/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG_20180530_112851.jpg)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்தார். இதேபோல், நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பல அரசியல் தலைவர்ளும், சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருகின்றனர்.
அந்தவகையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார். விமானம் மூலம் சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற அவர் அதன்பின் காரில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு பாதிக்கப்பட்டவர்களிடம் நேரில் நலம் விசாரித்தார். மக்களும் தங்கள் குறைகளை ரஜினியிடம் கூறினர். அரசியல் பிரவேச அறிவிப்பிற்கு பின் முதல் முறையாக மக்கள் பிரச்னைக்காக நடிகர் ரஜினிகாந்த் களமிறங்கியுள்ளார்.
இதனிடையே தூத்துக்குடியில் துணை முதல்வர், ஆளுநர், அமைச்சர்கள் என பலரும் வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு அளித்த பாதுகாப்பை காட்டிலும் ரஜினிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)