Skip to main content

அழகிரிக்கு எதிராக ரஜினி ரசிகர்கள்? இமிடேட் செய்யும் 'மதுரை அண்ணன்', முடங்கிக் கிடக்கும் "பயபுள்ள"!

Published on 07/07/2018 | Edited on 07/07/2018

ரஜினிகாந்த்தின் கட்சி அறிவிப்பு வெளியான காலகட்டத்திலிருந்தே, "இதோ ரஜினியை சந்திக்க இருக்கின்றார் அழகிரி, இதனால் தென்மாவட்டங்களுக்குப் பலம்" என அழகிரியின் ஆதரவாளர்கள் தங்களுக்கு சாதகமாக மதுரை முழுக்க கொளுத்திப் போட்டிருக்க, 'ரஜினி ஆசிர்வதித்து துவக்கிவைத்த படம், அழகிரியை சீண்டி எடுக்கப்பட்டதாலேயே  ரிலீஸிற்குத் தயாராகியும் மூன்று வருடங்களாக பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றது" என அழகிரிக்கு எதிராகப் பேசி ரஜினி அழகிரி சந்திப்பிற்கு செக் வைத்திருக்கின்றார்  ரஜினி மன்ற பொறுப்பாளர் ஒருவர்.

 

 


மதுரை வட்டார மொழியில் மிகவும் பாப்புலரான 'பயபுள்ள' என்ற வார்த்தையை டைட்டிலாகக் கொண்டு, முற்றிலும் புதுமுகமாகவும் அதே நேரத்தில் திரைப்படத்திலுள்ள அனைவருமே ரஜினி ரசிகர்கள் என்பதனை உறுதியாக்கிக்கொண்டு எடுக்கப்பட்டப் படம்தான் தற்பொழுது முடங்கி கிடக்கும் 'பயபுள்ள'. இந்தப் படத்தில் நடிகர் சிங்கமுத்து 'மதுரை அண்ணன்' என்ற பெயரில் அழகிரியின் கேரக்டரை இமிடேட் செய்துள்ளதாக வந்த தகவல்தான் முடக்கத்திற்குக் காரணம் என்கின்றனர்.

அப்படி என்னதான் இருக்கின்றது அந்த திரைப்படத்தில் என்றால், "ஒரு சீனில், ஊரில் மிகப்பெரிய பண்ணையாராக வாழ்பவர் 'மதுரை அண்ணன்' சிங்கமுத்து, அவருடைய அல்லக்கைகள் சிசர் மனோகர் மற்றும் அல்வா வாசு. மதுரை அண்ணன் வீட்டிலிருக்கும் போது, "இப்படியே இருந்தா ஊரில் ஒரு பய நம்மை மதிக்க மாட்டான். நமக்குன்னு மரியாதை வேணும்னா தனிக்கட்சி துவங்குவோம். அப்பத்தான் நாலு பயலுக நம்மை மதிப்பான். நம்மளும் ஜுவக் (ஜு  என்றால் அலப்பறை செய்வது) கொடுக்கலாம்ல" என அல்லக்கைகள் தூபம் போட, "அப்படியாடா சொல்றே, சொல்லு சொல்லு... அப்ப அண்ணன் என்ன செய்யனும்?" என்று கேட்கிறார். முதல்ல பணப்பெட்டியை திறங்க, அள்ளி விடுங்க" என அரசியலுக்கு வரவழைத்து விடுகிறார்களாம்.

 

 


அடுத்த சீனில், குடையிலேயே 'மதுரை அண்ணன் வர்றார்' என எழுதப்பட்டு குடை பிடிப்பவர்களுடன் நடந்து வருவார் சிங்கமுத்து. "அண்ணே... உங்க கட்சியில இவனுக்கு சீட் கொடுங்க!" என அல்லக்கைகள் கேட்க, "நேற்று பேக்கரி வைச்சுட்டு எங்கேயோ மொத்தமாக ஆட்டைய போட்டு வந்தவனெல்லாம் சீட் வாங்கி ஜெயிச்சுட்டு இருக்கான், உனக்கென்ன!" என்பார். அதற்கடுத்த பொதுக்கூட்ட மேடை சீனிலோ, மேடையிலேயே மதுபானத்தைக் குடித்துக்கொண்டு, "எங்களை மாதிரி காசு கொடுத்து ஓட்டு வாங்க உன்னால முடியுமா? ஓட்டு வாங்குறதுல நாங்கதான்டா புது பார்முலாவையே கொண்டு வந்தோம். அததான் இப்ப பயன்படுத்துறீங்க" என மதுரை அண்ணன் பேசிவிட்டு அப்படியே சரக்கைக் குடிப்பார். "என்ன அண்ணே, ராவா குடிக்கிறீங்க" என்று பக்கத்தில் இருப்பவர் கேட்க, "ராவா குடிச்சாலும், தண்ணீர் ஊத்திக் குடிச்சாலும் மக்கள் ஒன்னும் சொல்ல மாட்டாங்க, அதுக்கும் சேர்த்து பணத்தைக் கொடுத்திட்டால் ஓட்டு வந்திடும்" என்பார் அவர். அது போல அவர் 'டெல்லிக்குப் போறேன், டெல்லிக்குப் போறேன்' என சுற்றியுள்ளவர்களை இந்த வார்த்தையை கூறி பயமுறுத்துவது போல் காட்சி இருக்கும். படம் முழுக்க மதுரை அண்ணனின் செயல்கள் அழகிரியை அப்படியே இமிடேட் செய்வது போல் இருக்கும்" என்றார் திரைப்படத்தில் பணியாற்றிய ஒருவர்.

அழகிரியும் அரசியலில் ஆக்டிவாக இல்லை, ரஜினியும் முழு ஆக்டிவாக இல்லை. தலைவர்கள் இப்படியிருக்க மதுரையில் அழகிரிக்கு எதிராக அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் ரஜினி ரசிகர்கள்... வெல்லுமா?

 

 

 

சார்ந்த செய்திகள்