
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வருடமாக, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த ஏரி, குளங்களை அரசு நிதி ஒதுக்கீட்டில் அந்தந்த ஏரி பாசன விவசாயிகளே சீரமைத்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளது அரசு. ஆனால் பெயரளவுக்கே பாசனதாரர்கள் பணியை செய்வதாக அறிவித்துவிட்டு அந்தந்தந்தப் பகுதி அதிமுகவினரே குடிமராமத்துப் பணியைச் செய்துள்ளனர். இதனால், முழுமையாக சீரமைக்கப்படாமல் பல ஏரி, குளங்களுக்கு பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. பாசனதாரர்கள் செய்த பணிகளுக்கும் இன்னும் 50% தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுகா அரிமளம் ஒன்றியம் ஏம்பல் ஊராட்சியில் உள்ள பரயன்காடு கிராமத்தில் உள்ள கண்மாய், சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தக்காரர் குமார் மூலம் சீரமைக்கப்பட்டது. இந்த குடிமராமத்துப் பணியில் பாசனத்திற்காக உள்ள 3 மடைகளில் தண்ணீர் அதிகரிக்கும் போது அதனை வெளியேற்ற ஒரு சறுக்கையும் சீர் செய்ய வேண்டும் என உத்தரவில் இருந்தாலும் பணம் வரவில்லை என்று அரைகுறையாகப் பணிகளை முடித்துவிட்டனர்.

அரைகுறை பணியால் மதகு உடையும் அபாயம் உள்ளதாக அக்கிராம மக்கள் மாவட்ட நிர்வாகம் வரை கொண்டுசென்றதுடன், உடையும் நிலையில் இருந்த மடையை மணல் மூட்டை கொண்டு சரி செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது பெய்த தொடர் கனமழையால் சுமார் 63 ஏக்கர் பரப்பளவுள்ள கண்மாய் நிறைந்திருந்தது.
இந்த போகம் பாதிக்கப்பட்டாலும் அடுத்த சாகுபடியைச் செய்துவிடலாம் என்று விவசாயிகள் மகிழ்ந்திருந்தனர். ஆனால், நேற்று இரவு திடீரென சறுக்கை உடைந்து சுமார் 3 அடி அளவிற்குத் தண்ணீர் வெளியேறிவிட்டது. இதனையறிந்த கிராம மக்கள் மணல் மூட்டைகளை வைத்து உடைப்பை தற்காலிகமாக அடைத்துள்ளனர்.
கண்மாய் உடைந்ததா? அல்லது நீர்ப்பிடி ஆக்கிரமிப்பாளர்களால் உடைக்கப்பட்டதா? என்ற கேள்வி விவசாயிகளிடம் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை ஊர்க் கூட்டத்திற்கும் தயாராகி வருகிறார்கள் கிராம மக்கள். அப்படி ஒருவேளை ஆக்கிரமிப்பாளர்களால் உடைக்கப்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.