/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/super star_0.jpg)
ரஜினிகாந்த்துக்கு எதிராக ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
பிரபல திரைப்பட பைனான்சியர் முகன்சந்த் போத்ரா, இயக்குநர் கஸ்தூரிராஜா மீது காசோலை மோசடி வழக்குத் தொடர்ந்தார். வழக்கு விசாரணையின்போது, கஸ்தூரிராஜா தான் வாங்கிய கடனுக்கு அவரது சம்பந்தி உறவான நடிகர் ரஜினிகாந்த் உத்தரவாதம் கொடுத்ததால்தான் கடன் கொடுத்ததாக போத்ரா கூறியிருந்தார்.
இதையடுத்து, பொய்க்காரணங்கள் கூறி போத்ரா தன்னிடம் பணம் பறிக்க முயற்சிப்பதாக ரஜினிகாந்த் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டார். ரஜினியின் இந்த குற்றச்சாட்டு தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாக போத்ரா, சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன் பின்னர் போத்ரா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குத் தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு போத்ரா ஆஜராகாததைக் காரணம் காட்டி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார் போத்ரா.
இந்த கோரிக்கை மனுவை நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்தார். விசாரணைக்கு பின்னர், ரஜினிகாந்த்துக்கு எதிரான அவதூறு வழக்கை மீண்டும் ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் முறையாக விசாரிக்க வேண்டும். இந்த விசாரணைக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்று உத்தரவிட்டார். ஆனால், ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஜூன் மாதம் 6ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து 29.5.2018 அன்று அவதூறு வழக்கிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ரஜினிகாந்த். தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையை அடுத்து இந்த வழக்கில் இன்று 18.12.2018ல் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ரஜினிகாந்த்துக்கு எதிராக ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)