Advertisment

12 மணி நேரமாக கரோனா சடலங்களுக்கு மத்தியில்! -நோயாளிகளை உயிரோடு வதைக்கும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை!

RAJEEV GANDHI HOSPITAL

Advertisment

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உறவினரை அனுமதித்திருக்கும் பெண் ஒருவர் நம்மைத் தொடர்பு கொண்டு பேசினார். “இதைக் கொஞ்சம் எழுதுங்கய்யா, உங்களுக்கு புண்ணியமா போகும்..” என உருக்கமாக கேட்டுக்கொண்டார்.

அவரிடம் பேசினோம். “இங்கே எங்க வூட்டுக்காரரை கரோனா வார்டில் சேர்த்திருக்கோம். 10 நாளுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். காலையிலே நர்சுங்களும், அவ்வப்போது டீனும் வந்து நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களை சொல்வாங்க.. கரோனா வார்டுங்கிறதால அட்டென்டர் யாரையும் உள்ளே அனுமதிக்க மாட்டாங்க. ஆனாலும், நைட் நேரத்தில் சில சமயம் பார்க்க விடுவாங்க.

உள்ளே கரோனா வார்டுல போய், அங்கே இருக்கிற நிலவரத்தைப் பார்த்தாலே, நோய் முற்றி, ‘போய்ச் சேர்ந்துடுவாங்க’ போல, அந்த மாதிரி இருக்கு. நோயாளிகளுக்கு கொடுக்கிற சாப்பாட்டை, ‘பெட்’கிட்ட வச்சிட்டு போயிடறாங்க. கொஞ்சம் திடகாத்திரமாக இருக்கவங்க, அதை எடுத்து சாப்பிட்டுகிறாங்க..

Advertisment

மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு.. எங்க வூட்டுக்காரர மாதிரி ஆட்களால் சாப்பிட முடியாதுய்யா, அதனால.. அந்த சாப்பாடு எல்லாம் வீணா போயி குப்பையிலதான் கொட்டுறாங்க. அதே மாதிரி கபசுர குடிநீர், பழ ஜூஸ் எதுவும் நோயாளிகளுக்கு கொடுக்கிறது கிடையாது. நாங்க வெளியில் இருந்து கொடுத்துவிடுற உணவுப் பொருட்களையும் அவங்க பெட் பக்கத்திலேயே வச்சிட்டு போயிடறாங்க.

RAJEEV GANDHI HOSPITAL

இங்கே இருக்கிற ஆயாக்களுக்கு அவ்வப்போது ரூ.50, ரூ100 கொடுத்து.. கொஞ்சம் பார்த்துக்கங்கன்னு சொல்றோம். அவங்களும் நாங்க பார்த்துக்கிறோம். நாங்களே சாப்பாடு ஊட்டுவோம்னு சொல்றாங்க. ஆனா எதுவும் நடக்கலைங்கய்யா.

இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உள்ளே போய் பார்த்துட்டு வந்தேன்யா. அவருக்கு பக்கத்தில இருக்கிற பெட்ல இருந்தவர், நைட்டே இறந்துட்டார். இப்பவரைக்கும் கிட்டத்தட்ட 12 மணிநேரமா பாடியை அப்புறப்படுத்தலைங்கய்யா. இதனாலயே இவருக்கு (கணவர்) பயத்துலயே லூஸ் மோசன் ஆயிடுச்சு. எங்க வூட்டுக்காரரை பார்க்கும்போது, இன்னொரு பேசன்ட் என்னை கை காட்டி அழைத்தார். கிட்ட போய் விசாரிக்கும்போது, என் பக்கத்துல இருக்கிறவர் இறந்து 4 மணிநேரத்திற்கும் மேலாயிடுச்சு. இன்னும் பாடிய டிஸ்போஸ் பண்ணாம இருக்காங்க என்றார் பயம் கலந்த பீதியுடன்.

