Skip to main content

தனியார் மனைகளில் தேங்கிய மழை நீர்! நடவடிக்கை எடுத்த மாநகராட்சி!

Published on 29/10/2021 | Edited on 29/10/2021

 

Rainwater stagnant in private lands! Action taken!

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், திருச்சி மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்குவதால் ஆங்காங்கே டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. கடந்த சில மாதங்களாக குறைந்துவந்த டெங்கு பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜீபுர் ரஹ்மான் உத்தரவின்பேரில் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.

 

அதன்படி, தற்போது மாநகராட்சி பகுதிக்குள் தனியாருக்கு சொந்தமான 37 காலி மனைகளில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் விதமாக மழை நீர் தேங்கியிருப்பதை சுகாதார அதிகாரிகள் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து, அக்காலி மனைகளின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், ‘தேங்கி நிற்கும் மழை நீரை 24 மணி நேரத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும். இனி வருங்காலத்தில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்குரிய தக்க நடவடிக்கைகளை உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில் பொது சுகாதார விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

அதேசமயம் மாநகராட்சி சார்பில், மழை நீர் தேங்கி நிற்கும் இடங்களில் கொசு புழுக்களை அழிக்கும் மருந்து தெளிக்கப்பட்டுவருகிறது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளில் இந்த ஆண்டில் மட்டும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது: ஜனவரி மாதம் 13, பிப்ரவரி மாதம் 30, மார்ச் மாதம் 30, ஏப்ரல் மாதம் 9, மே மாதம் 3, ஜூன் மாதம் 15, ஆகஸ்ட் மாதம் 8, செப்டம்பர் மாதம் 24, அக்டோபர் மாதம் 36 பேர் என இதுவரை 160 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்