



சென்னையில் தொடர்ந்து மழை பொழிந்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங்கில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனிடையே ரிப்பன் பில்டிங்கிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர் மழை காரணமாக நீர் தேங்கியுள்ளது. ஆவடி, கொளத்தூர், டி.நகர், கோடம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பிரதான சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி சாலையில் தண்ணீர் புகுந்துள்ளது. இன்று காலை முதலே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பல்வேறு இடங்களில் நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். நிவாரண உதவிகளையும் செய்து வந்தார். தற்பொழுது கனமழை தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
மூத்த அதிகாரிகளுடன் சென்னை மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் முதல் தளத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்காக முதல்வர் வந்த நிலையில் மாநகராட்சி அலுவலகத்தைச் சுற்றி நீர் தேங்கி வாகனங்கள் சிக்கியிருந்தது. நீர் தேங்கியதால் மாநகராட்சியில் பணிக்கு வருவோர் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.