Skip to main content

12 மணி நேரமாக கரோனா சடலங்களுக்கு மத்தியில்! -நோயாளிகளை உயிரோடு வதைக்கும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை!

Published on 28/09/2020 | Edited on 28/09/2020
RAJEEV GANDHI HOSPITAL

 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உறவினரை அனுமதித்திருக்கும் பெண் ஒருவர் நம்மைத் தொடர்பு கொண்டு பேசினார்.  “இதைக் கொஞ்சம் எழுதுங்கய்யா, உங்களுக்கு புண்ணியமா போகும்..” என உருக்கமாக கேட்டுக்கொண்டார்.

அவரிடம்  பேசினோம். “இங்கே எங்க வூட்டுக்காரரை கரோனா வார்டில் சேர்த்திருக்கோம். 10 நாளுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். காலையிலே நர்சுங்களும், அவ்வப்போது டீனும் வந்து நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களை சொல்வாங்க.. கரோனா வார்டுங்கிறதால அட்டென்டர் யாரையும் உள்ளே அனுமதிக்க மாட்டாங்க. ஆனாலும், நைட் நேரத்தில் சில சமயம் பார்க்க விடுவாங்க.

உள்ளே கரோனா வார்டுல போய்,  அங்கே இருக்கிற நிலவரத்தைப் பார்த்தாலே, நோய் முற்றி, ‘போய்ச் சேர்ந்துடுவாங்க’ போல, அந்த மாதிரி இருக்கு. நோயாளிகளுக்கு கொடுக்கிற சாப்பாட்டை, ‘பெட்’கிட்ட வச்சிட்டு போயிடறாங்க. கொஞ்சம் திடகாத்திரமாக இருக்கவங்க, அதை எடுத்து சாப்பிட்டுகிறாங்க..

மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு..  எங்க வூட்டுக்காரர மாதிரி ஆட்களால் சாப்பிட முடியாதுய்யா, அதனால.. அந்த சாப்பாடு எல்லாம் வீணா போயி குப்பையிலதான் கொட்டுறாங்க. அதே மாதிரி கபசுர குடிநீர், பழ ஜூஸ் எதுவும் நோயாளிகளுக்கு கொடுக்கிறது கிடையாது. நாங்க வெளியில் இருந்து கொடுத்துவிடுற உணவுப் பொருட்களையும் அவங்க பெட் பக்கத்திலேயே வச்சிட்டு போயிடறாங்க.

 

RAJEEV GANDHI HOSPITAL


இங்கே இருக்கிற ஆயாக்களுக்கு அவ்வப்போது ரூ.50, ரூ100 கொடுத்து..  கொஞ்சம் பார்த்துக்கங்கன்னு சொல்றோம். அவங்களும் நாங்க பார்த்துக்கிறோம். நாங்களே சாப்பாடு ஊட்டுவோம்னு சொல்றாங்க. ஆனா எதுவும் நடக்கலைங்கய்யா.

இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உள்ளே போய் பார்த்துட்டு வந்தேன்யா. அவருக்கு பக்கத்தில இருக்கிற பெட்ல இருந்தவர், நைட்டே இறந்துட்டார். இப்பவரைக்கும் கிட்டத்தட்ட 12 மணிநேரமா பாடியை அப்புறப்படுத்தலைங்கய்யா. இதனாலயே இவருக்கு (கணவர்) பயத்துலயே லூஸ் மோசன் ஆயிடுச்சு. எங்க வூட்டுக்காரரை பார்க்கும்போது, இன்னொரு பேசன்ட் என்னை கை காட்டி அழைத்தார். கிட்ட போய் விசாரிக்கும்போது, என் பக்கத்துல இருக்கிறவர் இறந்து 4 மணிநேரத்திற்கும் மேலாயிடுச்சு. இன்னும் பாடிய டிஸ்போஸ் பண்ணாம இருக்காங்க என்றார் பயம் கலந்த பீதியுடன்.

நீங்க கொஞ்சம் டாக்டர்கிட்ட சொல்லுங்க என்றார். நான் போய் நர்சம்மாகிட்ட சொன்னேன். அதுக்கு அவங்க,   ‘பாடிய ரிமூவ் பண்ணுறதுக்கு சில நடைமுறைகள் இருக்கு’ன்னு சொல்லிட்டாங்க. வார்டுக்கு பின்னாடிதான் மார்ச்சுவரி இருக்கு. 30 அடி தூரத்தில் இருக்கிற மார்ச்சுவரிக்கு பாடியை கொண்டு போய் வைக்கிறதுல்ல என்னய்யா புது நடைமுறை இருக்கு?” என்றார் நம்மிடம்.


அவரே ஆசுவாசப்படுத்திக் கொண்டு சிறிது இடைவெளிவிட்டு தொடர்ந்தார். இந்த கரோனாவுக்கு தடுப்பு மருந்தே கிடையாதாம். இருந்தாலும், முடிந்தவரை சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றி அனுப்புறாங்க. டாக்டர்கள், நர்சுகள் கனிவா பேசினாலே பாதி நோய் குறைஞ்சிடும், மீதி நோய் மருத்துவத்தில் குறையும். ஆனால், இந்த ஆஸ்பிடலில் இது ரெண்டுமே கிடையாதுய்யா.

டீன் தேரணி ராஜன் ரவுண்ட்ஸ் வரும்போது மட்டும் டாக்டர்களும், செவிலியர்களும் அன்பாவும், அனுசரணையாவும் பேசுறாங்கய்யா. மத்த நேரத்தில் அவங்க கிட்ட அன்பையும், அனுசரணையையும் எதிர்பார்க்க முடியாதுய்யா..” என்றார் விரக்தியுடன்.

 

RAJEEV GANDHI HOSPITAL


சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜனைத் தொடர்புகொண்டோம். எந்தத் தளத்திலிருந்து யார் நமக்கு புகார் அளித்தது என்ற விபரத்தைச் சொன்னபோது,  ”24 மணி நேரமும் ஹெல்ப்லைன்ல ஆள் போட்டு வச்சிருக்கோம். கரோனா நோயாளிகள் 820 பேர் இருக்காங்க. இது இல்லாம, நான்-கோவிட் 1000 பேர் அனுமதிக்கப்பட்டிருக்காங்க. எல்லாத்துக்கும் வேலையாட்கள் போட்டிருக்கோம். உயிர கொடுத்து வேலை பார்த்துட்டு இருக்காங்க. இந்த மாதிரி சின்ன(?) விஷயத்த அவங்க ஒரு போன் பண்ணி சொல்லிருந்தா.. உடனே ARM-மை விட்டு க்ளீன் பண்ணிருப்போம். கரோனா வார்டுல.. 12 மணி நேரமா ஒரு பாடிய மார்ச்சுவரிக்கு அனுப்பாம இருக்காங்களா? அப்படி இருக்காதே.. ஒவ்வொரு பாடி டிஸ்போசபிளும் உடனுக்குடனே நடந்திரும். யாராவது டெத் ஆனா.. எவ்வளவு நேரத்துல பாடிய மார்ச்சுவரிக்கு அனுப்புறோம்னு, அந்த ரூட்ல இருக்கவங்க ரிப்போர்ட்  அனுப்பிட்டிருக்காங்க. ஏற்கனவே, இது வைரல் ஆனதுனால கான்சியஸா இருக்கேன். உறுதியா நான் விசாரணை பண்ணுறேன். அப்படி நடந்திருந்தா.. நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறேன்.” என்றார் கவனத்துடன்.

கரோனா பாதிப்பால், வென்டிலேட்டர் உதவியுடன் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் நிலையில் உள்ள ஒரு நோயாளி,  பக்கத்து படுக்கைகளில், கரோனா மரணத்தால் உயிரற்ற உடல்கள் பல மணி நேரமாகக் கிடப்பதைப் பார்க்கும்போது,  அவருக்கு எத்தகைய மரண பீதி ஏற்படும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?  

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.