RAINS AND CYCLONE TAMILNADU CM ANNOUNCED FUND

Advertisment

புயல், மழையால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புரெவி' புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இப்புயல் மற்றும் கனமழை காரணமாக 37 பசு மாடுகள், 4 எருமை மாடுகள், 28 கன்றுகள் மற்றும் 123 ஆடுகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30,000 ரூபாயும், எருமைஒன்றுக்கு 25,000 ரூபாயும், கன்று ஒன்றுக்கு 16,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Advertisment

'புரெவி' புயல் காரணமாக 75 குடிசை வீடுகள் முழுமையாகவும், 1,725 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மேலும், 8 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 410 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

கடலூர் மாவட்டத்தில் அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், காமராஜ், எம்.சி.சம்பத், நாகப்பட்டினம், மயிலாடுதுறைக்கு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கே.ஏ.செங்கோட்டையன், பி.பெஞ்சமின், சென்னை மாவட்டத்தில் டி.ஜெயக்குமார், கே.பாண்டியராஜனும் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன்.

பொதுப்பணித்துறை அலுவலர்கள் அனைத்து நீர் நிலைகளையும் தொடர்ந்து கண்காணித்து, கரைகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.

Advertisment

‘நிவர்' மற்றும் 'புரெவி' புயல் மற்றும் கனமழையினால் பாதிப்படைந்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, இயல்பு நிலைக்கு கொண்டு வர அமைச்சர் பெருமக்களும், அதிகாரிகளும், அனைத்துத் துறை பணியாளர்களும் துரிதமாக பணியாற்ற நான் உத்தரவிட்டுள்ளேன்" இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.