ADVERTISEMENT

அதிக பணம் வசூலிக்கும் ராஜா முத்தையா கல்லூரி!! விரக்தியில் மாணவர்கள்...

10:36 AM Jan 21, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் 42 நாள் அறவழி போராட்டத்தை தமிழக அரசு அலட்சியப்படுத்தியதால், மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் அவதியுற்றனர்.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த 42 நாட்களாக, தமிழகத்தின் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கும் கல்வி கட்டணத்தையே சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவத்தில் தொடர்ந்து அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்களின் போராட்டம் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்த இடையூறும் இல்லாமல் கல்லூரி நேரம் முடிந்தும், உணவு இடைவேளை நேரத்திலும் தொடர்ந்து 42 நாட்களாக நடந்து வந்தது. இவர்களின் போராட்டத்தை தமிழக அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

இதனால் விரக்தி அடைந்த மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் இன்று (21.01.2021) அவசர சிகிச்சை தவிர மற்ற அனைத்து பணிகளையும் தவிர்த்துவிட்டு, பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் ஒன்றுகூடி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மருத்துவக்கல்லூரிக்கு இன்று சிகிச்சைக்கு வந்த புறநோயாளிகள், உள் நோயாளிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு மாணவர் நலனில் செவி சாய்க்காமல் இருக்குமேயானால் வரும் வெள்ளிக்கிழமை முதல் அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட எந்த பணிக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் செல்லாமல், பணியைப் புறக்கணித்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.

மாணவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அனைத்து கட்சிகளின் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த மருத்துவமனையை சுற்றுவட்ட மாவட்ட மக்கள் நம்பி உள்ளனர். எனவே மருத்துவமனையில் மருத்துவர் இல்லாத அவல நிலையை ஏற்படுத்த வேண்டாம் என பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT