
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மார்ச் 26 ஆம் தேதி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் ‘மனிதம் காத்து மகிழ்வோம்’ என்கிற நிகழ்ச்சி பல லட்ச ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், அது திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது ரஜினி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2018 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்தபோது, ரஜினி மக்கள் மன்றத்தில் அதிகளவு உறுப்பினர்கள் சேர்த்து பெரிய கட்டமைப்பை உருவாக்கினார் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி. தமிழகத்தில் அதிக அளவு உறுப்பினர்கள் வேலூர் மாவட்ட ரஜினி மன்றத்தில் இணைந்தனர். பல நெருக்கடிகளை தாண்டி நிர்வாகிகள், ரசிகர்களை ஒருங்கிணைத்து தேர்தலுக்கான அடிப்படை வேலைகளை செய்து வைத்திருந்தார். தேர்தலுக்காக பூத் கமிட்டிகள் கூட அமைக்கப்பட்டது.
தனது உடல்நிலையின் காரணத்தினால், அரசியலுக்கு இப்போதுமில்லை, எப்போதும் வரப்போவதில்லை என 2021ல் ரஜினி அறிவித்தார். இதனால் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்ற கட்சிகளுக்கு சென்றனர். அரசியல் ஆசையில் மக்கள் மன்றத்தில் இணைந்தவர்களும் வேறு கட்சிகளுக்கு பயணமாகினர். ஆனால், வேலூர் மாவட்டத்தில் 95 சதவிகிதத்தினர் வேறு கட்சிகளுக்கு போகவில்லை. ரசிகர்களாகவே இருந்துவிடுகிறோம் எனக் கூறிவிட்டனர். இது ரவியை ஆச்சரியப்படுத்தியது.

அரசியலில் பலபல உயரங்களுக்கு செல்லலாம் என நம்பி கட்சிக்கு வந்தவர்கள், இப்போது கட்சியில்லை என்றாலும் நம்முடனே இருக்கிறார்களே, அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்தார். சோளிங்கர் பகுதியில் வாழ வழியில்லாத, வறுமையில் உள்ள ரஜினி ரசிகர்களின் குடும்பங்கள், வீடு கூட இல்லாத ரசிகர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்தனர். அதில் சில ரசிகர்களுக்கு 600 சதுர அடிக்கு வீடுகள் கட்டினர். பலருக்கு மூன்று சக்கர வாகனம், அரிசி மாவு அரைக்கும் இயந்திரங்கள், பெட்டி கடை வைப்பதற்கான உபகரணங்கள் என சுமார் 50க்கும் மேலானவர்களுக்கு பல லட்ச ரூபாய் செலவில் உதவிகள் வழங்க முடிவு செய்தார் ரவி. வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு தயாரானது.

ரஜினியின் தீவிர வெறியர் என்பதால் ரஜினி ரசிகர்களுக்கு வழங்கும் உதவிகளை ரஜினி பெயரில் விழா எடுத்து வழங்கவேண்டும் என முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார் ரவி.
ரஜினியிடம் அதற்கான அனுமதி பெற்று ஏற்பாடுகளில் இறங்கினார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மார்ச் 26 ஆம் தேதி விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றன. மனிதம் காத்து மகிழ்வோம் என்கிற தலைப்பில் விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த தலைப்பை நடிகர்கள் சிவகார்த்திகேயன், லாரன்ஸ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத் போன்றோர் வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முழுவதிலிருமிருந்து 10 ஆயிரம் ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இது பெரியளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களுக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்வதாக மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதனால் ரத்து? ஏதாவது நெருக்கடியா? என்கிற கேள்விகள் ரஜினி ரசிகர்களிடமிருந்து எழுந்து பலபல சந்தேகங்களை உருவாக்கின. நிகழ்ச்சி ரத்து குறித்து மா.செ சோளிங்கர் ரவியை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, “நல்ல விஷயத்துக்காக இந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளோம். மற்றபடி எதுவுமில்லை. நான் பிறகு பேசுகிறேன்” எனச் சொல்லி லைனை கட் செய்துவிட்டார்.
ரசிகர் மன்ற வட்டாரங்களில் விழா ரத்து ஏன் என விசாரித்தபோது, விழாவுக்கு பத்தாயிரம் ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 50 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் வருவார்கள் என தகவல்கள் கிடைத்தன. இந்த தகவல்கள் ரஜினியின் கவனத்துக்கு சென்றதும், ரசிகர்களுக்கு ஏன் வீண் செலவுகள், தலைநகரில் குவிந்து ஏன் மக்களுக்கு நெருக்கடியை உருவாக்க வேண்டும் என யோசித்துள்ளார். இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சில தகவல்களைக் கூறியதன் அடிப்படையில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இவ்வளவு ஏற்பாடுகள் செய்தபின் நிகழ்ச்சி ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு உள்ளானதால் மா.செ ரவி தரப்பு மனம் நொந்துவிட்டார் என்கிறார்கள். நிகழ்ச்சி மட்டுமே ரத்து, உதவி செய்வது ரத்து செய்யவில்லை. ரசிகர்களின் குடும்பத்தினருக்கு நேரடியாக சென்று உதவிகள் வழங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மன்றத்தினர்.