
கந்த சஷ்டி கவச விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
‘கறுப்பர் கூட்டம்' என்ற யூடியூப் சேனலில் 'கந்த சஷ்டி கவசம்' குறித்து தரக்குறைவாக விமர்சித்ததாகவும், இந்துக்களின் உணர்வுகளை அந்த வீடியோ புண்படுத்தியதாகவும் அண்மையில் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து கறுப்பர் கூட்டம் சேனலுக்கு எதிராக பல்வேறு தரப்பிலும் கருத்து எழுந்துவந்து சூழலில், இந்த சர்ச்சை வீடியோ குறித்து சுரேந்திரன், செந்தில் வாசன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டதோடு, அந்த யூ-ட்யூப் பக்கத்திலிருந்த வீடியோக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த், "கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்க செய்த, இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்துச் சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மத துவேசமும், கடவுள் நிந்தனைகள் ஒழியட்டும்... ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா" எனத் தெரிவித்துள்ளார்.