Skip to main content

'நாளைக்கே ரஜினி அரசியலுக்கு வந்தாலும் அவருடன் சேர்ந்தே பயணிப்பேன்'-தமிழருவி மணியன் பரபரப்பு 

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

 'Rajinikanth did not say he never came to politics' - Tamilruvi Maniyan

 

ரஜினிகாந்த், அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக தெரிவித்து, பின்னர் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை எனவும், அதற்கான விளக்கத்தையும் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கும் முனைப்பில் இருந்தபோது, பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகிய அர்ஜுன மூர்த்தியை கட்சிக்குத் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும் அறிவித்திருந்தார். அதன் பின் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான நிலைப்பாடு, அவர் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

 

அதன்பின் ரஜினியின் அறிவிக்கப்படாத கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்ட தமிழருவி மணியன் 'நான் இனி சாகும்வரை அரசியலில் ஈடுபட போவதில்லை' என அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தமிழருவி மணியன் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில், காந்திய மக்கள் இயக்கத்தில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சார்ந்த பலர் இணைந்து பணியாற்ற விரும்பி என்னுடன் தொடர்பு கொள்கின்றனர். ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்களுக்கு அன்புடன் ஒன்றை உணர்த்த விரும்புகிறேன்.

 
நீங்கள் அனைவரும் ரஜினி ஒரு நாள் அரசியல் களத்தில் அடியெடுத்து வைப்பார் என்ற எதிர்பார்ப்பிலும், முதல்வர் பதவியில் என்றாவது அமர்வார் என்ற கனவிலும் அவருடைய ரசிகர்களாக மாறவில்லை. அவருடைய இயல்பான நடிப்பு, செயற்கைப் பூச்சு இல்லாத பேச்சு, ஆணவத்திற்குச் சற்றும் இடம் தராத அடக்கம், உள்ளத்தில் பட்டதை ஒளிவு மறைவின்றி உரைக்கும் நேர்மை, மிகச் சாதாரண மனிதனாகத் தன்னைப் பாவிக்கும் பண்புநலன், அனைவரும் வியந்து பார்க்கும் ஆடம்பரமற்ற எளிமை, அன்பு சார்ந்து ஒவ்வொருவரிடமும் பழகும் உயர்குணம் ஆகியவற்றில் உங்கள் மனதைப் பறிகொடுத்துத்தான் நீங்கள் அனைவரும் அவருடைய இரசிகர்களாக மாறினீர்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அவருக்காக எதையும் இழக்கத் துணியும்  உங்கள் உயரிய அர்ப்பணிப்பைக் கடந்த நான்காண்டுகள் நேரில் கண்டு நான் நெஞ்சம் நெகிழ்ந்திருக்கிறேன்.

 

பாழ்பட்ட அரசியலைப் பழுது பார்க்கவே ரஜினி அரசியல் உலகில் அடியெடுத்து வைக்க முயன்றார். காலச்சூழல் அவருடைய கனவை நனவாக்க இடம் தராத நிலையில் இப்போது அவர் கட்சி தொடங்குவதைத் தவிர்த்திருக்கிறார். நான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதில்லை என்று அவர் அறிவிக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தை அவர் கலைத்துவிடவுமில்லை.

 

இந்த நிலையில் அவருடைய கூற்றின்படி சிஸ்டத்தைச் சீரழித்தவர்களிடமே சில ரசிகர்கள் சரண் அடைந்திருப்பதையும், சிலர் இளைப்பாறும் வேடந்தாங்கல் எதுவாக இருக்க முடியும் என்று அலைபாய்வதையும் கண்டு நான் வருந்துகிறேன். ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ஆள் பிடிக்கும் அநாகரிக அரசியலை நான் அடியோடு வெறுக்கிறேன். காந்திய மக்கள் இயக்கம் இந்த சந்தர்ப்பவாத செயலில் மறந்தும் ஈடுபடாது என்று உறுதிபட அறிவிக்கிறேன்.

 

காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்தின் சகோதர அமைப்பாகத் தொடர்ந்து செயற்படும். அவரவர் இடத்தில் இருந்தபடி கரங்கள் இணந்து காரியமாற்றுவோம்.  நான் ”ஒரு காந்தியவாதி இறக்கும் நாள்வரை இடையறாமல் தன்னலமின்றி சமூக நலன் சார்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இழிந்த விமர்சனங்களை இம்மியும் பொருட்படுத்தலாகாது. மாற்று அரசியலை வளர்த்தெடுக்கும் பணியில்

நீங்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும் “என்று சான்றாண்மை மிக்க மூத்தோர் பலர் வழங்கிய அறிவுரையை ஏற்கிறேன். தரம் தாழ்ந்த, தன்னலம் வாய்ந்த அரசியலை என்றும் நான் நடத்தியதில்லை. எந்த லாவணிக் கச்சேரியிலும் ஒரு நாளும் நேரத்தை விரயமாக்காமல் ஆக்கபூர்வமான அர்த்தமுள்ள பணிகளில் காந்திய மக்கள் இயக்கம்முன்னிலும் முனைப்பாக ஈடுபடும்.

 

மார்ச் 7ஆம் நாள் திருப்பூரில் பொதுக்குழு கூடவிருக்கிறது. நாளையே ரஜினி அரசியலுக்கு வந்தாலும் காந்திய மக்கள் இயக்கம் அவருடன் சேர்ந்தே பயணிக்கும். அவர் அரசியலுக்கு வந்தாலும், வராமல் விலகி இருந்தாலும் பக்திபூர்வமாக அவரை நெஞ்சில் நிறுத்தி நேசிக்கும் எந்த மன்ற உறுப்பினரும் எவர் விரிக்கும் வலையிலும் சிக்கமாட்டார்கள் என்பது மட்டும் உறுதி எனத் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.