ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்கும் ஆளுநரை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

Advertisment

rajiv gandhi issue-highcourt-tamilnadu governor

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், சாந்தன், ரவிச்சந்திரன் ஆகிய ஏழுபேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9-ஆம் தேதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, இதில் உத்தரவு பிறப்பிக்க ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisment

அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கடந்த 15 மாதங்களாக எந்த முடிவும் எடுக்காமல் அரசியல் சாசன விதிகளை மீறி செயல்பட்டுள்ளதால், அவரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த, தந்தை பெரியார் திராவிட கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

முதல்வர் நியமனம் தவிர்த்து, பிற விவகாரங்களில் ஆளுநர் சுதந்திரமாக செயல்பட முடியாது என அரசியல் சாசனத்தின் 356(1) பிரிவு கூறியுள்ளதைச் சுட்டிகாட்டிய மனுதாரர், பா.ஜ.உறுப்பினராகவும், ஆர்.எஸ்.எஸ் அனுதாபியாகவும் இருந்த ஆளுநர், ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை எதிர்க்கும் தமிழக மக்கள் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், 15 மாதங்களாக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

அமைச்சரவை தீர்மானத்தின் மீது எந்த ஒரு முடிவும் எடுக்காமல் உள்ள ஆளுநரின் செயல்பாடு நகைப்புக்குரியதாக இருப்பதாகவும், இவை அரசியல் சாசன முடக்கத்துக்குச் சமமாகும் என்பதால், இதில் நீதிமன்றம் தலையிட்டு ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.