் சிவில் சப்ளைஸ் துறையில் மண்டல மேலாளர் ஆக பணியாற்றி வருகிறார். மகள், கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

Ramachandran becomes Salem mayor! Deputy Mayor post for Congress !!

ஆரம்பத்தில் உள்ளூரில் சிறிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ராமச்சந்திரன், தொழில் நிமித்தமாக சென்னைக்கு ஜாகையை மாற்றினார். அங்கு 5 ஆண்டுகளுக்கும் மேலாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அந்தக் காலக்கட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, சுந்தரம், பரிதி இளம்வழுதி மற்றும் புரசை பகுதி தி.மு.க. பிரமுகர் சிட்டிபாபு உள்ளிட்ட தி.மு.க. முன்னணியினருடன் நெருக்கமான நட்பில் இருந்துள்ளார். ஆற்காட்டார் குடும்பத்துடன் தற்போதும் தொடர்பில் இருந்து வருகிறார்.

ஆற்காட்டார் அமைச்சராக இருந்தபோது, அவருடனான நெருக்கத்தில் மின்வாரியத்தில் சில ஒப்பந்தப் பணிகளையும் எடுத்து செய்துள்ள வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ.வின் நெருக்கமான வட்டத்தில் இருந்து வருகிறார். அவருடைய பரிந்துரையின் பேரில்தான் கவுன்சிலர் சீட் கிடைத்ததாகவும் சொல்கிறார்கள் தி.மு.க.வினர்.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 7- வது வார்டில் தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற சாரதாதேவி, சேலம் மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.