Skip to main content

நீதிமன்றத்தில் ஆஜரான ராஜேஷ் தாஸ்..! 

Published on 09/08/2021 | Edited on 09/08/2021

 

Rajesh Das to appear in Villupuram court

 

பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனைப் பெறுவதற்காக ராஜேஷ் தாஸ் இன்று (09.08.2021) விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். 

 

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்டா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, சட்ட ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ் தாஸ் பாதுகாப்பு பணியில் இருந்தார். எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தின்போது பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்.பி. ஒருவருக்கு, ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பெண் எஸ்.பி. புகார் அளித்திருந்தார். இது சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் விசாரிக்கப்பட்டுவந்தது. இந்த விசாரணை தொடர்பாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை, கடந்த 29ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போதே ராஜேஷ் தாஸ் ஆகஸ்ட் 9ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று ராஜேஷ் தாஸ் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜாராகி குற்றப்பத்திரிகையைப் பெற்றுக்கொண்டார். இவர் மீது ஏற்கனவே துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி’ - உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Rajesh Das petition dismissed High Court in action

தமிழக சிறப்பு டி.ஜி.பி. பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பெண் எஸ்.பி.யை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி. அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. அதன் பின்னர் ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த ஆண்டு (16.06.2023)  தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்த தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து ராஜேஸ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (23.04.2024) மீண்டும் நீதிபதி தண்டபானி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஷ்தாஸ் சரணடைய விலக்களிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததுடன் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

Next Story

தலைமறைவான ராஜேஷ் தாஸ்; சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Absentee Rajesh Das; C.B.C.I.D. Action action

தமிழக சிறப்பு டி.ஜி.பி. பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பெண் எஸ்.பி.யை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி. அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. அதன் பின்னர்  ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்த தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து ராஜேஸ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ராஜேஸ் தாஸ் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, “ராஜேஷ் தாஸை கைது செய்ய என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (12.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்குமார், “ராஜேஸ் தாஸை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கடந்த 8 ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ராஜேஸ் தாஸை கைது செய்ய அவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் அங்கு இல்லை. ராஜேஷ் தாஸ் தலைமறைவாக உள்ள நிலையில், அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அவரது பாஸ்போர்ட்டை முடக்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். இதற்குப் பதில் அளிக்க ராஜேஷ் தாஸ் தரப்பில் கால அவகாசம் கேட்ட நிலையில், விசாரணையை வரும் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.