டிஸ்கவரி சேனலில் வரும் 'MAN VS WILD' என்ற நிகழ்ச்சி மூலம் உலக அளவில் பிரபலமானவர் பியர் க்ரில்ஸுடன். இவருடன் இணைந்து ஹாலிவுட் நடிகைகள் கேத்தே வின்ஸ்லெட், ஜூலியா ராபர்ட்ஸ், லீனா ஹெட்டே என பல பிரபலங்கள் காட்டுக்குள் பயணம் செய்திருந்தாலும் அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா, இந்திய பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

Advertisment

rajinikanth tweet

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று ரஜினி சென்னையில் இருந்து விமானத்தில் மைசூர் புறப்பட்டுச் சென்றார். விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் சிறிது நேரத்திலேயே விமானம் தரையிறக்கப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் வேறொரு விமானத்தில் மைசூருக்கு சென்றார் ரஜினிகாந்த். ஆரம்பமே இப்படி இருக்க இந்நிகழ்சியில் கலந்துகொண்ட போது ரஜினிகாந்த்துக்குக் கணுக்கால் மற்றும் தோளில் சில காயங்கள் ஏற்பட்டுள்ளதாக நேற்று மாலை தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் ரஜினி ரசிகர்கள் சோகம் அடைந்தனர்.

Advertisment

ஆனால் 6 மணி நேரம் தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, "தன் காலில் முள் மட்டுமே குத்தியதாகவும், காயம் ஏதும் ஏற்படவில்லை" என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதுமட்டும் இல்லாமல் தனது டிவிட்டர் பக்கத்தில், " மிக்க நன்றி பியர் கிரில்ஸ். இது ஒரு மறக்க முடியாத அனுபவம், லவ் யூ. நன்றி டிஸ்கவரி சேனல்" என்று பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.