Skip to main content

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை பிரதமர் மோடி ஏன் புகழ்ந்தார்? - ராஜேந்திரபாலாஜியின் விளக்கம்!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Rajendra Balaji explains why PM Modi praised MGR and Jayalalithaa

விருதுநகரில் திமுக அரசைக் கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட  அதிமுக சார்பில், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி,  மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்கள்.   

கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியபோது “கிராமங்களில்கூட போதைப் பொருட்கள் எளிதாகக் கிடைக்கிறது. தமிழகத்தில் போதைக் கலாச்சாரம்  பரவிவிட்டது. கடந்த சில நாள்களுக்குமுன், சென்னையில் இருந்து வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில், ரூ.180 கோடி மதிப்பிலான போதைப்  பொருட்கள் பிடிபட்டுள்ளது. திமுகவைச் சேர்ந்த அயலக அணி அமைப்பாளர் ஜாபர் சாதிக், ரூ.2000 கோடிக்கு மேல் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து போதைப் பொருள்களை இங்கு கொண்டுவந்துள்ளார். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வாழ்க்கையைக் கெடுக்கும் விதமாக போதைப் பொருட்களை விற்பனை செய்துள்ளார். போதைப் பொருட்கள் புழக்கத்தைத் தடுக்கத் தவறிய திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும்வரை போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.  

தமிழ்நாட்டின் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டுமென்றால், வரும் பாராளுமன்றத் தேர்தலில் இரட்டை இலையை வெற்றிபெறச் செய்யவேண்டும். பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தால்தான், தமிழ்நாட்டில் காவிரி பிரச்சனை, பாலாறு முல்லைப் பெரியாறு பிரச்சனைகளைத் தீர்க்கமுடியும்.  விருதுநகர் மாவட்டத்தில் 24  ஏக்கரில்,  ரூபாய் 385 கோடி செலவில், அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்கி காமராஜரின் கனவை நனவாக்கியவர் ஈ.பி.எஸ். அதிமுக கட்சியை ஈ.பி.எஸ். வலுவாக வைத்திருக்கிறார். அதனால்தான், அதிமுகவை அனைத்துக் கட்சிகளும் தேடி வருகிறது.   

தற்போது  திமுக அரசு பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தது. அதுவும் ஈ.பி.எஸ். வற்புறுத்தியதால்தான் தமிழக மக்களுக்குக் கிடைத்தது. பொங்கலுக்கு ரூ.5000 தரவேண்டுமென்று ஈ.பி.எஸ். சொல்லியிருந்தால், ஈ.பி.எஸ்.ஸுக்கு பயந்து ரூ. 5000 கொடுத்திருப்பார்கள். தற்போது ஈ.பி.எஸ். பேசுவதால்தான், தமிழக மக்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கிறது. 

எல்லோருக்கும் உதவும் எண்ணம் இயல்பாகவே வர வேண்டும். அதனால்தான் மறைந்து 36 ஆண்டுகள் ஆகியும் எம்.ஜி.ஆரை தெய்வமாகப் போற்றி வருகிறார்கள். அதனால்தான், பல்லடம் பொதுக்கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி சிறப்பாக இருந்தது  என்று பெருமையாகக் கூறினார். டெல்லியில் ஈ.பி.எஸ். கை ஓங்கினால்தான், தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்கமுடியும்.” என்றார்.   

அதிமுக வாக்குகளைக் கவர்வதற்காக பிரதமர் மோடி எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் புகழ்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் கூறிவரும்  நிலையில், விளக்கம் அளித்திருக்கிறார் ராஜேந்திரபாலாஜி.   

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.