
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் கடந்த ஆண்டு சாம்பியனாக இருந்த சீன வீரர் டிங் லீரெனை எதிர்த்து இந்திய செஸ் வீரர் குகேஷ் (வயது 18) விளையாடினார். பரபரப்பான 14 சுற்று ஆட்டத்தில் டிங் லீரெனை வீழ்த்தி குகேஷ் அபாரமாக வெற்றி பெற்றார். அதாவது குகேஷ் தனது 58வது நகர்த்திலில் வெற்றி வாகையை சூடினார். குகேஷ். இதன்மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார்.
இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் கடந்த 17/12/2024 அன்று பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவிற்கு உலக செஸ் சாம்பியன் குகேஷ் திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். நிகழ்வில் தமிழக முதல்வர், விளையாட்டுத் துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், முன்னாள் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் பங்குபெற்றுள்ளனர். சாம்பியன் கோப்பையை முதலமைச்சரிடம் காண்பித்து குகேஷ் வாழ்த்து பெற்றார். தமிழக அரசு சார்பில் குகேஷ்க்கு ஐந்து கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் வெங்கடாசலபதியின் தஞ்சாவூர் ஓவியத்தை பரிசளித்தார். தொடர்ந்து பேசிய ஆளுநர், 'குகேஷால் நாடே பெருமைப்படுகிறது' என பெருமை தெரிவித்தார். இந்த விழாவில் குகேஷின் பெற்றோர் மற்றும் முக்கிய நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.