Advertisment

அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு கிராமத்தில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தாயார், மறைந்த ராஜாமணி தங்கபாண்டியனின் உடலுக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி குடும்பத்துடன் நேரில் வந்து, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழச்சி தங்கப்பாண்டியன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அதேபோல,தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதியும் அஞ்சலி செலுத்தினார்.அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தபோது,“நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசுவின் தாயாரும், முத்தமிழறிஞர் கலைஞரின் நெருங்கிய நண்பரான தங்கபாண்டியன் அவர்கள் துணைவியுமான ராஜாமணி அம்மையார் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். அம்மையாரைப் பிரிந்து வாடும் அவர்கள் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தி.மு.க.வின் சார்பாக இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

Rajamani Thangapandian's passes away

Advertisment

இந்நிகழ்ச்சியில், விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மதுரை மாநகரப் பொறுப்பாளர் தளபதி, மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ,மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், எம்.எல்.ஏக்கள் சீனிவாசன், தங்கபாண்டியன், முன்னாள் மதுரை மேயர் குழந்தைவேலு, நக்கீரன் ஆசிரியர், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்ட பலரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க.வினரும் கிராம பொதுமக்களும் தங்கம் தென்னரசு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது தாயார் ராஜாமணி அம்மாள் உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். தற்போது, கணவர் தங்கபாண்டியன் சமாதிக்கு அருகிலேயே, ராஜாமணி அம்மாளின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.