Rajendra Balaji's property case; The Anti-Corruption Department argues in the High Court that a further inquiry is underway

Advertisment

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் அளவுக்குச் சொத்து சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளதாகவும், மேல் விசாரணை நடந்து வருவதாகவும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

ராஜேந்திர பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக 7 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துசேர்த்துள்ளதாகக் கூறி அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி ஹேமலதா அடங்கிய அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி சத்தியநாராயணனும், வழக்குப் பதிவு செய்வதால் எந்தப் பயனும் இல்லை எனக் கூறி நீதிபதி ஹேமலதாவும் தீர்ப்பளித்து வழக்கைத்தள்ளுபடி செய்தனர்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், மூன்றாவது நீதிபதியாக நிர்மல்குமார் முன் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே ராஜேந்திர பாலாஜி தரப்பில் வாதம் முடிவடைந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா தனது வாதத்தை முன் வைத்தார்.

Advertisment

அப்போது அவர், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான புகார் குறித்த ஆரம்பக்கட்ட விசாரணையில், வருமானத்தில் 10 சதவீதத்துக்கும் குறைவாக சொத்து சேர்த்ததாகக் கூறி வழக்கைக் கைவிட முடிவெடுக்கப்பட்டதாகவும், ஆனால், வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் அளவுக்கு ராஜேந்திர பாலாஜி சொத்து சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்தார். வழக்கைக் கைவிடுவதைப் பொறுத்தவரை முழுமையான நீதிமன்ற விசாரணைக்கு பிறகே முடிவு செய்ய முடியும் எனவும், ஆரம்பக்கட்ட விசாரணையை வைத்து முடிவெடுக்க முடியாது எனவும் தெரிவித்த அவர், தற்போது மேல் விசாரணை துவங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இறுதி அறிக்கை தாக்கல் செய்த பிறகும் கூட, மேல் விசாரணை நடத்தலாம் என உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளதாகவும் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இந்த வாதத்திற்குப் பதிலளிக்கவும் எழுத்துப்பூர்வமான வாதத்தைத்தாக்கல் செய்ய ராஜேந்திர பாலாஜி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்ற நீதிபதி நிர்மல்குமார், விசாரணையைச் செப்டம்பர் 8ம் தேதிக்குத்தள்ளிவைத்தார்.