நீங்க கொஞ்சம் டாக்டர்கிட்ட சொல்லுங்க என்றார். நான் போய் நர்சம்மாகிட்ட சொன்னேன். அதுக்கு அவங்க, ‘பாடிய ரிமூவ் பண்ணுறதுக்கு சில நடைமுறைகள் இருக்கு’ன்னு சொல்லிட்டாங்க. வார்டுக்கு பின்னாடிதான் மார்ச்சுவரி இருக்கு. 30 அடி தூரத்தில் இருக்கிற மார்ச்சுவரிக்கு பாடியை கொண்டு போய் வைக்கிறதுல்ல என்னய்யா புது நடைமுறை இருக்கு?” என்றார் நம்மிடம்.

அவரே ஆசுவாசப்படுத்திக் கொண்டு சிறிது இடைவெளிவிட்டு தொடர்ந்தார். இந்த கரோனாவுக்கு தடுப்பு மருந்தே கிடையாதாம். இருந்தாலும், முடிந்தவரை சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றி அனுப்புறாங்க. டாக்டர்கள், நர்சுகள் கனிவா பேசினாலே பாதி நோய் குறைஞ்சிடும், மீதி நோய் மருத்துவத்தில் குறையும். ஆனால், இந்த ஆஸ்பிடலில் இது ரெண்டுமே கிடையாதுய்யா.

டீன் தேரணி ராஜன் ரவுண்ட்ஸ் வரும்போது மட்டும் டாக்டர்களும், செவிலியர்களும் அன்பாவும், அனுசரணையாவும் பேசுறாங்கய்யா. மத்த நேரத்தில் அவங்க கிட்ட அன்பையும், அனுசரணையையும் எதிர்பார்க்க முடியாதுய்யா..” என்றார் விரக்தியுடன்.

RAJEEV GANDHI HOSPITAL

சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜனைத் தொடர்புகொண்டோம். எந்தத் தளத்திலிருந்து யார் நமக்கு புகார் அளித்தது என்ற விபரத்தைச் சொன்னபோது, ”24 மணி நேரமும் ஹெல்ப்லைன்ல ஆள் போட்டு வச்சிருக்கோம். கரோனா நோயாளிகள் 820 பேர் இருக்காங்க. இது இல்லாம, நான்-கோவிட் 1000 பேர் அனுமதிக்கப்பட்டிருக்காங்க. எல்லாத்துக்கும் வேலையாட்கள் போட்டிருக்கோம். உயிர கொடுத்து வேலை பார்த்துட்டு இருக்காங்க. இந்த மாதிரி சின்ன(?) விஷயத்த அவங்க ஒரு போன் பண்ணி சொல்லிருந்தா.. உடனே ARM-மை விட்டு க்ளீன் பண்ணிருப்போம். கரோனா வார்டுல.. 12 மணி நேரமா ஒரு பாடிய மார்ச்சுவரிக்கு அனுப்பாம இருக்காங்களா? அப்படி இருக்காதே.. ஒவ்வொரு பாடி டிஸ்போசபிளும் உடனுக்குடனே நடந்திரும். யாராவது டெத் ஆனா.. எவ்வளவு நேரத்துல பாடிய மார்ச்சுவரிக்கு அனுப்புறோம்னு, அந்த ரூட்ல இருக்கவங்க ரிப்போர்ட் அனுப்பிட்டிருக்காங்க. ஏற்கனவே, இது வைரல் ஆனதுனால கான்சியஸா இருக்கேன். உறுதியா நான் விசாரணை பண்ணுறேன். அப்படி நடந்திருந்தா.. நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறேன்.” என்றார் கவனத்துடன்.

கரோனா பாதிப்பால், வென்டிலேட்டர் உதவியுடன் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் நிலையில் உள்ள ஒரு நோயாளி, பக்கத்து படுக்கைகளில், கரோனா மரணத்தால் உயிரற்ற உடல்கள் பல மணி நேரமாகக் கிடப்பதைப் பார்க்கும்போது, அவருக்கு எத்தகைய மரண பீதி ஏற்படும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

hospital Chennai corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe